ஜனநாயகப் போராளிகள் கட்சியினர் திருகோணமலை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களை இன்றைய தினம் சந்தித்து தேர்தல் விடயங்கள் குறித்து கலந்துரையாடினர். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டப் பணியகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது.
ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் மற்றும் அதன் திருகோணமலை மாவட்ட பிரதிநிதி க.சஞ்சீவன் ஆகியோர் இச் சந்திப்பினை மேற்கொண்டிருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் சார்பில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளையின் தலைவரும், வேட்பாளருமான க.ச.குகதாசன், வேட்பாளர்களான க.ஜீவரூபன் மற்றும் இரா.சச்சிதானந்தம் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.
இதன் போது சமகால அரசியல் நிலைமைகள், தேர்தல் களத்தில் முன்னாள் போராளிகளின் வகிபாகம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்கால செயற்பாடுகளில் முன்னாள் போராளிகள் தொடர்பிலான விடயங்கள் போன்ற பல்வேறு கருத்தாடல்கள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்போது எதிர்காலத்தில் முன்னாள் போராளிகளுக்கென தொழிற்பேட்டை அமைப்பது தொடர்பில் வேட்பாளர் க.ச.குகதாசன் அவர்களால் விசேடமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.