சமூக நோக்குடையதும் சமூகத்தினை சீர்திருத்தக்கூடியதுமான படைப்புக்களையே கவிஞர் துறையூர் செல்லத்துரை படைத்திருக்கின்றார். என்பதை அவரது படைப்புக்கள் யாவும் பறைசாற்றி நிற்கின்றது எனப் பாவாணர் அக்கரைப்பாக்கியன் அமரர் துறையூர் செல்லத்துரை அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுப்பேருரையும் தடம் நூல் வெளியீடும் ஞாயிற்றுக்கிழமை காலை துறைநீலாவணை மகாவித்தியாலய மண்டபத்தில் ஓய்வு நிலை அதிபர் யோகா கலாநிதி சந்திரலிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமரர் துறையூர் செல்லத்துரை அவர்களின் படைப்புக்களை ஒன்றிணைத்து அவரது மைத்துனர் யோகாசிகிச்சை நிபுணர் கலாபூசணம் செ.துரையப்பா அவர்கள் தொகுப்பாசிரியராக இருந்து தடம் எனும் தொகுப்பு நூல்வெளியிடப்பட்டது.
அவர் தொடர்ந்து பேசுகையில் சமூகவாழ்க்கையினைப் பொறுத்தமட்டில் தாம்பெற்ற இன்பம் பெறுக வையகம் எனும் வாசகத்திற்கு ஏற்ப தனது பிள்ளைகளை கற்பித்து உயர்த்தியதுபோல் பிற பிள்ளைகளும் கல்வியில் மேலோங்க பல வழிகளிலும் உதவிய பெருந்தகை என்பதனை மறந்துவிடமுடியாது.
1985 ஆம் ஆண்டு எனது மூத்த சகோதரர் க.தேவராசா வீரகேசரிப்பத்திரிகையின் நிருபராக அக்கரைப்பற்று பகுதியில் செயற்பட்டபோது கொண்டவட்டுவான் அதிரடிப்படையால் 1985 இல் கொலைசெய்யப்பட்டார் அவரே முதலாவதாக கொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்.
அதன்பின்னர் அங்கிருந்து இடம்பெயர்ந்து துறைநீலாவணைக்கு வந்தபோது எம்மை அரவணைத்து மனிதநேயத்துடன் நடாத்திய பெருமகன் துறையூர் செல்லத்துரை அவரை மறந்துடமுடியாது.
சமூகத்திற்காகவே இலக்கியமே தவிர இலக்கியத்திற்குச் சமூகமில்லை என்பதனை மையப்படுத்தி இவரது படைப்புக்கள் காணப்படுகின்றது இவரது கவிதைகள் மூலம் மனித மனங்களை செப்பநிட்டு சிறப்பான உலகத்தினை படைக்கக்கூடிய செயற்பாடுகள் அமைந்திருப்பது தெளிவாகத் தெரிகிறது.
கிராமப்புற வாழ்க்கையை மையப்படுத்தியதாகவும் மனிதநேயமான வாழ்வுக்கும் வித்திட்டவரது படைப்புக்கள் தமிழ்உலகிற்கும் தமிழ் மக்களுக்கும் முக்கியமானதாக அமைந்திருக்கின்றது. அவர் அழிந்தாலும் அவரது படைப்புக்கள் அழிந்துவிடக்கூடாது என்பதற்காக அவரது குடும்பத்தினர் இவ் தொகுப்பு நூலை வெளியிட்டுவைப்பது காலத்தி தேவையாக இருக்கின்றது.
அவர் அழிந்தாலும் அவரது படைப்புக்கள் அழியவில்லை ஆவணப்படுத்தப்பட்டுள்ளமை காலத்தின் தேவையாக இருக்கின்றது என்றார். இந்நிகழ்வில் செங்கதிரோன் கோபாலகிருஷ்ணன் பாவாணர் அக்கரைப்பாக்கியன் திருக்கோவில் வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி ந.புள்ளநாயகம் ஓய்வு நிலை வங்கிமுகாமையாளர் ஆனந்தா ஏஜீ இராஜேந்திரம் கவிஞர் நிலாதமிழின்தாசன் தில்லையம்பலப்பிள்ளையார் ஆலயத் தலைவர் கணேசமூர்த்தி பிரதேசசபை உறுப்பினர் க.சரவணமுத்து ஓய்வுபெற்ற பிரதிக்கல்விப்பணிப்பாளர் சா.இராஜேந்திரன் ஆகியோர் உரையாற்றினர்.
இந்நிகழ்வில் வரவேற்புரையினை ஆசிரியர் ஆசைத்தம்பி நிகழ்த்தியதுடன் நன்றியுரையினை அவரது புதல்வர் வைத்திய கலாநிதி செ.சிவதாஸ் நிகழ்த்தினார். (பாவாணர் அக்கரைப்பாக்கியன்)