கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி த.சிவநாதன்
தமிழ்த் தலைமைகள் ஒரு குழப்பகரமான நிலையிலிருப்பதனால் இவர்களைத்தான் ஆதரிக்க வேண்டும் என்று இற்றைவரை உறுதியாக கூறாது மெளனம் சாதித்துக்கொண்டிருக்கின்றார்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எதை தமிழ் மக்களுக்கு சொல்வதென்று புரியாத நிலையிலே பரிதவிக்கின்றனர் என கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் தலைவர் சட்டத்தரணி த.சிவநாதன் தெரிவித்தார்.
கல்லடி கிறீன் கார்டன் ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தொடர்ந்து தெரிவிக்கையில்,
தமிழ் மக்கள், உரிமை ஆணை கொடுத்து பாராளுமன்றம் அனுப்பியும் இற்றைவரை எதையும் செய்ய முடியாமைக்கு நியாயமான காரணங்கள் இன்றி, தமிழ்மக்களிடம் எவ்வாறு முகம் கொடுப்பது என்ற நிலையிலேயே கூட்டமைப்பினர் இருந்து வருகின்றனர். கடந்த கால கசப்பான அனுபவங்கள் தமிழ் மக்களின் மனங்களில் இருப்பதனால் இவர்களைத்தான் ஆதரிக்கிறோம், இவர்களுக்கு வாக்களியுங்கள் என்று கூட்டமைப்பு சொன்னாலும்
தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்வதாக இல்லை.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளினால் வென்றவர்கள் கையை விரித்ததனால் புலம்பிக்கொண்டு நாங்கள் அரசினால் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்று சிறுபிள்ளைத்தனமாக கூறுவதெல்லாம் தலைமையின் தலைமைத்துவமின்மையினை காட்டுகின்றது.
எங்களுடைய உரிமை சார்ந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமானால் தெற்கு சிங்கள மக்கள் மத்தியிலே எங்களது நியாயமான பிரச்சினைகள் விளங்கப்படுத்தப்பட்டு அவர்களால் புரிந்துகொள்ளப்பட வேண்டும். இலங்கையிலே இருக்கக்கூடிய அனைத்து சிங்கள பெரும்பான்மையின கட்சிகளின் ஒருமித்த கருத்திலே எங்களது பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதிலே இதய சுத்தியுடன் செயற்பட வேண்டும்.
கல்முனை வடக்கு உப பிரதேச செயலக விவகாரத்தில் தன்னைக்கேட்காது தரமுயர்த்தப்படுமாக இருந்தால் இனங்களுக்கிடையே பாரிய இனமுறுகல் ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் உள்ளதென்றும் தரமுயர்த்தல் தேவையில்லை என்றும் சகோதர இனத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் மிகவும் பாடுபடுகின்றார். ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் சகோதர இனத்தவர்களுடன் பிட்டும் தேங்காய்ப்பூவும் போலவே ஒன்றுமையுடன் வாழ்ந்து நிறைவான விட்டுக்கொடுப்புகளுடன் ஐக்கியமாக வாழ்வதற்காக, தொடர்ந்தும் முயற்சித்துக்கொண்டிருக்கின்றோ ம். ஆனால் அவர்கள் சிறிய விடயத்துக்கு கூட எங்களுக்கு விட்டுக்கொடுப்பை செய்வதற்கு மிகவும் பஞ்சப்படுகின்றனர். இவ்வாறு அமைச்சர் மட்டத்திலேயே மனநிலை இருக்கும்போது சாதாரண சகோதர மக்களிடம் எவ்வாறு இதை எதிர்பார்ப்பது. இவ்வாறான மனநிலையில் கிழக்கு மாகாணத்திலேயுள்ள இனங்கள் புரிந்துணர்வுடன் சுமூகமாக பிட்டும் தேங்காய்ப்பூவும் போல எவ்வாறு வாழ்வது. ஆக இந்த விடயங்களை கீழ்மட்ட மக்கள் தொடக்கம் உயர்மட்டபுத்திஜீவிகள் வரை இதை புரியாத வரையில் எங்களிடத்தே இன நல்லிணக்கம் என்பது பேச்சளவிலேயே இருக்க முடியுமே தவிர செயல்வடிவம் பெற முடியாது.
எங்களுடைய தமிழ் மக்களுக்கு என்ன நன்மையான விடயங்கள் கிடைக்குமோ அவற்றையெல்லாம் வாக்களிப்புக்கு முன்னதாக பேசி பெற்றுக்கொண்டு, தகுதியான வேட்பாளரை தெரிவுசெய்வது புத்திசாலித்தனமானது என ஒன்றியம் கருதுகிறது.
இலங்கை மக்கள் மட்டும் அளிக்கப்படும் வாக்குகள் ஜனாதிபதியை தீர்மானிப்பதில்லை. தேர்தலில் சர்வதேச சக்திகளும் செல்வாக்கு செலுத்துகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த வெளிப்படை. சர்வதேசத்திலே இருக்கக்கூடிய பிராந்திய வல்லரசுகள், பிராந்தியத்திலே வல்லமை பொருந்திய நாடுகள் ஒன்றின் அனுசரணையில்தான் இலங்கையில் ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப்படுவார் என்பது மிகையாகாது. அவ்வாறு தெரிவுசெய்யப்படுகின்ற ஜனாதிபதிக்கு எந்த நாடுகள் பின்னணியில் இருக்கின்றதோ அவர்களுடன் தமிழ்மக்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, தமிழ்மக்களின் நியாயமான பிரச்சினைக்கு ,தாங்கள் என்ன தீர்வு தரப்போகின்றீர்கள் என்று கேட்டுப் பெற்றுக்கொள்வது புத்திசாலித்தனமாகும்.
எங்களுடைய தமிழ் மக்களுக்கு என்ன நன்மையான விடயங்கள் கிடைக்குமோ அவற்றையெல்லாம் வாக்களிப்புக்கு முன்னதாக பேசி பெற்றுக்கொண்டு, தகுதியான வேட்பாளரை தெரிவுசெய்வது புத்திசாலித்தனமானது என ஒன்றியம் கருதுகிறது.
இலங்கை மக்கள் மட்டும் அளிக்கப்படும் வாக்குகள் ஜனாதிபதியை தீர்மானிப்பதில்லை. தேர்தலில் சர்வதேச சக்திகளும் செல்வாக்கு செலுத்துகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த வெளிப்படை. சர்வதேசத்திலே இருக்கக்கூடிய பிராந்திய வல்லரசுகள், பிராந்தியத்திலே வல்லமை பொருந்திய நாடுகள் ஒன்றின் அனுசரணையில்தான் இலங்கையில் ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப்படுவார் என்பது மிகையாகாது. அவ்வாறு தெரிவுசெய்யப்படுகின்ற ஜனாதிபதிக்கு எந்த நாடுகள் பின்னணியில் இருக்கின்றதோ அவர்களுடன் தமிழ்மக்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, தமிழ்மக்களின் நியாயமான பிரச்சினைக்கு ,தாங்கள் என்ன தீர்வு தரப்போகின்றீர்கள் என்று கேட்டுப் பெற்றுக்கொள்வது புத்திசாலித்தனமாகும்.
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டு ஒரு பொதுச் சின்னத்திற்கு இடுவதன் மூலம் சக்தி வாய்ந்த குரலாக தமிழ் மக்களின் குரல் ஒலிக்கப்படுமானால் அரசியல் நலிவுப்போக்குக்கு முட்டுக்கொடுக்கக்கூடிய சக்தியாக செயற்பட வேண்டிய தேவை வரும், அந்த வேளையில் எங்களுக்கான விடயங்களை பேரம்பேசி பெற்றுக்கொள்ளக்கூடிய நிலையை ஏற்படுத்துவதன் மூலம் எங்களுடைய அடிப்படை பிரச்சினைக்கும் அபிவிருத்திக்கும் நாங்கள் முடிவை எட்டலாம்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு தமிழ்மக்கள் வழங்கிய எந்தவிதமான ஆதரவையும் தமிழ்மக்களுக்குச் சார்பாக பயன்படுத்துவதிலிருந்து அவர்கள் தவறியிருக்கிறார்கள். தமிழ் மக்களின் ஏகோபித்த வாக்குகளால் வெற்றியீட்டிய ஜனாதிபதி, பாராளுமன்றில் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டபோது தமிழ்மக்களின் பிரதிநிதிகள் தேசிய அரசாங்கத்துக்கு ஏகோபித்த ஆதரவை வழங்கிய முதல் நான்கு வருட காலத்திற்குள், தமிழ்த்தலைமைகள் தமிழ்மக்களுடைய பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதில் அக்கறை செலுத்தாது தங்களது பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதில் அக்கறை செலுத்தியதனால் எங்களுக்குரிய தீர்வு எட்டப்படாது முறிவடைந்து போனது. இதற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரே.
தமிழ்மக்கள் கூட்டமைப்புக்கு வாக்களித்து அவர்களை பாராளுமன்றம் அனுப்பியதற்கு, தமிழ் மக் களின் அபிவிருத்தி அடிப்படை சார்ந்த விடயங்களைக்கூட அவர்களால் தீர்த்து வைக்க முடியவில்லை. ஆகவே இனிவரும் காலங்களிலே தமிழ்மக்கள் எந்த தேர்தலாக இருந்தாலும் கூட்டமைப்பு கையை நீட்டுவதற்கு கண்மூடிக்கொண்டு வாக்களிக்காது, சுயமாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.
எது எவ்வாறு இருந்த போதிலும் தேர்தலிலே வாக்களிப்பதென்பது ஜனநாயக கடமை. அந்த ஜனநாயக உரிமையிலே விரும்பியவருக்கு வாக்களிப்பதற்கு ஒவ்வொருவருக்கும் பூரண சுதந்திரம் இருப்பதனால் தமிழ்த்தேசியத்தின் நிலை உணர்ந்து ஒரு பொதுவான பிரச்சினையை தீர்த்து வைப்பதற்காக, அனைத்து மக்களும் நிதானமாக சிந்தித்து ஒன்றுபட்டு வாக்களிக்க வேண்டும்.
தமிழ்மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய எந்த வேட்பாளர் வருகின்றாரோ எவர் வெற்றி பெறுகிறாரோ அவரை தமிழ்மக்கள் இனங்கண்டு அவரை ஆதரிப்பதன் மூலம் எங்களுக்குரிய பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளலாம்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண மக்கள் பிரதிநிதிகள்,கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் விடயங்களை ஏற்றுக்கொண்டுள்ளதுடன், ஒன்றியத்தை அனுசரித்து செல்ல வேண்டும் என இரா. சம்பந்தன் ஐயா கூறியதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் ஒன்றியத்திடம் தெரிவித்திருத்திருந்தார்.
கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் செயற்பாடு அவசியம் என்பதை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஐயா உணர்ந்திருக்கிறார் என்பது ஒன்றியத்தை சேர்ந்தவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.