எம்.ரீ. ஹைதர் அலி
ஜப்பான் தூதுவராலயத்தின் அரசியல் பிரிவின் இரண்டாம் செயலாளர் டெகசி ஒசாகி மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் இற்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு ஒன்று (27.09.2019) காலை காத்தான்குடியிலுள்ள பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கின் இல்லத்தில் இடம்பெற்றது.
இந்த சந்திப்பில் ஆக்கபூர்வமான பல விடயங்கள், முஸ்லிம் சமூகம் சம்பந்தமாகவும் நாட்டின் அரசியல் சம்பந்தமாகவும் ஆராயப்பட்டது.
குறிப்பாக கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகத்திற்கெதிரான திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்படும் வெறுப்பூட்டப்படும் பேச்சுக்கள், ஆடை விவகாரத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் மார்க்கத்தை போதிக்கும் மதரசாக்களில் கல்வி கற்கும் மாணவர்கள் மற்றும் மதரசாக்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகள் உட்பட முஸ்லிம்கள் சமகாலத்தில் முகம்கொடுக்கும் பல பிரச்சினைகள் சம்பந்தமாக டெகசி ஒசாகியிற்கு விளக்கமளிக்கப்பட்டது.
உள்ளூர் மற்றும் தேசிய ரீதியிலான சமகால அரசியல் சம்பந்தமாகவும் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது, அரசியல் ரீதியாக முஸ்லீம் சமூகம் எதிர்கொண்டுவரும் பிரச்சனைகள், இனவாத அடக்குமுறைமைகள் தொடர்பாகவும், நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்களின் பங்களிப்பு எவ்வாறு அமைய வேண்டும், எதிர்வரும் அரசாங்கத்துடன் முஸ்லிம்கள் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்பன தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், காத்தான்குடியின் தற்போதைய பாதுகாப்பு நிலவரம், எதிர்கால பாதுகாப்பு திட்டங்கள் தொடர்பிலும், 21/4 தாக்குதலுக்கு பின்னரான காத்தான்குடியின் களநிலவரம், அதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகள், மற்றும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நபர்களின் குடும்ப வாழ்வாதார பிரச்சனைகள் தொடர்பாகவும், தொழில்சார் பிரச்சனைகள் மற்றும் இன்னோரன்ன சமூக பிரச்சனைகள் சம்பந்தமாகவும் பேசப்பட்டது.
பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னரான நாட்டின் பொருளாதார வீழ்ச்சி, பாதிப்புக்குள்ளான சுற்றுலாத்துறை சம்பந்தமாகவும், இவற்றை மேம்படுத்த அரசு மேற்கொண்டுவரும் எதிர்கால திட்டங்கள் தொடர்பாகவும் இச்சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக பாதிப்புக்குள்ளகியிருக்கும் காத்தான்குடி மக்களின் வாழ்வாதார பிரச்சனைகள், காத்தான்குடி வர்த்தகர்களின் தொழில்சார் பிரச்னைகள், வெளியூர்களில் காத்தான்குடி வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் சம்பந்தமாகவும் அவரிடத்தில் தெளிவுபடுத்தப்பட்டது.
மேலும் இளைஞர்களின் வேலையில்லாப்பிரச்சினை ஜப்பான் நாட்டின் அரசாங்கத்தால் வழங்கப்படும் திறமை அடிப்படையிலான வேலைவாய்ப்பு சம்பந்தமாகவும் விரிவாக ஆராயப்பட்டது.