மட்டக்களப்பு கரடியநாறு பிரதேசத்திலுள்ள தம்பானம்வெளி மற்றும் புயல்வெளி பிரதேச மக்கள் குடிநீர் பிரச்சினையை தற்காலிகமாக தீர்த்து வைப்பதற்காக பொதுக்கிணறுகள் திறந்து வைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வு உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவேஸ்வரன் தலைமையில் (15) இடம்பெற்றது.
மேல்மருவத்தூர் ஆதிபராசாக்தி வழிபாட்டு மன்றம் பிரித்தானியாவை தளமாகக் கொண்டியங்கும் கரோ அமைப்பின் நிதிப்பங்ளிப்பில் இப்பொதுக் கிணறுகளை அமைத்து பொதுமக்கள் பாவனைக்காக வழங்கி வைத்துள்ளது.
மேலும் காயங்குடா கண்ணகி வித்தியாலயத்தில் க.பா.த. சாதாரண தரப் பரீட்சையில் சிறப்புச் சித்தி பெற்ற 29 மாணவர்கள் மற்றும் புலமைப் பரிசில் பரீட்சையில் 100 க்கும் அதிகமான புள்ளிகள் பெற்ற 6 மாணவர்கள் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் விதவைத் தாய்மார் 10 பேருக்கான ஆடைதானமும், 60 குடும்பங்களுக்கு தேரி மரக்கண்றுகளும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.
மன்றத்தின் தலைவர் கே. துரைராஜாவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் கிழக்குப் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளரும், ஆங்கில பிரிவுக்கான தலைவருமாகிய கலாநிதி எஸ். உமாசங்கர், மாவட்ட தகவல் அதிகாரி வீ. ஜீவானந்தன், காயங்குடா கண்ணகி வித்தியாலய அதிபர் வீ.எஸ். ஜெகநாதன், மன்றத்தின் உறுப்பினர்கள், கிராம அபிவிருத்தி செயலாளர், விவசாய அமைப்புத் தலைவர் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
வரட்சியினால் குடிநீர் வசதியில்லாமல் மிகவும் சிரமம்பட்டு வருகின்றனர் இக்கிராம மக்களுக்கு செங்கலடி பிரதேச சபையினால் வாரத்திற்கு இருமுறை மாத்திரம் பௌசர்களில் குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது. இது தவிர தமது அன்றாடத் தேவைக்கான நீரினைப் பெற்றுக் கொள்ள சுமார் 3 கிலோமீற்றர் தூரத்திலுள்ள கிணரொன்றினைப் பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.