குறைந்தளவிலான வசதி கொண்ட குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கான 7 ஆயிரத்து 500 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்குமாறு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் (2020.12.14) நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு அறிவுறுத்தியுள்ளார்.
நகர அபிவிருத்தி அதிகாரசபையின் திட்டங்கள் தொடர்பில் அந்த அதிகாரசபையின் அதிகாரிகளுடன் அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பொன்றின் போதே கௌரவ பிரதமர் இவ்வாறு வலியுறுத்தினார்.
அதற்கமைய இம்மாத இறுதிக்குள் குறித்த வீட்டுத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபை ஒப்புதல் தெரிவித்தது.
புதிதாக நிர்மாணிக்கப்படும் 7 ஆயிரத்து 500 வீடுகளில், 4 ஆயிரம் வீடுகள் குறைந்த வசதி கொண்ட குடியிருப்புகளில் வசிப்போரை மீள்குடியேற்றுவதற்காக நிர்மாணிக்கப்படுவதுடன், எஞ்சிய 3 ஆயிரம் வீடுகள் நடுத்தர வர்க்கத்தினருக்காக ஒதுக்கப்படும்.
நடுத்தர வர்க்கத்தினருக்காக வீடுகளை பெற்றுக் கொடுக்கும் போது குறைந்தபட்ச ஆரம்ப கொடுப்பனவில் வீட்டு உரிமையை பெற்றுக் கொடுக்கும் முறையொன்றை உருவாக்குமாறு கௌரவ பிரதமர் இதன்போது நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகளுக்கு பணித்தார்.
அதற்கமைய மத்திய வர்க்கத்தினருக்கான வீடமைப்பு திட்டத்தை செயற்படுத்தும் போது பயனாளர்களுக்கு 30 ஆண்டுகள் வரை 6.25 என்ற வட்டி வீதத்தில் வீடுகளை பெற்றுக் கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.பல காலமாக செயற்படுத்துவதாக தெரிவித்து தாமதிக்கப்பட்டு வந்து தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடங்களின் பணிகள் மீண்டும் மீண்டும் தாமதிக்கப்படுவதை தவிர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கௌரவ பிரதமர் இதன்போது அறிவித்தார். அதற்கமைய அரச காணிகளை பெற்றுக் கொள்ளக்கூடிய இடங்களில் அவற்றை பெற்று இந்த வாகன நிறுத்த வேலைத்திட்டத்தை நிறைவுசெய்வதற்கு அதிகாரிகளின் ஒப்புதல் கிட்டியது.இந்நிலையில், பேலியகொட புதிய மெனிங் சந்தை மொத்த விற்பனைக்காக இன்றைய தினம் திறக்கப்பட்டது.
கடந்த காலத்தில், புதிய மெனிங் சந்தையின் விற்பனை நிலைய உரிமையாளர்களுக்கு போதுமான அளவு விற்பனை நிலையங்கள் இன்மை காரணமாக ஏற்பட்டிருந்த பிரச்சினைக்கு இதுவரை தீர்வு எட்டப்பட்டுள்ளது.
சகல விற்பனை நிலைய உரிமையாளர்களுக்கும் இதுவரை புதிய விற்பனை நிலையங்கள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன. 1200 விற்பனை நிலையங்களில் அதிக இட வசதி கொண்ட மற்றும் வசதிகள் நிறைந்த 768 விற்பனை நிலையங்கள் இன்றைய தினம் மொத்த விற்பனைக்காக திறக்கப்பட்டன.
இந்த விற்பனை நிலையங்களின் மாதாந்த கட்டணத்தில் 50 வீத கழிவை பெற்றுக் கொடுக்குமாறு கௌரவ பிரதமர் இதன்போது அறிவித்தார். அதற்கமைய குறித்த காலப்பகுதிக்கு இந்த கழிவு பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கை செயற்பாட்டில் இருக்கும்.
கொவிட்-19 நெருக்கடி இல்லையெனில் எஞ்சிய விற்பனை நிலையங்களை சில்லறை விற்பனைக்காக பெற்றுக் கொடுக்க முடியும் என நகர அபிவிருத்தி அதிகார சபை கௌரவ பிரதமருக்கு அறிவித்தது.2015ஆம் ஆண்டுக்கு முன்னர் அடிக்கல் நாட்டப்பட்ட வீடமைப்பு திட்டம் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் இடைநடுவே நிறுத்தப்பட்டிருந்தது. இந்த அனைத்து வீடமைப்பு திட்டங்களினதும் பணிகள் இதுவரை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகாரசபை குறித்த சந்திப்பின்போது தெரிவித்தது.
எதிர்காலத்தில் கலைஞர்களுக்காகவும் வீடமைப்பு திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. 2024ஆம் ஆண்டளவில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் வீடுகளின் நிர்மாணப் பணிகளை நிறைவுசெய்ய நகர அபிவிருத்தி அதிகாரசபை எதிர்பார்க்கிறது.
பல்வேறு நிதி உதவிகளின் கீழ் முன்னெடுக்கப்படும் வீடமைப்பு திட்டங்கள் வடக்கு, தெற்கு மற்றும் மலையகத்திற்கு மாத்திரமின்றி நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து சாதாரண மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என கௌரவ பிரதமர் வலியுறுத்தினார்.
குறித்த சந்தர்ப்பத்தில் நகர அபிவிருத்தி, கரையோர கழிவுப்பொருள் அகற்றல் மற்றும் சமுதாய தூய்மைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் கௌரவ நாலக்க கொடஹேவா, கௌரவ பிரதமரின் செயலாளர் திரு.காமினி செனரத், பிரதமர் அலுவலகத்தில் ஊழியர் பிரிவு தலைமை அதிகாரி திரு.யோஷித ராஜபக்ஷ, நகர அபிவிருத்தி, கரையோர கழிவுப்பொருள் அகற்றல் மற்றும் சமுதாய தூய்மைப்படுத்தல் இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு.சிறிநிமல் பெரேரா, நகர அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் திரு.ஹர்ஷான் டி சில்வா, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் திரு.எஸ்.எஸ்.பீ.யாலேகம, நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் திரு.என்.பீ.கே.ரணவீர, நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் திரு.ஈ.ஏ.சீ.பியசாந்த உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.