தற்கொலை தாக்குதலுக்கு இலக்கான தேவாலயங்களில் ஒன்றான மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு பாதுகாப்புச் செயலாளர் சாந்த கொட்டேகொட உள்ளிட்ட குழுவினர் விஜயம் செய்துள்ளனர்.
குறித்த குழுவினர் இன்று (சனிக்கிழமை) இந்த விஜயத்தை மேற்கொண்டு, இராணுவத்தினரால் புனர் நிர்மாணிக்கப்பட்டுவரும் கட்டடத்தை பார்வையிட்டனர்.
இந்த விஜயத்தில் பாதுகாப்பு செயலாளருடன், இராணுவ தளபதி மகேஷ் சேனநாயக்க, கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர உட்பட இராணுவ அதிகாரிகளும் இணைந்துகொண்டனர்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாதுகாப்பு செயலாளர் கொட்டேகொட, தாக்குதலுக்கு பின்னர் நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல்களில் 250இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், 500இற்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர்.
இந்த தாக்குதலில் சீயோன் தேவாலயத்தில் மாத்திரம் 30இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்ததுடன், பலர் காயமடைந்திருந்தனர்.
தாக்குதலுக்குப் பின்னர் குறித்த தேவாலயம் இராணுவத்தினரால் புனர் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றைமை குறிப்பிடத்தக்கது.