கிழக்கு மாகாண வருடாந்த ஆசிரியர் இடமாற்றத்தை உடன் அமுல் படுத்தக் கோரி ஆளுநருக்கு இம்ரான் எம்.பி கடிதம்.

கிழக்கு மாகாண ஆசிரியர்களின் வருடாந்த இடமாற்றம் கடந்த 2 வருடங்களாக அமுல் படுத்தப்படாமல் உள்ளது. இதனால் பல ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்த இடமாற்றத்தை உடன் அமுல் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யகம்பத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆளுநருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கிழக்கு மாகாணத்தில் விண்ணப்பம் கோரப்பட்ட இவ்வாண்டுக்கான வருடாந்த ஆசிரியர் இடமாற்றம் இதுவரை இடம்பெறவில்லை. இதனால் பல ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் ஏனைய அரச உத்தியோகத்தர்களுக்கான வருடாந்த இடமாற்றம் முறையாக ஒவ்வொரு வருடமும் இடம்பெற்று வந்த போதிலும் ஆசிரியர் இடமாற்றம் கடந்த 2 வருடங்களாக இடம்பெறவில்லை என ஆசிரியர் சமுகம் கவலை வெளியிட்டுள்ளது.
இவ்வாண்டுக்கான வருடாந்த ஆசிரியர் இடமாற்றப் பட்டியல் வெளியிடப்பட்டு 2021.04.19 ஆம் திகதி முதல் அது நடைமுறைக்கு வரும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் மே மாதம் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் ஜூன் மாதம் அமுலுக்கு வரும் என சொல்லப்பட்டுள்ளது. எனினும், இந்த இடமாற்றம் இதுவரை அமுல் படுத்தப்படவில்லை. இதனால் பல ஆசிரியர்கள் நீண்ட காலமாக கஸ்டப் பிரதேசப் பாடசாலைகளில் கடமையாற்றி வருகின்றனர். எதிர்பார்த்திருந்த இடமாற்றம் இதுவரை கிடைக்காததால் அவர்கள் மன உழைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர்.
 
தங்களது நிர்வாக காலத்தில் வருடாந்த ஆசிரியர் இடமாற்றத்தில் இவ்வாறான தாமதங்கள் இடம்பெறுவது குறித்து நான் மிகவும் கவலையடைகின்றேன். எனவே, இதுவிடயத்தைக் கவனத்தில் எடுத்து இவ்வாண்டுக்கான வருடாந்த ஆசிரியர் இடமாற்றத்தை உடன் அமுலுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இவ்வாறு அக்கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இக்கடிதத்தின் பிரதிகள் கிழக்கு மாகாண கல்வி அமைச்சு செயலாளர், கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related posts