கொக்கட்டிச்சோலையில் சுட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சடலம் பரிசோதனைக்காக தோண்டி எடுக்கும் பணி முனைக்காட்டில் இடம்பெற்றது.பொலிசாரின் சடலம் குழிக்குள் இல்லாததால் தோண்டும் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
2008 ஆம் ஆண்டு ஆயுதக் குழு ஒன்றினால் கடத்தி செல்லப்பட்டு சுட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சடலம் பரிசோதனைக்காக தோண்டி எடுக்கும் பணிகள் முனைக்காடு மயானத்தில் செவ்வாய்க்கிழமை(11) மாலை 4.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டன.
மட்டக்களப்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய ஆயுதக்குழுவின் முன்னாள் உறுப்பினர்கள் நான்கு பேர் கைதுசெய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த சடலத்தினை தோண்டு நடவடிக்கை மட்டக்களப்பு முனைக்காடு மயானத்தில் ஆரம்பிக்கப்பட்டன.
கடந்த 2008 ம் ஆண்டு கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த கிரான்குளத்தைச் சேர்ந்த நாகராசா பிரசாந்தன் என்ற பொலிஸ் உத்தியோகத்தர் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் இருந்து மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் பெற்றிருந்த நிலையில் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் தனது இறுதி நாள் கடமையினை மேற்கொள்வதற்காக பொலிஸ் நிலையத்தில் இருந்து வெளியில் சென்றிருந்த நிலையிலேயே இவர் காணாமல் போயிருந்தார்.
இந்த நிலையில் காணாமல் போயுள்ள பொலிஸ் உத்தியோகத்தர் தொடர்பாக குற்றப்புலனாய்வுத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தாரை கடத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் ஆயுதகுழுவின் முன்னாள் உறுப்பினர்களான மகிளன் என்றழைக்கப்படும் மேரி அன்ரனி போல் அஜதீபன், மதன் என்றழைக்கப்படும் தம்பிமுத்து செல்வராசா, லிங்கன் என்றழைக்கப்படும் சந்திரன் சுப்பிரமணியம் ஆகிய 3 பேரை சந்தேகத்தில் ஓட்டுமாவடி, களுவாஞ்சிக்குடி, கல்லடி, போன்ற இடங்களில் வைத்து கடந்த மார்ச் மாதம் சிஜடி யினர் கைது செய்தனர்.
இவர்களிடம் மேற் கொண்ட விசாரனையில் காணாமல் போயுள்ள பொலிஸ் உத்தியோகத்தர் கடத்தப்பட்டு சுட்டு கொல்லப்பட்டு கொக்கட்டிச்சோலை முனைக்காடு மயானத்தில் புதைக்கப்பட்டதாக சிஜடி யினரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து குறித்த சடலத்தை தோண்டி எடுப்பதற்கு சிஜடி சப் இன்பொஸ்டர் என். நவரெட்ண மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் கடந்த மாதம் வியாழைக்கிழமை (23) அனுமதிகோரியிருந்தார்.
இதனையடுத்து சடலத்தை இன்று 11 ஆம் திகதி மட்டக்கப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சீ.றிஸ்வான் முன்னிலையில் தோண்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
குறித்த சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளாக 7 பேர் இனங்காணப்பட்ட நிலையில் கபிலன் எனப்படும் சந்தேக நபர் ஏற்கனவே இறந்துள்ளார். இனியபாரதி மற்றும் சின்னத்தம்பி ஆகிய இருவரும் வெளிநாட்டில் இருப்பதாதாவும் ,ஏனைய நால்வரில் ஒருவரான மகிழன் எனப்படுபவர் கொழும்பில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில் சந்தேக நபர்கள் வழங்கிய வாக்குமூலத்திற்கு அமைவாக தோண்டப்படும் இடத்திற்கு இன்றைய தினம் தயானந்தன், மதன், என்றழைக்கப்படும் தம்பிமுத்து செல்வராசா, லிங்கன், என்றழைக்கப்படும் சந்திரன் சுப்பிரமணியம் சமூகமளித்திருந்தார்கள்.குறித்த மயானத்தில் குழியொன்று செவ்வாய்க்கிழமை(11)மாலை தோண்டப்பட்டது. இக்குழியில் இருந்து எவ்வித மனித எச்சங்களும் கண்டுபிடிப்படவில்லை.
இவ்வாறு சடலம் இருப்பதாக தோண்டியும் அக்குழிக்குள் மனித எச்சங்கள் காணப்படாததால் மேலதிக தோண்டும் பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.