அகில இலங்கை தமிழ் மொழித்தின போட்டிகளின் கிழக்கு மாகாணத்திற்கான போட்டிகள் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலையில் இன்று ஆரம்பமானது.
இரு நாட்களாக நடைபெறவுள்ள தமிழ்மொழி தினப்போட்டிகள் அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தில் இன்று காலை இடம்பெற்ற பூஜை வழிபாடுகளின் பின்னர் இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வுடன் ஆரம்பமானது.
அதிதிகள் வரவேற்பின் பின்னர் தேசிய கொடி மற்றும் மாகாண கொடிகள் ஏற்றப்பட்டன. தொடர்ந்து மங்கள் விளக்கேற்றல் மும்மத இறைவணக்கம் இடம்பெற்றது.
பின்னர் தமிழ் வாழ்த்துப்பா மற்றும் தமிழ் மொழிதின வாழ்த்துப்பாக்களை பாடசாலை மாணவிகள் வழங்கினர்.
நிகழ்வின் வரவேற்புரையை திருக்கோவில் வலய கல்விப்பணிப்பாளர் வை.ஜெயச்சந்திரன் வழங்க தலைமையுரையை கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் ஆற்றினார்.
போட்டியின் நடுவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு போட்டி நிகழ்வுகளையும் அவர் ஆரம்பித்து வைத்தார். இதேவேளை பாடசாலை வளாகத்தில் பல பாடசாலைகளின் ஒத்துழைப்போடு அமைக்கப்பட்டிருந்த பாரம்பரிய பொருட் கண்காட்சி மற்றும் பாரம்பரிய உணவுச்சாலை கண்காட்சி ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் தாகசாந்தி சாலைகளையும் திறந்து வைத்தார்.
நிகழ்வில் மாகாண மற்றும் மாவட்ட கல்வி உயர் அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.