சூரன்போர் நடாத்தியமைக்காக ஆலயம்மீது சுகாதாரஅதிகாரி வழக்கு!தை 13இல் நீதிமன்றுக்கு வருமாறு நிருவாகத்திற்கு அழைப்புக்கட்டளை!

வரலாற்றுப்பிரசித்திபெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்தில் இம்முறை முறையான அனுமதியின்றி சூரன்போர் நடாத்தியமைக்கு எதிராக ஆலயநிருவாகம் மீது, திருக்கோவில் பிரதேச சுகாதாரவைத்தியஅதிகாரி வழக்குத்தொடுத்துள்ளார்.
 
ஆலயவளாகத்தில் முறையான அதிகாரியின் அனுமதியினைப் பெறாமல்  சூரன்போர் நிகழ்விற்கு பொதுமக்களை ஒன்றுகூட்டியமை, சமுகஇடைவெளி பேணப்படாமை, முகக்கவசம் அணியாமை ஆகிய குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இவ்வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
 
திருக்கோவில் பிரதேச சுகாதாரவைத்தியஅதிகாரி டாக்டர் பி.மோகனகாந்தன் முறைப்பாட்டாளராக அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றில் இந்த வழக்கைத்தாக்கல்செய்துள்ளார்.
 
வழக்கை ஏற்றுக்கொண்ட நீதிவான்நீதிமன்றம்,  இதற்கான நீதிமன்ற வழக்கு எதிர்வரும்  ஜனவரி மாதம் 13ஆம் திகதி காலை 9மணிக்கு நடைபெறும் என்றும், ஆலயநிருவாகத்தினர் ஆஜராகவேண்டும் என்று நீதிமன்று அழைப்புக்கட்டளை அறிவித்தல் கொடுத்திருக்கிறது.
 
திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்தலைவர் சுந்தரலிங்கம் சுரேஸ் உள்ளிட்ட நிருவாசபை உறுப்பினர்களுக்கு இவ்வறிவித்தல், அந்தந்த பிரதேச பொலிஸ் நிலையமூடாக கையளிக்கப்பட்டிருக்கின்றது.
 
தேசத்துக்கோவில் என்பதால் ஆலயநிருவாகசபை உறுப்பினர்கள் மாவட்டத்தின் பலபாகங்களிலும் இருப்பதும், இவ்வருட வருடாந்த ஆடிஅமாவாசை மஹோற்சவம் கொரோனாகாரணமாக நடாத்தப்படவில்லை என்பதும்  குறிப்பிடத்தக்கது.

Related posts