கிழக்கு மாகாணத்தில் நிலவும் அதிக வெப்பத்திலிருந்து, உங்களையும், சிறுவர்களையும் குழந்தைகளையும் காத்துக்கொள்ள வேண்டுமென களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் குணசிங்கம் -சுகுணன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் தற்போது நிலவும் அதிக வெப்பத்தினால் பொதுமக்களுக்கும், குழந்தைகளுக்கும் ஏற்படும் பாதிப்பிலிருந்து எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென அவரிடம் செவ்வாய்க்கிழமை(17.7.2018) கேட்டபோதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்:- தற்போது கோடைகால வெப்பம் கொளுந்துவிட்டு எரிகின்றது. வெப்பத்தின் தாக்கம் ஒருபுறம். நோய்கிரிமித்தாக்கம் மறுபுறம் வாட்டியெடுத்துவிடுகின்றது. வெப்பத்தினால் அதிக நீரிழப்பு, கனியுப்பு இழப்பென வியர்வையால் வடிந்து விடுவதினால் உடல் வெப்பநிலையுடன் தேகம் வரண்டு உடற்தொழிற்பாடுகள் ஸ்தம்பித்து விடுகின்றது.
இவ்வெப்பத்திலிருந்து 5 வயதுக்கு குறைந்த சிறுவர்கள்,குழந்தைகள்,65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், கற்பிணித்தாய்மார்கள், இதய நோயுடையவர்கள், நீரிழிவு நோயுள்ளவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றார்கள். இதனால் வைரஸ் கிரிமித்தாக்கம் அதிகமாக காணப்படுவதோடு தடுமல், இருமல், காய்ச்சல், காய்ச்சல் போன்ற வந்ததும் சின்னம்மை, செங்கமாரி, போன்றவையும் இலகுவாக ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்நோய்த்தாக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ளவேண்டுமாயின் வெயிலில் திரிவதை தடுப்பதோடு அவற்றை குறைத்துக் கொள்ளவேண்டும். குடை, தொப்பிகளை பாவித்தும் வென்நிற பருத்தி ஆடைகளை தளர்வாக அணிந்தும்; உடற்பயிற்சி, கடினவேலை நிறுத்தியும், அதிகளவான நீர், இளநீர், எலுமிச்சை பழச்சாறுகளை மூன்று லீட்டர் தொடக்கம் ஐந்து லீட்டர் வரை தினமும் குடிக்க வேண்டும்.