கிளிநொச்சி – அம்பாள்குளம் கிராமத்தில் கடந்த 21ஆம் திகதி சிறுத்தையொன்று அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான 10 பேரும் அடுத்த மாதம் 3 ஆம் திகதிவரை மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டபோது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சம்பவம் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், ஏற்கனவே 7 பேர் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், இன்றைய தினம் மேலும் மூவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.
இன்றைய நீதிமன்ற விசாரணைகளின் போது, பிரதிவாதிகளை விடுவிக்குமாறு அவர்கள் தரப்பு சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதன்போது, வழக்கு தொடுநர் தரப்பில் விளக்கமளித்த கிளிநொச்சி காவல்துறையினர், குறித்த சிறுத்தை பொதுமக்களுக்கு எந்தவிதமான இடையூறுகளையும் ஏற்படுத்தவில்லை என்றும், இந்த சிறுத்தை கொலை செய்யப்பட்டமை தொடர்பில் நாடாளுமனறத்திலும் விவாதிக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் மூன்று காவல்துறை குழுக்கள் விசாரணைகள் முன்னெடுத்து வருவதுடன், மேலும் சிலரை கைது செய்யவேண்டியிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
எனவே, குறித்த பத்துபேரையும் பிணையில் செல்ல அனுமதிப்பதனால் விசாரணைகளையும் முன்னெடுப்பதிலும் மேலும் சில சந்தேகநபர்களை கைதுசெய்வதிலும் பாதிப்புக்கள் ஏற்படலாம் என்றும் காவல்துறையினர் ஆட்சேபனை வெளியிட்டுள்ளனர்.
இதையடுத்து, குறித்த விடயங்களை ஆராய்ந்த நீதவான் சந்தேகத்துக்குரியவர்களின் விளக்கமறியல் காலத்தை நீடித்து உத்தரவிட்டுள்ளார்.