கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் உள்ள மக்களின் உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மாகாணசபைத் தேர்தல்கள் பிற்போடப்படுவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) சபை ஒத்திவைப்புப் பிரேரணையை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாண சபைகளுக்கான பதவிக்காலம் கடந்த ஒக்டோபர் மாதத்துடன் நிறைவடைந்துள்ளன. மேலும் மூன்று சபைகளின் பதவிக்காலம் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துடன் நிறைவடையவுள்ளது.
இந்நிலையில், மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தாது தொடர்ந்து இழுத்தடிக்கப்பட்டு வருவதானது ஜனநாயகத்தையும், மக்களின் உரிமைகளையும் மீறும் செயலாகும்.
மாகாணசபை திருத்தச்சட்டமூலத்துக்கு அமைய எல்லை நிர்ணய அறிக்கை அமைச்சரிடம் கையளிக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்குள் சபையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும். அப்படி நிறைவேற்றப்படாத பட்சத்தில் சபாநாயகர் தலைமையில் மீளாய்வுக் குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.