மட்டக்களப்பு மாநகர சபையானது, யுனிசெப் நிறுவனத்துடன் இணைந்து மட்டக்களப்பு மாநகரினை சிறுவர் சினேகபூர்வ மாநகரமாக மாற்றியமைக்கும் செயற்றிட்டத்தினை ஆரம்பித்துள்ளது. இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துதல் தொடர்பிலான கலந்துரையாடல் நேற்று (08.02.2019) மாலை மாநகர குழு மண்டபத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் யுனிசெப் நிறுவனத்தின் சார்பாக மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் என்.அன்ருவ், பிரதம வெளிக்கள அலுவலர் றிபென்சியா, யுனிசெப் சிறுவர் நிதியத்தின் திருகோணமலை மாவட்ட நிர்வாகம் மற்றும் மனிதவள அலுவலர் பைரவி ஆகியோருடன் மாநகர சபையின் ஆணையாளர் திரு.கா.சித்திரவேல், பிரதி ஆணையாளர் நா.தனஞ்ஜெயன், நிர்வாக உத்தியோகத்தர் திருமதி ரோகினி விக்ணேஸ்வரன் உள்ளிட்ட மாநகர சபையின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
சிறுவர்களின் பாதுகாப்பு அவர்களின் சுதந்திரமான வாழ்வியல் முறைகள் என்பவற்றினைக் கருத்தில் கொண்டு மட்டக்களப்பு மாநகரமானது சிறுவர் சினேகபூர்வ மாநகரமாக மாற்றியமைக்கப்படவுள்ளது.
பல வளர்முக நாடுகளில் மேற்படி சிறுவர் சினேகபூர்வ மாநகரங்கள் அமையப்பெற்றிருந்தாலும், இலங்கையில் முதல்முறையாகவும் ஏனைய மாநகர சபைகளுக்கு எடுத்துக்காட்டாகவும் இத் திட்டம் அமையப்பெறவுள்ளதாக யுனிசெப் நிறுவனத்தின் பிரதம வெளிக்கள அலுவலர் றிபென்சியா தெளிவுறுத்தினார்.
அத்துடன் மாநகருக்குள் வாழும் சிறுவர்களின் திறன் விருத்தி சிறுவர்களின் மகிழ்ச்சியான வாழ்க்கை முறையை மாற்றியமைப்பதன் ஊடாக அவர்களை எதிர்காலத்தில் சமுகப் பொறுப்பு மிக்க நற்பிரஜைகளாக வளர்த்தெடுக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.
சிறுவர் சினேக மாநகரை உருவாக்கும் தமது கனவினை நிறைவேற்ற யுனிசெப் நிறுவனமானது முன் வந்தமையையிட்டு தாம் மனம் நெகிழ்வதாகவும், இதனை எமது மாநகரின் சிறுவர்கள் அனுபவிக்கும் வகையில் அவர்களின் உரிமைகளையும், அவர்களின் பங்களிப்புகளையும் முன் நிறுத்தி தமது திட்டத்தினை வகுக்கவுள்ளதாகவும் மாநகர முதல்வர் கருத்துரைத்தார்.
குறிப்பாக மாநகருக்குள் வதியும் பெற்றோர்களுக்கும் அவர்களின் பிள்ளைகளுக்கும் இடையில் ஏற்படும் நெருக்கத்தினை வெகுவாக அதிகரிப்பதன் மூலம் பெற்றோர் அதிக நேரத்தினை தமது பிள்ளைகளுடன் போக்குவதற்கான செயற்பாடுகளையும் மேற்கொள்ளத் தயாராகவுள்ளதாவும், இதற்கான முதற்படியாக மாநகர பாலர் பாடசாலைகள், சிறுவர் பூங்காக்கள் போன்றவற்றினை மாற்றியமைப்பதாகவும் தெரிவித்தார்.
அதுமட்டுமன்றி தற்கொலை சிந்தனைகள், போதைப்பொருள் உள்ளிட்ட பாவனைகளை எதிர்கால சந்ததியினரிடமிருந்து களைந்து அவர்களை உலக சவால்களை எதிர்நோக்கும் துனிச்சல் மிக்கவர்களாக உருவாக்க தான் விரும்புவதாகவும், இனிவரும் காலங்களில் சிறுவர்கள் தனியாக எமது மாநகருக்குள் நடமாடுவதற்கும், பெரியவர்களைப் போல் அவர்களும் தமது தேவைகளை நேரடியாக மாநகர சபை உள்ளிட்ட திணைக்களங்களை அனுகி பெற்றுக் கொள்வதற்குமான செயற்பாடுகளை மேற்கொள்ள அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.