மட்டக்களப்பு மாவட்டத்தின் பாரம்பரிய மேய்ச்சற்தரையாக விளங்குகின்ற மயிலத்தமடு, மாதவணை பிரதேசத்தில் அயல்மாவட்டத்தின் பெரும்பான்மை சமூகத்தை நீதியற்ற முறையில் வேளாண்மைக்காகக் குடியமர்த்தி காடழிப்பு செய்து எமது மேய்ச்சற்தரை நிலங்களை எமது மாவட்டத்தின் பண்ணையாளர்களிடமிருந்து பறிக்கும் திட்டமிட்ட செயலைச் செய்து வருகின்றது இந்த அரசாங்கம்.
சிங்கள மக்கள் எங்கள் எதிர்கலள்ள, அவர்களை எங்கள் எதிரிகளாக்குகின்றது இந்த அரசாங்கம் என மயிலத்தமடு, மாதவணை மேய்ச்சற்தரை கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பேசுபொருளாக இருக்கின்ற மயிலத்தமடு மாதவணை பிரதேசத்தின் நிலைமைகள் தொடர்பில் ஆராயும் முகமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்று இன்றைய தினம் (13) மேற்படி பிரதேசத்திற்குக் களவிஜயம் மேற்கொண்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், கோ.கருணாகரம், த.கலையரசன், இரா.சாணக்கியன், முன்னாள் கிழக்கு மாகாணசபைப்பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாநகரசபை உட்பட உள்ளுராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வாலிபர் முன்னியினர் உட்பட பலரும் இவ்விஜயத்தை மேற்கொண்டனர்.
இதன்போது பண்ணையாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் மேற்படி தரப்பினர் கேட்டறிந்து கொண்டதுடன், கடந்த காலங்களில் இப்பிரச்சினைகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கையாண்ட நடவடிக்கைகள் தொடர்பில் பண்ணையாளர்களுக்குத் தெளிவு படுத்தப்பட்டது.
தற்போது அரசாங்கத்துடன் இருக்கும் இம்மாவட்டத்தைப் பிரதநிதித்துவப்படுத்தும் இராஜாங்க அமைச்சர் மற்றும் சக பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோர் இவ்விடயங்கள் தொடர்பில் எவ்வித கரிசனையும் கொள்வதாக இல்லை என்கின்ற விடயங்களை பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
அத்துடன், பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தினை கொண்டு நடாத்தும் இந்த மேய்ச்சற்தரையினை எவ்வாறாவது பண்ணையாளர்களுக்கே பெற்றுத் தருவதற்கு ஆவன செய்து தருமாறும், வேறு எந்த உதவிகளும் பண்ணையாளர்களுக்குத் தேவையில்லை எனவும், தாங்கள் கால்நடைகளை வளர்த்தே தங்கள் ஜீவனோபாயத்தை மேற்கொள்ள முடியும் என்றும் பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
அத்துடன் தங்கள் காளைகள் அடித்து அழிக்கப்பட்டதுடன், கால்நடைகளும் கொல்லப்பட்டும், காணாமற்படுத்தப்பட்டும் வருகின்றமை தொடர்பில் தெரியப்படுத்தப்பட்டது. ஊடகங்களில் வேளாண்மை செய்யும் அயல் மாவட்டத்தவருக்கு 03 மாதகாலம் அவகாசம் வழங்கப்படுகின்றது போன்ற செய்திகள் எல்லாம் வருகின்றன அவை அவர்களுக்கான அவகாசம் அல்ல எமது கால்நடைகளின் அழிவுக்கான அவகாசமாகவே எமக்குத் தோணுகின்றது.
எமது வளமான காடுகளை அழித்து அதில் வேளான்மை செய்து விட்டு எம்மை மலைப் பகுதியில் கால்நடைகளை வளர்க்கச் சொல்லுகின்றார்கள். மலைகளிலும், புற்கள் அற்ற பிரதேசங்களிலும் நாங்கள் எவ்வாறு கால்நடைகளை மேய்ப்பது. அத்துடன் அவர்கள் தொப்பிகலை மலைக்கு அப்பால் எம்மைச் சொல்லுகின்றார்கள். கேட்டால் அதற்கப்பால் தான் மட்டக்களப்பு என்று சொல்லுகின்றார்கள். இவ்வாறு இருக்கின்றது நிலைமை.
கடந்த ஆட்சியின் போது வன இலாகா மற்றும் மகாவலி அதிகாரசபை ஆகியன உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டன ஆனால் தற்போது அவர்கள் எவ்வித அக்கறையும் கொள்வதாக இல்லை. ஆக்கிரமிப்புச் செய்பவர்களுக்கே ஆதரவாகச் செயற்படுகின்றனர். ஆனால் நாங்கள் ஏதேனும் கிளைகளை வெட்டினாலும் உடனே வழக்குப் பதிவுகள் இடம்பெறுகின்றன. அவர்கள் மிகப் பெரிய காட்டு வளத்தையே அழித்துள்ளனர் அவர்கள் தொடர்பில் எந்த நடவடிக்கைகளும் இல்லை. இங்கு ஒரே தேசம், ஒரே மக்கள், ஒரே சட்டம் என்று சொல்லப்படுகின்ற போதிலும் அது அவ்வாறு நடைபெறுவதில்லை, பெரும்பான்மையிருக்கு ஒருவாறாகவே சட்டம் இருக்கின்றது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் தெரிவிக்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களான கோ.கருணாகரம் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோரின் பெயரில் எது மாவட்டத்தின் பண்ணையாளர்கள் சார்பில் மேய்ச்சரை விடயம் சம்மந்தமாக எமது பண்ணையாளர்கள் பரம்பரை பரம்பரையாக நூறு வருடங்களுக்கும் மேல் கால்நடைகளைப் பராமரித்து வந்த இடம் என்ற விடயத்தை முன்னிலைப்படுத்தி ஒரு வழக்குத் தொடரவுள்ளோம். ஆரம்பத்தில் இவ்வழக்குத் தொடர்தல் எங்களுக்குச் சாதகமாக அமையுமோ இல்லையோ என்ற ஒரு யோசனை எமக்கு இருந்தது. ஆனால் வேறுவழியில்லாமல் எமது பண்ணையாளர்களின் எதிர்காலம் கருதி இந்த வழக்கினைத் தொடரலாம் என்று இருக்கின்றோம். இது பண்ணையாளர்களின் வாழ்வா சாவா என்ற விடயம் என்பதால் எம்மாளான இந்த முயற்சியை மேற்கொண்டு பார்ப்போம் என்று தெரிவித்தார்.