டாக்டர் றிஸான் ஜெமீலின் முன்னோடியான செயற்பாடுகள் அனைத்துமே பாராட்டத்தக்கது
வைத்திய அத்தியட்சகர் டாக்டர் அஸாத் எம். ஹனிபா
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
டாக்டர் றிஸான் ஜெமீலின்
முன்னோடியான செயற்பாடுகள் அனைத்துமே பாராட்டத்தக்கது என சம்மாந்துறை மற்றும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைகளின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியக் கலாநிதி டாக்டர் அஸாத் எம். ஹனிபா தெரிவித்தார்.
டாக்டர் ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையின் பிரிவொன்றை நேற்று (23) ஞாயிற்றுக்கிழமை சம்மாந்துறையில் ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது மாபெரும் இரத்ததான முகாமும் இலவச மருத்துவ சேவை மற்றும் கண் பரிசோதனையும் இவ்வைத்தியசாலையில் இடம்பெற்றது.
டாக்டர் ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் றிஸான் ஜெமீலின் பணிப்புரைக்கமைய ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட வைத்திய அத்தியட்சகர் மேலும் பேசுகையில்,
சம்மாந்துறைப்பிரதேசம் மிகக்கூடிய அதாவது சுமார் 75,000 மக்கள் வாழும் பிரதேசம். இந்தப் பிரதேச மக்களின் நலன்கருதி மருத்துவ சேவையை வியாபித்திருக்கின்ற டாக்டர் றிஸான் ஜெமில் மற்றும் நிர்வாகத்தினருக்கு நான் நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதோடு, மேலும் குறிப்பாக, இன்று நாட்டிலே ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் இரத்ததான முகாமை நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள். அதேபோன்று, இலவச கண் பரிசோதனை மற்றும் இலவச மருத்துவ சேவைகளையும் இன்று வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இச் சேவை அளப்பரியது.
இன்று விஷேட வைத்திய நிபுணர்களின் தேவை அதிகமாக இருக்கின்றது. அதனை உங்கள் காலடியில் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்ற சேவை மனப்பாங்கில்தான் இந்த சேவையை இவர்கள் ஆரம்பித்து இருக்கின்றார்கள்.
மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு இதனை ஆரம்பித்து இருக்கின்ற டாக்டர் ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையின் நிர்வாகக் குழுவுக்கும் நான் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
முக்கியமாக நடமாடும் சுகாதார சேவையை இவர்கள் முன்னோடியாகவும் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகவும் நடைமுறைப்படுத்தியிருக்கிறார்கள்
அதேபோல ஆய்வுகூட வசதிகள், ஹோமியோபதி வசதிகள் என பல்வேறுபட்ட விசேட வைத்திய நிபுணர்களின் சேவைகள் இன்று சம்மாந்துறை மக்களின் நலனை மேம்படுத்தும் நோக்கில் ஆரம்பித்திருப்பதை முன்னிட்டும் இந்த சந்தர்ப்பத்தில் நான் அவர்களைப் பாராட்டுகின்றேன் என்றும் தெரிவித்தார்.
சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.எல்.எம். கபீர், லண்டனில் இருந்து வருகை தந்த விசேட வைத்திய நிபுணர் டாக்டர் எல்.எம். மஸுர், டாக்டர் ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்தியப் பணிப்பாளர் டாக்டர் சனா , முஸ்லிம் சமய கலாசார அமைச்சினுடைய முன்னாள் செயலாளரும் சம்மாந்துறை பிரதேச செயலாளருமான எம்.ஐ. அமீர், மட்டக்களப்பு அரச ஹோமியோபதி வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஏ.எம். முனீர், அதன் நிர்வாக உத்தியோகத்தர்களான சிராஸ், நஜீம், சுபியான், ரியாஸ் மற்றும் இரத்த வங்கி வைத்தியர்கள், தாதி உத்தியோகத்தர்கள், சுகாதார ஊழியர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
முழுநாள் நிகழ்வாக இடம்பெற்ற இந்த இரத்ததான முகாமில் பெரும்பாலானோர் ஆர்வத்தோடு கலந்துகொண்டு இரத்ததானம் வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.