சிறுபான்மை மக்களின் குரலை நசிக்கி நாட்டை சீரழிக்க முயற்சிக்கிறாரா ஞானசார தேரர் ?? : ஹரீஸ் எம்.பி குற்றச்சாட்டு.

பௌத்த சிங்கள மக்கள் தனி சிங்கள தலைவரை தெரிவு செய்ததை போன்று தனி சிங்கள அரசாங்கத்தையும்
தோற்றுவிக்க வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்திருப்பதானது  நாட்டின் இறையாண்மையை முற்றிலும் பாதித்து நாட்டை துண்டாடி பிரிவினைவாதத்தை முன்வைப்போருக்கு சாதகமாக அமைந்து விடும் என்பதுடன் ஈழ போராட்டம் முன்னெடுப்பதை மேலும் வலுப்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச். எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.  
 
நேற்று மாலை இறக்காம பிரதேச சமூக சேவை அமைப்பொன்றின் நிகழ்வில் பிரதம அததியாக கலந்து கொண்டு  சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்  அண்மைய ஊடக  சந்திப்பில் தெரிவித்திருந்த  கருத்துக்கு மறுப்பு தெரிவித்து பேசிய அவர் தனது உரையில் தொடர்ந்தும், 
 
நாட்டில் ஒரு சட்டமே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். எமது நாட்டில் இனங்களுக்கிடையில் சட்டங்கள் வேறுபடுத்தப்பட்டுள்ளன. ஒரு நாட்டில் ஒரு சட்டத்தையே அனைத்து இன மக்களும் பின்பற்ற வேண்டும் என்ற  கொள்கையினை நிறைவேற்றுவதற்கு  முழு ஒத்துழைப்பினையும் பெரும்பாலான மக்கள் வழங்க வேண்டும் என விசக்கருத்தை விதைத்திருக்கிறார்.  அவர் தமிழ் மக்களின் தேச வழமை சட்டம், முஸ்லீம்களின் விவாக விவாகரத்து சட்டம், சிங்களவர்களின் கண்டிய சட்டம் ஊடாக நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்காவண்ணம் நாட்டின் இறையாண்மையை மதித்து சந்தோசமாக வாழும் மூவின மக்களையும் பிரித்து, நாட்டை சீரழிக்கும் வேலைத்திட்டத்தை வெளிநாட்டு அஜந்தாக்களுக்காக ஞானசார தேரர் முன்னெடுக்கின்றாரா என சந்தேகம் எழுகின்றது.
 
அடிப்படைவாதத்திற்கு துணைபோனதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள  முஸ்லிம், தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும் புறக்கணிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ள அந்த கருத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவர் என்ற அடிப்படையிலும் முஸ்லிம் மக்களின் மக்கள் பிரதிநிதி என்ற அடிப்படையிலும் வன்மையாக கண்டிக்கிறேன். முஸ்லிம் அரசியலில் உள்ள எந்த ஒரு தலைவனும் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டதாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்க வில்லை. அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்ட யாரும் முஸ்லிம் அரசியல் தலைவர்களாக இருக்கவும் முடியாது. 
 
நாட்டின் முக்கியமான தேர்தல் ஒன்று நெருங்கும் நேரத்தில் இவ்வாறான கருத்துகளை தெரிவித்து நாட்டின் இறையாண்மையை முற்றிலும் பாதிக்க அவர்களை போன்ற தீய சக்திகளுக்கு  இடமளிக்க முடியாது.  என்றார்.

Related posts