அரசாங்கம் மாத்திரம் அல்லாமல் இந்த நாட்டுக்காக தன் உயிரைக் கூட தருவேன் என்று கூறும் ஜனாதிபதியால் கூட இப்படுகொலைச் சம்பவத்திற்குப் பின்னால் இருக்கும் அரசியல்வாதிகளை விசாரிக்க முடியாமல் இருக்கின்றது என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
இ
தமிழீழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் ஸ்ரீ சபாரெத்தினம் அவர்களின் 33வது நினைவு தின நிகழ்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்று நாங்கள் எமது போராட்டத்தின் விழிம்பில் நின்று கொண்டிருக்கின்ற நேரத்தில், நாங்கள் போராடியதற்கான ஒரு அரசியற் தீர்வைக் காண்பதற்காக நின்று கொண்டிருக்கின்ற நேரத்தில் எமது போராட்டம் எமது மக்களின் தார்மீக உரிமையைக் கோரும் போராட்டம் என்பதை அனைவரும் உணர்ந்திருந்தாலும் பெரும்பான்மை சிங்களத் தலைவர்கள் தற்போது தான் உணர்ந்திருக்கின்றார்கள்.
தமிழர்களின் போராட்டம் உரிமை சார்ந்த நியாயமான போராட்டம், வீணான படுகொலைகளை நாங்கள் நடத்தவில்லை என்பதை அவர்கள் தற்போது 21ம் திகதி இடம்பெற்ற படுகொலைத் தாக்குதலை ஒப்பிட்டே உணர்ந்திருக்கின்றார்கள். இந்த முஸ்லீம் அடிப்படைவாதிகள் இந்தக் குண்டு வெடிப்பின் மூலம் தாங்கள் பயங்கரவாதிகள், ஈவிரக்கம் அற்றவர்கள் என்பதையே நிரூபித்திருக்கின்றார்கள்.
எமது தமிழர் போராட்டம் வீருகொண்டெழுந்த நேரத்தில் இந்த நாட்டின் அரசு ஜிஹாத் எனும் அமைப்பை தமிழர் போராட்டத்திற்கெதிராக முஸ்லீம் கிராமங்களில் உருவாக்கியது. அது பிற்காலத்தில் ஊர்காவற் படையாக மாறியது. முஸ்லீம் காங்கிரஸ் உருவாகிய காலத்தில் அந்த ஜிஹாத் அமைப்பில் இருந்தவர்கள் முஸ்லீம் காங்கிரசுடன் இணைந்து அரசியல் நீரோட்டத்திலே கலந்தார்கள். அவர்கள் அந்தப் பயங்கரவாதிகளை ஊக்குவித்து இன்றும் அரசியல் செய்து வருகின்றார்கள்.
இன்று இந்த நாட்டில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களுக்கும், இந்த நாடு இருக்கும் கொதிநிலைக்கும் காரணமாக இருக்கும் அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் இந்த நாட்டின் அரசும் பாதுகாப்புப் படைகளும் கண்டும் காணாதவர்களாக நடக்கின்றது போன்றே தோன்றுகின்றது.
கடந்த ஒக்டோபர் 26ம் திகதி இந்த நாட்டில் ஒரு அரசியல் ஸ்திரமற்ற தன்மை ஏற்பட்டது. பிரதமராக இருந்த ரணில் ஜனாதிபதியால் மாற்றப்பட்டு மஹிந்த பிரதமராகக் கொண்டு வரப்பட்டார். அதனைத் தொடர்ந்து வவுணதீவில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கொலை செய்யப்பட்டார்கள். அந்த சம்பவத்துடன் தொடர்புபடுத்தி முன்னாள் போராளிகள் கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இந்தத் தருணத்தில் தற்போது இடம்பெற்றிருக்கும் குண்டு வெடிப்புடன் தொடர்புபட்டவர்கள் வவுணதீவுப் பொலிசாரின் படுகொலையுடனும் தொடர்புபட்டிருப்பது தெரியவந்துள்ளது.
தேசிய தொஹீத் ஜமாத் எனும் அமைப்பின் உறுப்பினர்களே இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பில் பல்வேறு தகவல்களும் வருகின்றன. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இருந்த காலத்தில் இவர்கள் இலங்கை இராணுவப் புலனாய்வில் சம்பளம் பெற்றவர்களாக இருந்திருக்கின்றார்கள் என்ற செய்திகளும் வெளியாகின்றன.
அதற்கு மேலாக கிழக்கு மாகாணத்தில் ஆளுநராக இருக்கும் கௌரவ ஹிஸ்புல்லா அவர்களை இந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தில் சம்மந்தப்பட்டவர்களுடன் தொடர்புபடுத்தி செய்திகள் வந்துள்ளன. வடக்கில் ரிசாட் பதியுதீன் மீதும் குற்றம் சாட்டப்படுகின்றது. இந்த நேரத்தில் இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் இரண்டு பேரினவாதக் கட்சிகளில் ஒரு கட்சிக்கு ஒருவர் தேவைப்படுகின்றார். மற்றைய கட்சிக்கு மற்றவர் தேவைப்படுகின்றார். அதற்காக இவர்களை ஒரு விசாரணைக்குக் கூட அழைக்க முடியாத நிலையில் இந்த அரசாங்கம் இருக்கின்றது.
இந்த அரசாங்கம் மாத்திரம் அல்லாமல் இந்த நாட்டுக்காக தன் உயிரைக் கூட தருவேன் என்று கூறும் ஜனாதிபதியால் கூட இப்படுகொலைச் சம்பவத்திற்குப் பின்னால் இருக்கும் அரசியல்வாதிகளை விசாரிக்க முடியாமல் இருக்கின்றது.
மட்டக்களப்பு எல்லையில் உருவாக்கப்படும் மட்டக்களப்பு பல்கலைக்கழகம் பற்றி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கே தெரியாமல் இருக்கின்றது. அது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்குள் உள்வாங்கப்படல் வேண்டும். அப்படியில்லாவிடின் அந்தப் பல்கலைக்கழகம் பயங்கரவாதத்திற்கு ஒரு உயர்ந்த தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொடுக்கும் ஒரு இடமாக மாறும் என்பதை இந்த அரசாங்கம் உணர வேண்டும்.
நேற்றைய தினம் கிழக்கு மாகாண ஆளுநரால் மதிய போசனத்துடன் கூடிய ஒரு சந்திப்புக்கு கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதனை நாங்கள் நிராகரித்தோம்;. தன்மேல் உள்ள கறைகளை, பழிகளை எங்கள் மூலமாகக் கழுவுவதற்கான முயற்சியாகவே இந்த சந்திப்பு எற்பாடு செய்யப்பட்டுள்ளது என நான் நினைக்கின்றேன்.
இந்தப் பயங்கரவாதத்தை ஒட்டுமொத்தமாக முஸ்லீம் மக்கள் விரும்பவில்லை. ஒரு குறிப்பிட்ட அரசியல்வாதிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தகின்றார்களே தவிர அனைத்து முஸ்லீம் மக்களும் இதை ஆதரிக்கவில்லை. கிழக்கு ஆளுநருக்கு எதிராக இன்று பல அரசியல்வாதிகள் போர்க்கொடி தூக்கியுள்ளார்கள். முஸ்லீம் மக்களும் இவருக்கெதிராக செயற்படும் நிலைமையே தற்போது காணப்படுகின்றது.
இன்று காத்தான்குடியைச் சேர்ந்தவர் என்று சொல்லி இலங்கையில் எப்பாகத்திலும் வீடோ, வியாபாரமோ செய்ய முடியாத ஒரு நிலைக்கு அந்த மக்களைக் கொண்டு சென்றுள்ளார்கள். இதற்குக் காரணம் இந்தப் பயங்கரவாத அமைப்பும், அதனை ஊக்குவித்துக் கொண்டிருக்கும் இப்படியான அரசியல்வாதிகளும் என்பதை அந்த மக்கள் உணர்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டு பத்து வருடங்களின் பின்னர் ஒரு பயங்கரவாதம் இந்த நாட்டிலே புது வடிவத்திலே வந்து ஒட்டுமொத்த மக்களையும் நிம்மதியற்ற வாழ்க்கைக்குக் கொண்டு சென்று கொண்டிருக்கின்றது. இந்த அரசும் பாதுகாப்புத் துறையும் நினைத்தால் இப்பயங்கரவாதத்தை மிகக் குறுகிய காலத்திற்குள் முற்றுமுழுதாக இல்லாமல் ஆக்க முடியும்.
வடக்கு கிழக்கில் ஒன்றரை இலட்சத்திற்கு மேல் பாதுகாப்புப் படைகள் இருக்கின்றன. அதற்கு மேலாக பொலிஸ் படைகள் இருக்கின்றன. இவர்கள் அனைவரும் முஸ்லீம் கிராமங்களைச் சுற்றிவளைத்து ஒவ்வொரு வீடாகத் தேடினால் ஒழித்து வைத்திருக்கும் வெடிப் பொருட்களும், ஆயுதங்களும், குற்றவாளிகளும் பிடிபடும் நிலை உருவாக்கும்.
எல்லாவற்றிகும் மேலாக இன்றும் வீதிகளில் சோதனைகள், சுற்றிவளைப்புகள் என்ற போர்வையில் மிகவும் துன்பகரமான நிலையை தமிழ் மக்களே எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றார்கள். தமிழ் மக்களுக்கும் இந்தப் பயங்கரவாத் தாக்குதலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லாமல் இருக்கும் போது சோதனை என்ற பெயரில் அவர்களை துன்புறுத்துவதை நிறுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.