வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் நேற்றைய (27) கூட்டம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஊடக அறிக்கையொன்றை விடுத்துள்ளது.
தமிழ் மக்கள் வன பாதுகாப்பு , வன விலங்கு பாதுகாப்பு மற்றும் தொல்பொருள் திணைக்களம் போன்ற திணைக்களங்களின் செயற்பாடுகளினால் பெரும் அசௌகரியங்களை எதிர் நோக்கியதாக இதன் போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமிழ் மக்களுக்கு அவர்கள் வசமுள்ள காணிகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படாமையை கூட்டத்தில் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர், இந்தப் பிரச்சினையைக் கையாண்டு தீர்வினைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், மூன்று திணைக்களங்களின் பிரதானிகள், காணி ஆணையாளர் மற்றும் வடக்கு – கிழக்கில் உள்ள மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள் ஆகியோரை உள்ளடக்கிய ஒரு அமர்வு ஒன்றை மிக விரைவாக ஒழுங்கு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டதாக கூறப்பட்டுள்ளது.
1980 களில் மகாவலி சட்டத்தின் கீழ் மகாவலியிருந்து நீர் வருவதற்கு முன்னரே ஏற்படுத்தப்பட்ட திட்டம் என தௌிவுபடுத்தியதுடன், இத்திட்டமானது வேறு மாவட்டங்களில் இருந்து மக்களைக் கொண்டு வந்து குடியமர்த்திய வெலி ஓயா அல்லது மணலாறு திட்டம் எனவும் பின்னர் ஏற்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களினால் இத்திட்டம் நிறுத்தப்பட்டதாகவும் இரா. சம்பந்தன் தெரிவித்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உடனடியாக அதிகாரிகளை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட ஜனாதிபதி, அத்தகைய திட்டங்கள் இடம்பெறாது எனவும் குறித்த இடத்திற்கு நேரடியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களோடு சென்று சரியான நிலையை உறுதிப்படுத்துவதாக உறுதியளித்ததாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அரசாங்கத்துறைகளில் வேலை வாய்ப்பு விடயத்தில் தமிழ் இளைஞர்களுக்கு பாரபட்சம் காட்டுவதனை இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியதாக மேலும் கூறப்பட்டுள்ளது.
விவசாயம், தொழிற்துறை , மீன்பிடி, கால்நடை வளர்ப்பு , வீடுகள் நிர்மாணம், முக்கிய வீதிகள் அமைத்தல், பாரிய நீர்ப்பாசனம், சுகாதாரம் , கல்வி மற்றும் தொழில் வாய்ப்பு போன்றவற்றின் அபிவிருத்தி செயற்பாடுகளின் போது, ஏற்றுமதியை ஊக்குவிக்கும் விதமாக தனியார் துறையின் பங்களிப்பு அவசியம் என்பதனை எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.