தமிழ் கிராமங்களை பாதுகாப்பதற்கு தமிழ் ஊர்காவல் படையினரை அமைக்க அரசாங்கம் முன்வரவேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டில் நிலையான சமாதானமும் அமைதியும் ஏற்படுவதற்கு தமிழ் மக்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (28) பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே இந்த வேண்டுகோளை அவர் விடுத்தார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், தேவாலயங்கள், ஹோட்டல்களை இலக்கு வைத்து இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.தௌஹீத் ஜமாத் அமைப்புடன் இணைந்த பயங்கரவாதிகள் இத்தாக்குதலை நடத்தியுள்ளமை ஊர்ஜிதமாகியுள்ளது.
காத்தான்குடியைப் பிறப்பிடமாகக் கொண்ட ஷஹ்ரான் என்பவரே இந்த அமைப்பின் தலைவராக உள்ளார். இந்தத் தாக்குதல்கள் பற்றித் தெரியாதென சில அரசியல்வாதிகள் கூறுவது பெரும் வேடிக்கையாக உள்ளது.
இது நீண்டகாலமாகத் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களாகும். இரண்டு மூன்று வருடங்களுக்கும் மேலாக திட்டமிடப்பட்டிருக்கின்றது.
சில முஸ்லிம் அரசியல்வாதிகள் இதுபற்றி தமக்குத் தெரியாது, நடந்த பின்னரே தமக்குத் தெரியும் என்கின்றனர். ஆனால் இவர்களுடைய வாயாலேயே பாராளுன்றத்தில் சில கருத்துகளைத் தெரிவித்திருந்ததை நாம் மறக்கவில்லை. முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்த நேரிடும் என்றும் சில முஸ்லிம் அரசியல்வாதிகள் எச்சரித்தனர்.இவர்களுக்கு எதிராக அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதேவேளை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் விடுதலைப்புலிகள் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது என தெரிவித்ததற்காக தென்னிலங்கையே கொதித்தெழுந்தது. எது நடந்தாலும் தமிழர்களை சந்தேகக் கண்கொண்டு பார்க்கின்ற நிலைமைதான் தென்னிலங்கையில் இருந்துவந்ததாகவும் அவர் தெரிவித்தார்.