*உயர்தரம் கற்ற 2000 பேருக்குஉதவி ஆசிரியர் நியமனம்
*800 தொண்டர், 600 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நிரந்தரம்
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 800 தொண்டர் ஆசிரியர்களை நிரந்தர ஆசிரியர்களாகவும், க.பொ.உயர்தரம் படித்த 2000 பேரை உதவி ஆசிரியர்களாகவும், 600 பட்டதாரிகளுக்கு நிரந்தர ஆசிரியர்களாகவும் இணைத்து கிழக்கு மாகாணத்தின் பாடரீதியான ஆசிரியர் வெற்றிடத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் பத்து இலட்சம் காணி உறுதிப்பத்திரம் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை (23) நடைபெற்றது. இந்நிகழ்வில் விஷேட அதிதியாக கலந்து கொண்டு பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார். -கிழக்கு மாகாணத்தில் மிக நீண்ட காலமாக தொண்டர் ஆசிரியர் பிரச்சினை நிலவிக் கொண்டிருக்கின்றது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக மிகவிரைவில் 800 தொண்டர் ஆசிரியர்களை நிரந்தர நியமனம் வழங்கி அவர்களை சேவையில் இணைக்கவுள்ளோம். இதேபோன்று க.பொ.த. உயர்தரம் படித்த 2000 பேரை உதவி ஆசிரியர்களாகவும், பட்டதாரிகள் 600 பேரை நிரந்தர ஆசிரியர்களாகவும் நேர்முகப் பரீட்சை நடாத்தி நியமனம் வழங்குவதற்கு அமைச்சரவை மற்றும் கல்வி அமைச்சுக்கு அனுமதி கிடைத்துள்ளது. இதேபோன்று மட்டக்களப்பு மேற்கு கல்விவலயம், கல்குடா, பொத்துவில், கோமரங்கடவ, கந்தளாய், ஸ்ரீபுர போன்ற கல்வி வலயங்களின் ஆசிரியர் பற்றாக்குறையை தீர்த்து வைக்கவுள்ளோம்.
கிழக்கில் உள்ள மாநகர சபை, நகர சபை மக்களின் காணி உறுதிப்பத்திரப் பிரச்சினையை ஆராய்ந்து காணிப் பத்திரத்துக்கு விண்ணப்பித்திருந்த 20,000 பேருக்கு மிக விரைவில் காணி உறுதிப்பத்திரம் வழங்கப்படவுள்ளது என்றும் ஹிஸ்புல்லாஹ் மேலும் தெரிவித்தார்.