ஓ.எம்.பி அலுவலகத்தின் இடைக்கால அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த விரைவில் அமைச்சரவை உப குழுவொன்றை அமைக்க உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு உதவிகளை வழங்கும் சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடிய போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை கூறினார்.
ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, சர்வதேச நாணய நிதியம், சர்வதேச அபிவிருதிக்கான ஐக்கிய அமெரிக்க உதவி நிறுவனம், கொரிய சர்வதேச ஒத்துழைப்புக்கான நிறுவனம் ஆகிய முக்கிய சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகள் (புதன்கிழமை) ஜனாதிபதியை சந்தித்தனர்.
நீண்டகாலமாக இலங்கையின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களுக்கு இந்த சர்வதேச நிதி நிறுவனங்கள் வழங்கிவரும் உதவிகளை ஜனாதிபதி இதன்போது பாராட்டியுள்ளார்.
எதிர்காலத்தில் மிகவும் விரிவான பல்வேறு துறைகளினூடாக இந்த ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
மேலும், நாட்டின் ஒன்பது மாகாணங்களிலும் சமமான அபிவிருத்தியை முன்னெடுத்து அனைத்து மக்களுக்கும் அபிவிருத்தியின் பெறுபேறுகளை கிடைக்கச் செய்வது தனது நோக்கம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அத்துடன், யுத்தம் காரணமாக அழிவுக்குள்ளான வடக்கு, கிழக்கு பிரதேசங்களை அபிவிருத்தி செய்து அந்த மக்களுக்கு அபிவிருத்தி உரிமையை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
எனவே அந்த மக்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித் திட்டங்களுக்கு தொடர்ந்தும் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனங்களின் உதவியை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் 88 சதவீதம் நிறைவு செய்யப்பட்டுள்ளது எனவும் எஞ்சியுள்ள 12 வீதத்தையும் துரிதமாக நிறைவு செய்ய எதிர்பார்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு இளைஞர் யுவதிகளின் தொழில்வாய்ப்பின்மை தொடர்பான பிரச்சினைக்கு தீர்வுகளை கண்டறிவதற்கும் போதைப்பொருள் பிரச்சினையை கட்டுப்படுத்துவதற்கும் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்களை முன்னெடுத்துள்ளாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
காணாமல் போனவர்களை கண்டறிவதற்கு ஸ்தாபிக்கப்பட்டுள்ள அலுவலகத்தின் இடைக்கால அறிக்கை தனக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அந்த அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காக விரைவில் அமைச்சரவை உப குழுவொன்றை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறினார்.
காணாமல் போனவர்களின் குடும்ப உறவினர்களின் நலன் பேணலுக்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித் திட்டங்களுக்கு உதவி வழங்குமாறும் ஜனாதிபதி சர்வதேச பிரதிநிதிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.