(ரணா)
சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த சம்பந்தன் ஐயா போன்ற ஒருவரை பிரதமராக நியமிக்கின்ற தைரியம் ஜே. வி. பியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸநாயக்கவுக்கு இருக்குமானால் அவரின் வெற்றி இந்நாட்டின் சரித்திரத்தில் யுக புரட்சியாக பதிவு செய்யப்படும் என்று கிழக்கு தேசம் விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக பொருளாளருமான வஃபா பாருக் தெரிவித்தார்.
இது தொடர்பாக இவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளவை வருமாறு
ஜனாதிபதி தேர்தல் கள நிலைவரம் மாறி கொண்டு வருகிறது. விசேடமாக முஸ்லிம்களுக்கான தெரிவுகளில் இருந்த நிர்ப்பந்தம் சற்று தளர்வடைகின்றது. ஒரு புறம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐ. தே. கட்சியால் அறிவிக்கப்பட உள்ள வேட்பாளரும், மறுபுறம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவால் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளரும் என இரண்டு தெரிவுகளுக்குள் மட்டுப்படுத்தப்பட்டு இருந்த தெரிவு பட்டியல் இப்போது மூன்றாக விஸ்தரிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஜனநாயக தெரிவு சற்று விசாலமாகி உள்ளது.
முஸ்லிம்களின் அபிலாசைகளை ஒரு பொருட்டாக கொள்ளாமல் டயஸ்போராவினதும், மேலைத்தேய நாடுகளினதும் விருப்புகளுக்கு ஏற்ற விதத்தில் எல்லா விடயங்களிலும் செயற்படுகின்ற ரணிலின் தலைமையிலான ஐ. தே. க சார்பு வேட்பாளரை ஆதரிக்க விரும்பாத முஸ்லிம்களுக்கும்,
யார் என்ன சொன்னாலும் கடந்த காலங்களில் நடைபெற்ற முஸ்லிம் விரோத அட்டூழியங்களுக்கு ராஜபக்ஸக்கள்தான் காரணம் என்று நம்பி கொண்டிருக்கும் முஸ்லிம் சமூகத்துக்கும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள ஜே. வி. பியின் வேட்பாளர் நிர்ப்பந்த தெரிவில் இருந்து விடுதலையை கொடுத்து உள்ளார் என்பதில் சந்தேகம் இல்லை. முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல நாடு பூராவும் உள்ள சமாதானத்தையும், ஐக்கியத்தையும், ஊழலற்ற ஆட்சியையும் எதிர்பார்க்கும் புதிய தலைமுறைக்கும் அனுரகுமாரவின் களமிறங்கல் புத்துணர்ச்சியை கொடுத்து உள்ளது என்பதும் திண்ணம் ஆகும்.
இன ரீதியான சுயாட்சிக்கு கொள்கை ரீதியான உடன்பாடு அற்ற ஜே. வி. பியின் வேட்பாளர் தமிழ் மக்களை பாரிய அளவில் கவர மாட்டார். என்றாலும் முற்போக்கு சிந்தனை கொண்ட ஒரு தொகை தமிழ் மக்களின் ஆதரவு அனுர குமாரவுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. பிரசார உத்திகளில் ஜே. வி. பி மிக சிறந்த அணுகுமுறையை கொண்டு உள்ளது என்பதை காலிமுகத்திடலில் சேர்ந்த சன திரள் சான்று பகர்கின்றது. அனுர குமார வெற்றி பெற்றாலும் பாராளுமன்ற பலம் இன்றி அவரால் எதை சாதிக்க முடியும்?, பிரதமராக யாரை நியமிப்பார்? என்பன விடை காண வேண்டி நிற்கின்ற பிரதான கேள்விகளாக உள்ளன. சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த சம்பந்தன் ஐயா போன்ற ஒருவரை நாட்டின் பிரதமராக நியமிக்கும் தைரியம் அனுரவுக்கு இருக்குமேயானால் ஒரு யுக புரட்சியாய் அவரின் வெற்றி பதியப்படும்.
பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியிலும் சிங்கள தேசியவாதிகளின் பலத்த சவால்களுக்கு மத்தியிலேயேதான் ஒவ்வொரு முற்போக்கான காரியங்களையும் செய்ய நேரும் என்ற யதார்த்தத்தை உணர்ந்தவராகவே அனுரகுமார களம் இறங்கி இருப்பார் என்பது எமது நம்பிக்கையாக உள்ளது. நல்லவை நடக்க எமது பிரார்த்தனைகளையும், வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றோம்.
Attachments area