கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தில் ஹரிஸ் எம்.பி எதிர்க்கட்சியில் இருந்து சாதிக்கின்றார் என்றால் ஆளுங்கட்சியில் நீங்கள் எதற்கு…?

கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தில் ஹரிஸ் எம்.பி எதிர்க்கட்சியில் இருந்து சாதிக்கின்றார் என்றால் ஆளுங்கட்சியின் பங்காளிகளாக இருந்துகொண்டு உங்களால் செய்ய முடியாது என்றால் நீங்கள் ஆளுங்கட்சியில் எந்த இடத்தில் வைத்துப் பார்க்கப்படுகின்றீர்கள். ஆட்சிக்குவந்து மூன்றே நாட்களில் கல்முனை வடக்குகப் பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தித் தருவதாகச் சொல்லியிருந்தார்கள், ஆனால் இன்று எத்தனை நாட்கள் போய்விட்டது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

 
கடந்த ஆட்சியில் நாங்கள் எதிர்க்கட்சியில் இருந்தோம், ஹரிஸ் எம்.பி ஆளுங்கட்சியின் பிரதியமைச்சராக இருந்து முட்டுக்கட்டை போட்டார். ஆனால் இப்போது அவர் எதிர்க்கட்சியில் தான் இருக்கின்றார். ஆனால், ஆளுங்கட்சியில் இருக்கும் நம் தம்பிமார் இன்னும் அவரைச் சொல்லி மக்களைப் பேய்க்காட்டக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
 
கல்முனை வடக்குப் பிரதேச செயலக தரமுயர்த்தல் விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தல் விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முற்றுமுழுதாகச் செயற்பட்டது. ஆனாலும் அது நடக்க முடியாமல் போனது உண்மைதானே தவிர அதற்கு நாங்கள் ஒருபோதும் தடையாக இருக்கவில்லை.
 
அப்படிப் பாத்தால் ஆட்சிக்கு வந்து மூன்றே நாட்களில் கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தித் தருவேன் என்று தம்பி வியாழேந்திரன் சொல்லியிருந்தார். ஆனால் இன்று எத்தனை நாட்கள் போய்விட்டது.
 
நாங்களாவது அன்று எதிர்க்கடட்சியில் இருந்து ஏதோவொருவகையில் உடன்பாட்டுடன் சில சில விடயங்களைச் செய்திருந்தோம். கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் தரமுயர்த்த முடியாமற் போனதென்பது துரதிஸ்டம்.
 
ஆனால், ஆளுங்கட்சியில் பங்காளிகளாக இருக்கின்றோம், நாங்கள் சொல்லுகின்ற விடயங்களை எல்லாம் அரசாங்கத்திலுள்ளவர்கள் செய்வார்கள், அரசியற் கைதிகளையெல்லாம் விடுதலை செய்து தருவோம் என்றெல்லாம் வாய் கிழிய பேசிய வார்த்தைகளை மக்கள் மறக்கவில்லை. எனவே நாங்கள் தடையாக இருந்தோம் என மக்களிடம் பொய்களைச் சொல்லி பொய்கள் மூலமாக அரசியல் செய்வது நிலைக்காது. கடந்த காலங்களில் இந்தப் பொய்களுக்குரிய பாடம் புகட்டப்பட்டது. ஆனால் தேர்தல் மோசடி மூலமாக வெற்றி பெற்றனர்.
 
நாங்கள் தமிழ் மக்கள் சார்ந்த விடயங்களில் அன்றும் இன்றும் என்றும் எப்போதும் உறுதியாக இருக்கின்றோம்.
 
கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தில் இப்போதும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் அவர்கள் தடையாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அன்று நல்லாட்சியில் ஹரிஸ் அவர்கள் ஆளுந்தரப்பில் ஒரு பிரதி அமைச்சராக இருந்தவர். அவர்களின் கட்சியிலுள்ளவர்களெல்லாம் அமைச்சர்களாக இருந்தவர்கள் அதனால் தடைகள் பலவற்றைப் போட்டிருக்கலாம். ஆனால் இப்போது ஆளுங்கட்சியின் பங்காளிகளாக மட்டக்களப்பில் இருவர் இருக்கின்றாhர்கள். ஹரிஸ் எம்.பி இப்போது எதிரணியில் இருக்கின்றார். ஹரிஸ் எம்.பி எதிர்க்கட்சியில் இருந்து சாதிக்கின்றார். ஆளுங்கட்சியின் பங்காளிகளாக இருந்துகொண்டு உங்களால் செய்ய முடியாது என்றால் ஆளுங்கட்சியில் நீங்கள் எந்த இடத்தில் வைத்துப் பார்க்கப்படுகின்றீர்கள் என்ற விடயத்தைச் சிந்திக்க வேண்டும்.
 
நல்லாட்சியில் ஆளுந்தரப்பில் இருந்து அவர் முட்டுக்கட்டை போட்டார் என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால் இன்று அரசாங்கத்தின் பக்கமாக இருவர் இருக்கின்றீர்கள். இருந்து விட்டு ஹரிஸ் எம்.பி இப்போதும் தடையாக இருக்கின்றார் என்ற நீங்கள் சொன்னால் ஹரீசின் அரசியல் என்ன உங்களின் அரசியல் என்ன. எனவே இவையெல்லாம் மக்களின் காதுகளில் பூச்சுத்துகின்ற கருத்துகளாகவே இருக்க முடியும் என்று தெரிவித்தார்.

Related posts