சர்வாதிகாரத்திற்கு எதிராக ஒன்றுபட்ட எதிர்ப்பினை அனைவரும் இணைந்து சர்வதேசத்திற்கு காட்டுவோம்.
என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தரும் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் அறைகூவல்விடுத்தார்.
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான தமிழ்பேசும் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவுதெரிவித்து நேற்றுக்காலை காரைதீவில் இந்த அறைகூவலினை காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் விடுத்தார்.
அவர் மேலும் கூறுகையில்
இலங்கைக்கு சுதந்திரம் ஆங்கிலேயரினால் கிடைத்த போதிலும் இங்கு வாழும் பூர்வீக குடிகளான எம் தமிழ் இனத்துக்கு இன்று வரை சுதந்திரம் கிடைக்கவில்லை.
டகிழக்கு பிரதேசங்களில் நாளை நடைபெறவிருக்கும் மாபெரும் அமைதி பேரணிக்கு எங்களுடைய மக்கள் பூரணமான ஆதரவினை வழங்க வேண்டும். ஏனென்றால் வட கிழக்கு பிரதேசங்களில் தமிழர்களுடைய இரு நூறுக்கு மேற்பட்ட ஆலயங்கள் அதே போன்று எங்களுடைய பாரம்பரிய பிரதேசங்கள் வனபரிபாலன இலாகா தொல்பொருள் திணைக்களத்தினால் கபழீகரமான நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுத்து கொண்டு வருகின்றது .
வடக்குஇ கிழக்கினை இராணுவ ஆட்சியாக மாற்றிக்கொண்டு வரும் இலங்கை அரசு தமிழர்களின் இருப்பினை இல்லாதொழிக்கவும்இ தமிழர்களின் பண்பாட்டுச் சின்னங்களை அழிப்பதற்காகவும் பல முயற்சிகளை இன்றுவரை முன்னெடுத்து வருகின்றது.
பல்வேறு திணைக்களங்கள் மூலமாகவும் பௌத்த மயமாக்கலை முன்னெடுத்துவரும் இலங்கை அரசு தமிழர்கள் தங்கள் சொந்த இடங்களில் சமய வழிபாடுகளை மேற்கொள்வதற்கும் தடைகளை விதிக்கின்றது.
வடக்கில் குருந்தூர் மலை ஐயனார் கோவில்இ வெடுக்குநாறி மலை சிவன் கோயில் மற்றும் கிழக்கில் கன்னியா பிள்ளையார் கோயில்இ குசனார் முருகன் ஆலயம் போன்ற தமிழர்களின் பல்வேறு இடங்களிலும் தமிழர்கள் வழிபாடுகளை மேற்கொள்ள இடமளிக்காது பௌத்த ஆலயங்களை நிறுவுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது.
தமிழர்களுக்கு மட்டுமல்லாது முஸ்லீம் சமுதாய மக்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது நீங்கள் அனைவரும் அறிந்த விடயமே.
இவ்வாறு எம் தமிழ் மக்களுக்கு இடம்பெறும் அநீதிகளுக்கு எதிராக எமது பூரணமான ஆதரவை தமிழ் தேசிய கூட்டமைப்பும் வழங்கவுள்ளது . இதற்கு அம்பாறை மாவட்ட தமிழர்களும் ஆதரவினை வழங்கவேண்டும்.
குறிப்பாக போர் முடிந்த கையோடு கிட்டத்தட்ட 12 வருடங்களாக திணிக்கப்பட்ட அடக்குமுறையை சந்தித்த எமது தமிழ் மக்கள் இப்போது மோசமான கால சூழலை எதிர்கொண்டுள்ளோம் . குறிப்பாக தமிழர்கள் தொடர்ச்சியாக துன்புறுத்தப்படுவதும் வாழ்விடங்கள் கபழீகரம் செய்யப்படும் செயற்பாடு அதி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
வடகிழக்கில் பழம்பெரும் ஆலயங்கள்பௌத்த தேவாலயங்களாக மாற்றப்படுவதும் அங்கு அரசபடையினர் குவிக்கப்பட்டுவதும் அங்குள்ள எமது மக்கள் தொடர்ச்சியாக துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கபடும் சூழலில்தான் சிவில் அமைப்புக்கள் இந்த போராட்டத்தை முன்னெடுக்கின்றனர்.
வடகிழக்கு பிரதேசங்களில் முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் எமது மக்கள் ஆதரவினை வழங்குவதன் மூலம் . எமது ஒருமித்த குரலாக எதிர்ப்பினை சர்வதேசத்திற்கு காட்டுவோம். என்றார்