(க. விஜயரெத்தினம்)
மட்டக்களப்பு ஸ்ரீ பேரின்ப ஞான பீடத்தில் பிறக்கவுள்ள புத்தாண்டில் உலக சேமத்துக்காக காயத்திரி மகா யாகம் இடம்பெறவுள்ளது.
புதிய ஆண்டான 2019 மலர்வதை முன்னிட்டு மட்டக்களப்பு ஸ்ரீ பேரின்ப ஞான பீடத்தில் எதிர்வரும் ஜனவரி 1ம் திகதி மு.ப 10:00 மணிக்கு உலக சேமத்துக்காக காயத்திரி மகா யாகம் ஆன்மீகக் குரு மகா யோகி எஸ்.புண்ணியரெத்தினம் சுவாமிகளின் தலைமையில் நடைபெறவுள்ளது.
பல ஆண்டுகளாக இலங்கை,மற்றும் உலக மக்கள் துன்பங்கள் வேதனைகள், இனந்தெரியாத நோய்கள், என பல இன்னல்களை எதிர் நோக்கி சவால் நிறைந்த வாழ்கையினை வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.
கலி முற்றி அதன் உச்ச கட்டத்தில் இவ்வாறான நிகழ்வுகள் பல யுகங்களிலும் இடம்பெற்று வந்துள்ளதனை பல சமய நூல்கள்,புராணங்கள் மூலமாக நம்மால் அறிய முடிகிறது அவ்வாறான இன்னல்களை போக்கவென பண்டைய காலங்களில் இவ்வாறு காயத்திரி மகா யாகங்கள் வேள்விகளை சித்தர்கள், யோகிகள்,ஞானிகள், மகரிஷிகள் நிகழ்த்தி உலகத்தில் அமைதியினை நிலை நாட்டியுள்ளார்கள்.
இவ்வாறு அகஸ்தியரை மூல குருவாக கொண்டு அவரின் நேரடிச் சீடராகவிருந்து யோகியான ஸ்ரீ கண்ணையா யோகி மகரிஷிகள் அவரின் நேரடிச் சீடரான காயத்திரி சித்தர் ஸ்ரீ பஹவான் ஆர்.கே.முருகேசு சுவாமிகள் பின்னர் முருகேசு சுவாமிகளின் மாணவர் மகா யோகி எஸ்.புண்ணியரெத்தினம் சுவாமிகள் தலைமையில் நடைபெறவுள்ளது.
வாழையடி வாழையாக வந்த குரு மார்க்கத்தில் நான்காவது தலை முறையில் சுவாமிகளின் நேரடி அருள் பார்வையினாலும், பக்தர்களினால் இந்தியாவிலிருந்து இமயம் முதல் குமரி வரையுள்ள சஞ்ஜீவினி உட்பட 108 உயிர் மூலிகைகள்,உலகை ஆளும் சப்த ரிஷிகள்; பதினெட்டு சித்தர்களை ஆவாகனம் செய்யவென பதினெட்டு நிறைகுடம் வைத்து யாகபூசை இடம்பெறள்ளது.
இலங்கையில் மட்டுமல்ல இனம், ஜாதி, மதம்,மொழி பேதங்களை கடந்து உலகின் அனைத்து மக்களின் ஏனைய ஜீவராசிகளின் பரிபூரண நலனை கருத்தில் கொண்டும் அவர்களின் ஜென்ப சாபங்கள்,பாவங்கள்,பசிப்பிணி, நோய்ப்பிணி,வறுமை,சாக்காடு,சூனியம்,தரித்திரம் என அனைத்து விதமான மற்றும் கிரக தோஷங்கள் பிரம்ம ராட்சசன் பீடித்திருந்தாலும் அதிலிருந்து விமோசனம் பெற செய்திடும் காயத்திரி மகா யாகமானது சூட்சுமமாக உலகை ஆழும் சப்த ரிஷிகள் மற்றும் பதினெட்டு சித்தர்களின் உத்தரவின் பெயரில் சுவாமிகளினால் நிகழ்த்தப்படவுள்ளது.
இந்த மகா யாகத்தினை தொடர்ந்து வருகை தரும் பக்தர்களுக்கு சுவாமிகளினால் ஆசீர்வாதமும்,ஆன்மீக அருள் உபதேசமும்,அன்னதானமும் வழங்கப்படும்.
காலத்தின் தேவையான மகரிஷிகளின் ஆணையின் பெயரில் உலக சேமத்துக்காக மட்டக்களப்பு பெரிய உப்போடையில் அமைந்துள்ள ஸ்ரீ பேரின்ப ஞான பீடத்தில் நிகழவிருக்கும் காயத்திரி மகா யாகத்தில் ஜாதி,மதம்,இனம்,மொழி பேதங்களை கடந்து அனைத்து மக்களும் இந்த கூட்டு யாக வழிபாட்டில் கலந்து கொண்டால் இறையருளினை நேரடியாக பெறுவதோடு மட்டுமல்லாது தங்களை பீடித்துள்ள அனைத்து விதமான பிணிகளிலிருந்தும் விடுபடலாம்.