மட்டக்களப்பு களுதாவளை சுயம்பு லிங்கப் பிள்ளையார் ஆலய முன்றலில் எதிர்வரும் நவம்பர் 19,20,21,22 ஆகிய தினங்களில் ‘ஸ்ரீ ஏகாதச ருத்திர வேள்வி’ எனும் சிவ பூஜை ஒன்று இடம்பெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் திட்டமிட்டவாறு நடந்தேறி வருகின்றது.
இந்த யாக வேள்வியானது உலக நன்மைக்காகவும், ஈழ வள நாட்டின் சுபீட்சத்திற்காகவும், இலங்கைத் திருநாடு மீண்டும் சிவபூமியாக செல்வபூமியாக திகழவும் வேண்டி நடாத்தப்படுகின்றது.
இலங்கையிலும் இந்தியாவிலும் உள்ள தலைசிறந்த 108 சதுர்வேத பண்டிதர்களின் கோஷம் ஒலிக்க, தென்னிந்தியாவின் 108 ஓதுவார்களின் தமிழ்த்திருமுறை பாராயணம் ஒலிக்க, தலைசிறந்த நாதஸ்வர தவில் வித்துவான்கள் சிவ வாத்தியமான கைலாய சிவ பூதகண வாத்திய இசை இசைக்க, கலைமாமணி டாக்டர்.நித்தியஸ்ரீ மகாதேவன் சாமகானம் ஒலிக்க இந்த 4 நாட்களும் 6 காலம் இவ்வேள்வியானது நடைபெறவுள்ளது.
தலைசிறந்த சித்த வைத்தியர்களைக் கொண்டு, முறையாக காப்புக்கட்டி சாப நிவர்த்தி செய்து பெறப்பட்ட ஒரு இலட்சம் சஞ்சீவினி மூலிகைகள் இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்டு ஒரு இலட்சம் மஹா மிருத்யஞ்சய ஜெபத்துடன் இந்த யாகம் நடைபெறவுள்ளது.
21 ந் திகதி காலை 7.00 மணிக்கு பார்த்திப லிங்க பூஜை ஒன்றும் இடம்பெறவுள்ளது. இதில் மணலிலே1,008 சிவலிங்கங்கள் செய்து வழிபாடு நடைபெறவுள்ளது. இந்த பூஜையைச் செய்பவர்கள் மாபெரும் குபேர சம்பத்துக்களையும் அனைத்து வல்லமைகளையும் பெறுவார்கள் எனச் சொல்லப்படுகிறது. இப்பூஜையில்; உரிய ஆச்சாரத்துடன் வருகின்ற அனைவரும் கலந்துகொள்ளமுடியும்.
சிவனடியார்களால் பூஜிக்கப்பட்டு நேபாளத்தில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ள ஒரு இலட்சம் ருத்ராட்ச மணிகளைக் கொண்டு கட்டப்பட்ட மாலையானது சிவனின் மஹா பிரசாதமாக அடியார்களுக்கு வழங்கப்படவும் உள்ளது.
இந்த யாக வேள்வியினை முன்னிட்டு 16ந் திகதி தொடக்கம் அன்னதானம் வழங்குவதற்கு களுதாவளை சுயம்பு லிங்கப் பிள்ளையார் ஆலய நிருவாக சபையினர் தயாராகி வருகின்றனர். சுமார் 10 இலட்சம்அடியார்களை எதிர்பார்த்து இவ்வொழுங்கினை நிருவாக சபையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் அடியார்களின் நலன் கருதி விசேட போக்குவரத்து, குடிநீர், சுகாதாரம் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதற்கான ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்துடன் யாகசாலை உரியமுறையில் அமைக்கப்பட்டு பூர்வாங்க கிரிகைகளும் நடந்தேறிவருகின்றன