எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பாக சபாநாயகரே தீர்மானம் ஒன்றினை எடுக்க வேண்டும் எதிர்க்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பான அறிவிப்பை சபாநாயகர் கரு ஜயசூரிய நாளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கண்டியில் (திங்கட்கிழமை) நடைபெற்ற நிகழ்வில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற அமர்வு வாரம் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தனது நிலைப்பாட்டை இன்று சபாநாயகருக்குத் தெரியப்படுத்தவுள்ளது. அந்த வகையில் நாளைய அமர்வில் சபாநாயகர் தனது நிலைப்பாட்டை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிரணியில் அதிக எண்ணிக்கையான உறுப்பினர்களைக் கொண்ட குழுவாக தாம் இருப்பதால் தமக்கே எதிர்க்கட்சிப் பதவி வழங்கப்பட வேண்டும் என ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தொடர்ச்சியாக கோரிகையை முன்வைத்து வருகிறது.
இது தொடர்பில் எழுத்துமூல கோரிக்கையை முன்வைத்தால் ஆராய்ந்து பார்க்க முடியும் என சபாநாயகர் முன்னர் அறிவித்திருந்தார். இதற்கமைவாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி எழுத்து மூலம் கோரிக்கைவிடுத்தது.
அத்துடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நிலைப்பாட்டை சபாநாயகர் கேட்டறிந்தார். இதற்கமைய இன்று தமது கட்சியின் நிலைப்பாட்டினை அறிவிப்பதாக அக்கட்சியின் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார்.
தம்மை அங்கீகரிகாவிட்டால் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவர இருப்பதாகவும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா குறிப்பிட்டார்.
அதேநேரம், ஐ.ம.சு.மு எடுக்கும் தீர்மானத்துக்கு அமைய எதிர்காலத்தில் அவர்கள் பாரிய விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதுமட்டுமன்றி சட்டத்துறை நிபுணர்கள் ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்கு பாராளுமன்றத்தில் தனியான கட்சி அங்கீகாரம் இல்லையெனச் சுட்டிக்காட்டியிருப்பதுடன், அவர்களுடைய கோரிக்கையை ஏற்றுக்கொள்வது பொருத்தமானதாக இருக்காது என்றும் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனும், எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பாக சபாநாயகரே தீர்மானம் ஒன்றினை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.