கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக அதே பல்கலைக்கழகத்தின் பௌதீகவியற்றுறைப் பேராசிரியர் எவ். சீ. ராகல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கிழக்கு பல்கலைக்கழத்தின் தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் ரி.ஜெயசிங்கத்தின் பதவிக்காலம் எதிர்வரும் 21 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், புதிய துணைவேந்தரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் கடந்த மாதம் முதலாம் திகதி இடம்பெற்றது.
பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்களிடையே நடாத்தப்பட்ட வாக்கெடுப்பின் முடிவில் பேராசிரியர் எவ். சீ. ராகல் முதனிலையிலும், கலாநிதி எம். சந்திரகாந்தா இரண்டாவதாகவும், திருமலை வளாக முதல்வர் பேராசிரியர் ரி. கனகசிங்கம் மூன்றாவதாகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
இவர் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிறப்பு பௌதீகவியல் பட்டதாரிஆவார்.இவர் 1998ஆண்டு முதல் 2011 ஆண்டுவரையும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராகவும்,சிரேஸ்ட விரிவுரையாளராகவும் கடமையையாற்றியுள்ளதுடன் அதற்குப்பின்னர் 2011 ஆம் ஆண்டு முதல் இன்றுவரையும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளராகவும் கடமையாற்றி வருகின்றார்.
தென்னாபிரிக்கா நாட்டில் சிறப்பு பௌதீகவியல் கலாநிதி பட்டத்தை முடித்துள்ளார்.2016 ஆண்டு தனது பேராசிரியராக பட்டத்தை பூர்த்தி செய்துள்ளார்.மட்டக்களப்பு புளியந்தீவை பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்ட துணைவேந்தர் ராகல் அம்பாறை பாடசாலை,மட்டக்களப்பு சிங்கள மகாவித்தியாலயம்,குருநாகல் பாடசாலைகளின் பழைய மாணவர் ஆவார்.
பேரவையின் பரிந்துரை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. பல்கலைக்கழகங்கள் சட்டத்துக்கமைவாக பேரவையினால் தெரிவு செய்யப்பட்டவர்களின் விபரங்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேனவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் பேராசிரியர் எவ். சீ. ராகல் கிழக்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஜனவரி 22 ஆம் திகதி முதல் நியமனம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.இவருக்கான உத்தியோகபூர்வமான நியமனக்கடித்தத்தை வெள்ளிக்கிழமை(18) ஜனாதிபதி செயலகம் கிழக்குப் பல்கலைக்கழக பதிவாளருக்கும்,துணைவேந்தருக்கும் அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.