கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் (சுனாமி வீட்டுத்திட்டம்) உள்ள வடிகான்கள் மண் மற்றும் குப்பைகளால் நிரம்பி வழிந்து காணப்படுகிறது.
கடந்த 2004 ஆம் ஆண்டு சுனாமி பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெளிநாட்டு நிதி மூலம் வடிவைமைக்கப்பட்ட பொலிவேரியன் கிராமமானது பல்வேறு குறைபாடுகளுடன் காணப்படுவதாகவும் அவற்றை அரசியல் தலைவர்கள், அரசாங்க அதிகாரிகள் கண்டும்காணாமல் இருப்பதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
வடிகான்கள் இதுவரை துப்பரவு செய்யப்படாமல் மண், கல், குப்பைகளால் நிரம்பியிருப்பதால் நீர் வடிந்தோட முடியாமல் தேங்கி நிற்பதால் நுளம்பு தொல்லை அதிகரித்து இருப்பதாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும் இதே பிரதேசத்தில் அமைந்துள்ள சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் கூட நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த பிரதேசவாசிகள், உடைந்து பல வருடங்களாகியும் வீதியின் நடுவே உடைந்து காணப்படும் வடிகானின் மூடியை கூட இன்னும் சரியாக திருத்தியமைக்கப்பட வில்லை. அதனால் பல வாகன விபத்து ஏற்பட்டுள்ளதுடன், இப்பிரதேசத்தில் வசிக்கும் சிறுவர்களும் அடிக்கடி உபாதைக்குள்ளாகின்றனர்.
கல்முனை மாநகர சபை முதல்வர், உறுப்பினர்கள், சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து எங்களின் நீண்ட கால பிரச்சினைகளை தீர்த்துவைக்க முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.