காலை கடல் புகுந்தது.

அம்பாறை மாவட்டத்தின் கரையோரத்திலுள்ள காரைதீவுக்கிராமத்திற்குள் (19)செவ்வாய்க்கிழமை காலை கடல் புகுந்தது.

கடல் சுமார் 150மீற்றர் தூரம் ஊருக்குள் பிரவேசித்து பின் பின்வாங்கியது.கடல்அலைகள் இவ்வாறு திடிரென ஊருக்குள் புகுந்ததனால் மக்கள் அச்சத்திற்குள்ளாகினர். குறிப்பாக காரைதீவு பத்திரகாளியம்பாள் ஆலய பிரதேசத்தில் கடல் மிகவும் கூடுதலாக உள்புகுந்துள்ளது.
 

கடலோரவீதியையும் தாண்டி பழைய பத்ரகாளி அம்பாள் ஆலய வளாகத்துள் கடல்நீர் புகுந்து தேங்கியுள்ளது. அதேபோல் அப்பிரதேசத்திலுள்ள பல தாழ்பகுதிகளில் கடல்நீர் வெள்ளம்போல் தேங்கிநின்று காட்சியளிக்கின்றது.

தோணிகள் உள்ளிட்ட சில கடற்கலங்கள் சேதத்திற்குள்ளாகியுள்ளன. அதேவேளை பல தோணிகள் கடற்கலங்கள் யாவும் பல மீற்றர்களுக்கு அப்பால் இழுத்துக்கட்டப்பட்டிருக்கின்றன.

நிலைமையை நேரில் கண்டறிய காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் மற்றும்  உறுப்பினர்களான த.மோகனதாஸ் மு.காண்டீபன் ஆகியோருடன்  அப்பகுதிக்கு விஜயம்செய்து பார்வையிட்டார்.

காரைதீவு பிரதேசசபையின் 27வது அமர்வு இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை இச்சம்பவம் பற்றியறிந்ததும் மிகவிரைவாக அமர்வை முடித்துவிட்டு கடற்கரைக்கு இக்குழுவினர் விரைந்தனர். சேதவிபரத்தை பார்வையிட்டனர்.
 

இதேவேளை கடல் சீற்றத்தால் அலைகள் 10அடி உயரத்திற்கு எழுந்து ஆர்ப்பரித்துக்கொண்டிருக்கிறது. பார்ப்பவர்மனதில் பயங்கரமாகக்காட்சியளிக்கிறது. நிலமட்டத்தைவிட உயரமாகத் தென்படுகிறது.இருப்பினும் கடல் தற்போது தனது 65 கடலோரப்பாதுகாப்பு வலயத்துள் 50மீற்றரை உள்வாங்கியுள்ளது. அதாவது கடல் கடற்கரையின் பெரும்பகுதியை ஆக்கிரமித்து உள்வாங்கியுள்ளது.

வங்காளவிரிகுடாவில் உருவாகியுள்ள ‘அம்பான்’; தாழமுக்கம் காரணமாக கடந்த சிலதினங்களாக அம்பாறை கரையோரப்பிரதேசத்தில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளமை தெரிந்ததே.
கடந்த 4தினங்களாக வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது. வழமையான காற்றுகூட வீசவில்லை. அதேவேளை நேற்றுநள்ளிரவு  கடல் மிகவும் சீற்றமாக காணப்பட்டது.காற்றும் சற்று வேகமாக வீசியது.
இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்லமுடியவில்லை. தோணிகள் யாவும் கரையில் இழுத்துக்கட்டப்பட்டுள்ளன. கடல்மீன்களுக்கு இப்பகுதியில் தட்டுப்பாடு நிலவுகிறது.மீனவர்கள் வாழ்வாதாரமிழந்து வாடுகிறார்கள்.

Related posts