கிழக்கில் தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தாலும் தமிழ் முதலமைச்சர் ஒருவர் கிழக்கில் வர முடியாது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் விவசாய அமைச்சராக இருந்தவேளை, தனது கடந்த வருட நிதி ஒதுக்கீட்டின் மூலம் குமாரவேலியார் கிராம மீன்பிடிச் சங்கத்திற்கு வழங்கப்பட்ட கதிரைகளைக் கையளிக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“கிழக்கு மாகாணசபையில் தமிழர் ஒருவர் முதலமைச்சராக வர வேண்டும் என்றால் தமிழர்கள் அனைவரும் ஒற்றுமைப்பட வேண்டும் என்று சொல்கின்றார்கள். ஆனால் தமிழர்கள் மட்டும் ஒற்றுமைப்பட்டு ஒன்றாகச் சேர்ந்து தமிழ் முதலமைச்சர் வர முடியாது.
ஏனெனில் 37 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு மாகாணசபையில் நாங்கள் ஒரு முதலமைச்சரை உருவாக்க வேண்டும் என்றால் 19 உறுப்பினர்கள் தேவை.
ஆனால் 19 தமிழ் உறுப்பினர்களை நாங்கள் கிழக்கில் ஒரு போதும் தெரிவு செய்ய முடியாது. ஆகக் கூடுதலாக வாக்கெடுப்பு மூலம் 12 அல்லது 13 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய முடியும் போனஸ் இரண்டு கிடைத்தால் ஆக உச்சமாக 15 பேருக்கு மேல் தமிழ் உறுப்பினர்களைப் பெற முடியாது.
மிகுதி 05 பேர் தேவை, அதை எவ்வாறு பெற்றுக் கொள்வது யாரிடம் கேட்பது? சிங்கள உறுப்பினர்களிடம் கேட்போமாக இருந்தால் அவர்கள் எங்களுக்கு ஆதரவு தந்து எங்களை முதலமைச்சராக்குவதற்கு ஒருபோதும் தயாராக இல்லை.
கிழக்கு மாகாணத்திலே ஒரு முதலமைச்சர் வருவதென்றால் அவர் தமிழ் சிங்கள, முஸ்லிம் இனங்களின் ஒற்றுமையின் மூலம் தான் வர முடியும். நாங்கள் புத்திசாலித்தனமாக இருந்தால் எமது உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் அதிகரிக்கலாம். அந்த நேரத்தில் நாங்கள் இராஜதந்திரமாக நடந்து பேரம் பேசுதல் போன்ற நிகழ்ச்சி நிரலுக்குச் செல்லலாம்” என அவர் மேலும் தெரிவித்தார்.