‘
இவ்வாறு கல்முனை ஆதார வைத்தியசாலையின் குழந்தைநல வைத்தியநிபுணர் வைத்தியகலாநிதி டொக்டர் எஸ்.என்.ரொசாந்த் தெரிவித்தார்.
இந்தநோய்க்கெதிராக இலங்கை அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை. சிலவேளை இலங்கையின் கொரோனாத்தொற்று வரைபு செங்குத்துநிலைக்கு வந்தால் எம்மால் எதுவுமே செய்யமுடியாத துர்ப்பாக்கியநிலை தோன்றுவும் வாய்ப்புண்டு எனவும் சொன்னார்.
இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கம் தணிந்துவருவதாகக் கூறப்படுவது குறித்து கருத்துக்கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு விளக்கமளித்தார்.
அவர் மேலும் கூறியதாவது
முக்கவசம் ‘மாஸ்க்‘ Mask-அணிவதால் அவருக்கு எவ்வித பயனுமில்லை. மாறாக அவர் ஏனையோரைப் பாதுகாக்கிறார். எனவே ஒவ்வொருவரும் ‘மாஸ்க்’ அணிந்தால் அனைவரும் பாதுகாக்கப்படுவர்.
பரம்பலின் வேகத்தைக் குறைப்பதானால் கட்டாயம் அனைவரும் 3 வழிகளை பின்பற்றியே ஆகவேண்டும்.
1.கட்டாயம் கைகழுவவேண்டும்.
கிருமி எங்கிருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. அது கண்ணுக்குப் புலப்படாது. யாரிடம் இருக்கிறதென்பதுகூடத் தெரியாது. உண்மையில் இக்கிருமி உள்ளவர்களில் 80வீதமானோர் எவ்வித அறிகுறிகளும் வெளியே தெரியாதவண்ணமிருப்பர். 20வீதமானோரில் அறிகுறிகள் தெரியும். தடிமல்இருமல் சளி இவ்வாறாக அவை வெளித்தெரியும். மீதி 10வீதமானோர் காய்ச்சலுடன் சுவாசத்திற்காக அவதிப்படுவர். இந்த அறிகுறிகளை நிட்சயப்படுத்த பொதுவாக 21நாட்கள் தேவைப்படும்.கைகளால் முகத்தை மூக்கை வாயைத் தொடக்கூடாது. எனவே அடிக்கடி கையைக்கழுவுவதால் பரம்பலைக் குறைக்கமுடியும்.
2.சமுக இடைவெளி. மக்கள் கூட்டம் கூடக்கூடாது. அப்படியொரு நிலை வந்தால் சமுக இடைவெளி- Social Dsitance- கட்டாயம் பேணப்படவேண்டும். உண்மையில் 2மீற்றர் இடைவெளி தேவை. தொற்றுள்ள ஒருவர் தும்மும் போது அல்லது உரத்துப்பேசும்போது அவரது நீர்ச்சிதறல்கள் குறைந்தது ஒரு மீற்றருக்கும் அதிகமான தூரம் பயணிக்கும்.
பின்பு கீழே வீழ்ந்துவிடும். ஏசி குளிருட்டப்பட்ட அறைகள் சனச்செறிவான சந்தை ஒன்றுகூடல் கூட்டம் கூடல் வணக்கஸ்தலங்களில் கூடுதல் என்பன சற்றும் சரிவராது.
3.மாஸ்க் அணிதல். தரமான மாஸ்க் உரியமுறையில் அணிதல் அவசியம். ஒருநாள்பாவித்தால் அதனை அன்றே சவர்க்காரமிட்டுத் துவைத்து நன்கு காயவைத்து அயன் ஸ்திரிக்கை இட்டால் வைரஸ் பறந்துபோகும். இவ்வைரசின் பருமன் சற்றுப்பெரிதாகையால் இலேசாகவும் அழிந்துபோகும்.மாஸ்க்கின் முற்பகுதியை எக்காரணம்கொண்டும் தொடக்கூடாது.
இந்த மூன்று செயற்பாடுகளையும் மக்கள் தொடர்ந்து கடைப்பிடிக்காவிட்டால் இவ்வைரைஸ் எளிதில் எம்மைவிட்டுப்போகாது. பலகாலம் எம்முடன் பயணிக்கும்.அதற்கேற்ப நாம் வாழப்பழகவேண்டும்.
கொரோனா வைரஸ்ஸை சுகப்படுத்த இதுவரை உலகில் எந்த மருந்துமே கண்டுபிடிக்கப்படவில்லை. சாதாரண வைரசுக்கான பரீட்சார்த்த சிகிச்சை -Experimental Treatment – இடம்பெறுகிறது. குழந்தை மற்றும் வயதானவர்கள் மாத்திரம்தான் இதற்கு இலக்கு என்று நினைத்து விடவேண்டாம். பலவயதிலுமுள்ளவர்கள் மரணித்திருக்கிறார்கள்.
தண்ணீரில் ஜஸ்கட்டி மிதப்பதைப் -Ice Berg- போல்தான் இன்றைய கொரோனா நிலைமை தெரிகிறது. ஆழத்தில் அபாயமுள்ளதை அறியாதிருந்து அலட்சியமாகவிருந்தால் அனைவரும் அழியவேண்டிநேரிடும். என்றார்.