முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸவுடன் பேசி கொண்ட விடயங்களின் விபரங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தமிழ் மக்களுக்கு முழுமையாக வெளிப்படுத்த வேண்டும் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளரும், காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான செல்லையா இராசையா தெரிவித்தார்.
இவரின் காரைதீவு இல்லத்தில் நேற்று காலை ஊடகவியலாளர்களை சந்தித்து பேசியபோதே இவர் இவ்வாறு தெரிவித்தார். இவர் இங்கு முக்கியமாக தெரிவித்தவை வருமாறு:-
இலங்கையின் ஹிட்லர் என்று உருவகிக்கப்படுபவராக கோத்தாபய ராஜபக்ஸ உள்ளார். தமிழ் மக்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டதில் ராஜபக்ஸ குடும்பம் மீது குறிப்பாக நேரடியாக இவர் மீது குற்றம் காணப்பட்டு வருகின்றது. தமிழ் மக்கள் இவரை வேண்டத்தகாதவராகவும், தீண்டத்தகாதவராகவுமே பார்க்கின்றனர்.
ஆனால் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் மொத்த உருவமாக உள்ள இவரை சீனாவின் ஏற்பாட்டில் கடந்த வாரம் சம்பந்தன் சந்தித்து பேசி உள்ளார். இது எதேச்சையாக நடந்த சந்திப்பு என்று சொல்லப்படுகின்றபோதிலும் குறைந்த அளவு அரசியல் தெரிந்தவர்கள்கூட இதை அறவே நம்ப மாட்டார்கள்.ஆனால் தமிழ் மக்களை தொடர்ந்தும் முட்டாள்கள் என்று நினைத்தே இவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சொல்லி வருகின்றனர்.
வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஸ சிங்கள தேசியத்தின் அடையாளமாக போட்டியிடுவார் என்று பெரிதும் நம்பப்படுகின்றது. இச்சந்திப்புக்கு பின்னதாக கோத்தாபய ராஜபக்ஸ பத்திரிகை ஆசிரியர்களை சந்தித்து பேசியபோது பொருளாதார சமத்துவத்தை ஏற்படுத்துவதே தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினையை தீர்ப்பதற்கான வழி என்று தெரிவித்து இருக்கின்றார். இந்நிலையில் கோத்தாபய ராஜபக்ஸவுடன் பேசி கொண்ட விடயங்களின் முழு விபரங்களையும் சம்பந்தன் தமிழ் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். அத்துடன் கோத்தாபய ராஜபக்ஸ மீதும், அவரின் தீர்வு முயற்சி மீதும் நம்பிக்கை இருக்கின்றதா? என்பதையும் வெளிப்படையாக சொல்ல வேண்டும்.
மேலும் கோத்தாபய ராஜபக்ஸ அவருடைய உத்தேச அரசியல் பயணத்துக்கான ஆரம்பத்தில் குடும்ப வட்டத்துக்கு வெளியில் சந்தித்து பேசி உள்ள மிக பெரிய அரசியல் புள்ளியாகவும் சம்பந்தனே வெளிப்படையாக தெரிகின்றார். ஆகவே இவரின் ஆசிர்வாதத்தின் உத்தரவாதத்துடனேயே கோத்தாபய ராஜபக்ஸ அரசியலில் குதிக்கின்றார் என்கிற எமது சந்தேகமும் நியாயமானதுதான்.
எது எப்படி இருந்தாலும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களை வாக்களிக்காமல் தடுத்ததன் மூலம் மஹிந்த ராஜபக்ஸவின் வெற்றியை புலிகள் உறுதிப்படுத்திய வரலாற்று தவறே புலிகள் இயக்கத்தின் அழிவுக்கு மாத்திரம் அன்றி முள்ளிவாய்க்கால் பேரழிவுக்கும் காரணமானது. அதற்கு ஒப்பான ஒரு வரலாற்று தவறை சம்பந்தர் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொள்ளுமாக இருந்தால் தமிழினத்தை மீள முடியாத நிரந்தரமான பேரழிவுப் பெருந்துயரத்துக்கு தள்ளுவதாகவே இருக்கும் என்பதில் மாற்றம் இல்லை.