கிழக்கு மாகாண இலக்கிய விழாவுக்கு விண்ணப்பம்கோரல்-2022

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் 2022ஆம் ஆண்டுக்கான மாகாண இலக்கிய விழாவில் பின்வரும் அம்சங்களை உள்ளடக்கிய போட்டிகளை நடாத்தி விருது வழங்கி கௌரவிப்பதற்கு தீர்மானித்துள்ளது என கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர்
சரவணமுத்து நவநீதன் தெரிவித்தார்.
 
மேலும், குறிப்பிடுகையில்
கிழக்கு மாகாணத்திலுள்ள கலைஞர்கள், எழுத்தாளர்கள், மற்றும் படைப்பாளிகளை இனங்கண்டு அவர்களை பாராட்டி கௌரவிப்பதன் மூலம் அவர்களது கலை, இலக்கியப் பணிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதுடன் எதிர்கால சந்ததியினருக்கு படைப்புலக முன்னோடிகளாக அவர்களை இனம் காட்டுவதன் நோக்கமாகக் கொண்டதாக இந்த விழா அமைவதுடன் கீழ்வரும் விடங்களுக்கு விருதுகள் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
01. இலக்கியப் படைப்புக்கான விருது வழங்கலின் பொருட்டு 2021ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சிறந்த நூல்கள், குறும்திரைப்பட ஆக்கங்களைத் தேர்வு செய்யும் வண்ணம் கிழக்கு மாகாண எழுத்தாளர்களுக்கும், பதிப்பாளர்களுக்கும் மற்றும் தயாரிப்பாளர்களுக்கும் தமது படைப்புகளை சமர்ப்பிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
02. 2022ஆம் ஆண்டுக்கான இலக்கிய விழாவின் போது கிழக்கு மாகாணத்தின் கலை, இலக்கிய வளர்ச்சிக்காக காத்திரமான பங்களிப்புக்களை ஆற்றிய, ஆற்றி வருகின்ற இலக்கிய வித்தகர், நாட்டார் இலக்கிய வித்தகர், ஊடக வித்தகர், கவின்கலா வித்தகர், அரங்க வித்தகர் மற்றும் பல்துறை வித்தகர் போன்ற துறைகளில்
கலைஞர்களை பாராட்டி கௌரவித்து விருது வழங்குவதற்கு பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. கிழக்கு மாகாணத்தில் ஆகக் குறைந்தது 5 வருடங்களை நிரந்திர வதிவிடமாக கொண்ட இலக்கிய கர்த்தாக்களும், கலைஞர்களும்  இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
 
03. இலக்கியம், நாட்டார் இலக்கியம், ஊடகம், நுண்கலை, ஆற்றுகை, குறும்படம்  மற்றும் பல்துறை போன்ற கலை, இலக்கியத்துறையில் சாதனை படைத்த படைத்து வரும் இளம் கலைஞர்களை பாராட்டி விருது வழங்குவதற்கும் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
 
04. 2021ஆம் ஆண்டு கிழக்கு மாகாண படைப்பாளிகளினால் வெளியீடு  செய்யப்பட்ட நூல்களை கொள்வனவு செய்யும் திட்டம் இவ்வருடமும் இடம்பெறவுள்ளது.
 
05. கையெழுத்துப் பிரதிகள் நூல் வடிவில் வெளியீடு செய்வதற்கு இவ்வருடமும் திணைக்களம் தீர்மானித்து அதனடிப்படையில்
புலைமைத்துவம் சார் படைப்புகள், பிரதேச மற்றும் கலை தொடர்பான ஆய்வுசார் படைப்புக்கள், அறிவியலும் தொழில்நுட்பமும், பாரம்பரிய நாட்டார் கலை வடிவங்களின் ஆவணத் தொகுப்பு, நாட்டுக்கூத்து பிரதி, வரலாற்று நாடகம், சிறுகதை மற்றும் நாவல் போன்ற கையெழுத்து பிரதிகளாக வைத்திருக்கும் படைப்பாளிகளும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
 
கிழக்கு மாகாண இலக்கிய விழாவுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் விண்ணப்பப் படிவங்களை கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கிழக்கு மாகாணத்திலும் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் மாகாண கலாசார உத்தியோகத்தரிடமும்  அல்லது http://www.ep.gov.lk எனும் வலைத்தளத்தில் தரவிறக்கம் செய்து விண்ணப்ப படிவத்தை மார்ச் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் கிழக்கு மாகாண திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என  மாகாணப் பணிப்பாளர் தெரிவித்தார்.

Related posts