காலநிலையில் எற்படக்கூடிய மாற்றங்கள் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதற்கமைய எதிர்வரும் சில நாட்களில் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
இந்நிலையில், இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும் வரலாற்றில் முதல் முறையாக அதிகளவான காற்று மாசடைவை கடந்த சில நாட்களில் நாட்டில் அவதானிக்க முடிந்ததாக கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் எம்.டீ.எம். மஹீஸ் தெரிவித்திருந்தார்.இதன் காரணமாக,நாட்டின் முக்கிய நகரங்களின் காற்று தரச்சுட்டெண்ணில் நாளுக்கு நாள் மாற்றங்கள் ஏற்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காற்று தரச்சுட்டெணில் ஏற்படும் மாற்றம் சுவாச கோளாறுகளை கொண்ட மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.