அறுபது தமிழ் வருடங்களின் சுற்றுவட்டத் தொடரில் 34ஆவது வருடமான ‘சார்வரி’ என்ற பெயரிலான சித்திரைப் புதுவருடம் இன்று 13ம் திகதி இன்று திங்கட்கிழமை இரவு மலருகிறது.
துரதிஸ்ட்டவசமாக இம்முறை முழுஉலகையும் உலுக்கிக்கொண்டிருக்கும் கொரோனா என்ற கொடியவைரஸ் காரணமாக எமது பாரம்பரிய புத்தாண்டை சிறப்பாகக் கொண்டாடமுடியாத துர்ப்பாக்கியநிலை நிலவுகிறது. எனவே எமது வழக்கிலுள்ள அகவணக்கம் புறவணக்கம் என்ற முறைமைகளுள் அகவணக்கத்தை அனைவரும் வீட்டிpலிருந்தவாறு கடைப்பிடித்து நாட்டிலிருந்து கொரோன விலக இறைவனைப்பிரார்த்திக்கவேண்டும். பிரார்த்தனைகள் வீண்போவதில்லை என்பதை நாமறிவோம்.
ஓரு வகையில்பார்த்தால் தமிழர்தம் பாராம்பரியத்தை சம்பிரதாயத்தை பழக்கவழக்கத்தை வணக்கமுறைமையை சைவநெறிமுறையை மரபுரீதியான நடைமுறை வாழ்க்கையை மீண்டும் சரிவரக்கடைப்பிடியுங்கள் என்பதை கொரோனா ஞாபகப்படுத்தியுள்ளது என்றாலும் மிகைப்பட்டகூற்றல்ல.
ஒட்டுமொத்த மனிதகுலத்தை மிகமோசமாக மிதித்துவரும் கொரோனா என்றஅரக்கனை விரட்டவேண்டுமானால் அந்த மனிதகுலம் சிந்தித்து செயற்படுவதுடன் பிரார்த்தனையிலீடுபடுவார்களானா ல் மீட்சியுண்டு.
வரலாறு
சிங்களப் புத்தாண்டு என்பது இலங்கை சிங்களவர்களால் பழங்காலம் தொட்டே கொண்டாடி வரும் புத்தாண்டு கொண்டாட்ட முறையாகும். இந்த புத்தாண்டு கொண்டாட்ட முறை இலங்கையின் பழங்காலத் தமிழர்களின் வழியாக இலங்கையில் தோற்றம் பெற்ற தமிழர் புத்தாண்டு முறையே ஆகும். அதனாலேயே இலங்கையில் ‘தமிழ் சிங்களப் புத்தாண்டு’ என அழைக்கின்றனர். தமிழர் காலக்கணிப்பீட்டு முறைக்கு அமைய 60 ஆண்டுகள் சுழற்சி முறையில் (பிரபவ – அட்சய) கணக்கிடப்படும். சித்திரை முதலாம் திகதி (ஏப்ரல் 13 அல்லது ஏப்ரல் 14) ஆண்டு தொடக்கம் நிகழும். அதுவே தமிழரின் புத்தாண்டாகும்.
அதனையே சிங்களவரும் புத்தாண்டாகவும் கொண்டாடுகின்றனர். சிங்கள மொழியில் (அழுத் – புதிய அவுருது – ஆண்டு) அழுத் அவுருது என்றழைக்கப்படுகின்றது. இலைதுளிர் காலத்தின் அரும்பில் இந்த புத்தாண்டு தொடங்குகின்றது.
ஒரு தமிழ் ஆண்டு என்பது வானியல் ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் அளவிடப்பட்ட காலத்தைக் கொண்ட காலப்பகுதியாகும். பூமி சூரியனை ஒரு தடவை சுற்றிவர 365 நாட்கள் 6 மணி 11 நிமிடம் 48 நொடிகள் ஆகின்றது. இதுவே தமிழ் வருடத்தினதும் கால அளவாகும்.
சூரிய மேஷ இராசியில் பிரவேசிக்கும்போது தொடங்கும் ஆண்டுஇ மீன இராசியிலிருந்து வெளியேறும்போது முடிவடைகின்றது. ஆகவே தமிழ் வருடத்தின் கால அளவு எப்போதும் சீரானதாகவே இருக்கிறது. இதன் அடிப்படையிலேயே தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் நாள் நேரம் கணிக்கப்படுகிறது. ஆங்கில நாட்காட்டியில் பெரும்பாலும் ஏப்ரல் 14 தொடங்கும் தமிழ் ஆண்டு சில ஆண்டுகளில் ஏப்ரல் 13 அல்லது 15 நாட்களில் தொடங்கும். இதற்குக் காரணம் ஆங்கில (கிரகோரியன்) நாட்காட்டி ஒரே சீரானதாக இல்லை என்பதே.
சித்திரை மாதம் 31 நாட்களைக் கொண்டது. ஆங்கில நாட்காட்டியில் ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் முதல் மே மாதம் 14 ஆம் நாள் வரை தமிழ் சித்திரை மாதமாகும். சூரியன் மேட இராசிக்குள் நுழைவது சித்திரை மாதப் பிறப்பு எனப்படும். சித்திரை முதல் மாதம் என்பதால் இதுவே புதிய ஆண்டின் தொடக்கமும் ஆகும்.
இதனால் சித்திரை மாதம் முதல் நாளைத் உலகத் தமிழர்கள் அனைவரும் தமிழ் வருடப் பிறப்பாக சிறப்பாக கொண்டாடுகின்றனர். இலங்கையில் தமிழ்- சிங்கள மக்களால் கொண்டாடப்படும் வைபவமாக புதுவருடப் பிறப்பு இருப்பதால் இது ஒரு தேசியப் பெருவிழாவாகவும் முக்கியத்துவம் பெறுகிறது. புதிய எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கைகளையும் வைத்து மங்களகரமான திருநாளாக சித்திரைப் புதுவருடம் வரவேற்கப்படுகிறது.
சித்திரை மாதம் பிறந்ததுமே இளவேனில்காலம்’ என்னும் வசந்த காலம் தொடங்குகிறது.
புத்தாண்டுக்கு முந்தைய நாட்களை வீடு வாசலை சுத்தம் செய்வதிலும் அலங்கரிப்பதிலும் தமிழர் செலவழிப்பர். மா பலா வாழை ஆகிய முக்கனிகள் வெற்றிலை பாக்கு நகைகள் நெல் முதலான மங்கலப்பொருட்கள் வைத்த தட்டை வழிபாட்டறையில் வைத்து அதை புத்தாண்டு அதிகாலையில் காண்பது புனிதமாகக் கருதப்படுகின்றது.
புத்தாண்டன்று அதிகாலையில் நீராடி கோலமிட்டு புத்தாடை அணிந்து கோயிலுக்குச் சென்று வழிபடுவர். மாலை வேளையில் உறவினர் வீடுகளுக்குச் செல்வதும் பலகாரங்களை பகிர்ந்துண்பதும் நிகழும். வாழ்க்கை என்றாலே கசப்பும் இனிப்பும் கலந்தது தான். இப்புத்தாண்டிலும் கசப்பும் இனிப்பும் இருக்கும் என்பதன் அடையாளமாக வேப்பம்பூப்பச்சடி மாங்காய்ப்பச்சடி என்பவற்றை உண்பது குறிப்பிடத்தக்க மரபாகும்.
இலங்கையில் புத்தாண்டு பிறக்கும் விசூ புண்ணியக் காலத்தில் ஆலயத்தில் வழங்கப்படும் மருத்து நீர் எனப்படும் மூலிகைக் கலவையை இளையவர்களின் தலையில் மூத்தோர் வைத்து ஆசீர்வதிப்பர். அதன்பின்னர் நீராடி அவர்களிடம் ஆசி பெற்று குறித்த சுபவேளைகளில் கைவிசேடம் அல்லது கைமுழுத்தம் பெறுவர். மூத்தவர்களால் இளையவர்களுக்கு புத்தாண்டு அன்பளிப்பாக வழங்கப்படும் பணமே கைவிசேடம் எனப்படுகிறது. போர்த்தேங்காய் உடைத்தல் வழுக்கு மரம் ஏறல் யானைக்குக் கண் வைத்தல் கிளித்தட்டு ஊஞ்சலாடல் முட்டி உடைத்தல் வசந்தனாட்டம் மகிடிக்கூத்து நாட்டுக்கூத்து முதலானவை இலங்கையின் பாரம்பரிய புத்தாண்டுக் கலையாடல்கள் ஆகும்.
வசந்தகாலம்.
வசந்த காலத்தில் மாமரங்களில் மாந்தளிர்களும் மலர்களும் பூத்துக் குலுங்கும். அச்சமயம் வேப்ப மரங்களில் வேப்பம் பூக்கள் பூத்துக் குலுங்கும். மனித வாழ்க்கை இனிப்பும் கசப்பும் கலந்தே இருக்கும் என்பதை எடுத்துக் காட்டும் அம்சமாக இச்செயற்பாடு கருதப்படுகிறது.
ஐக்கியம் சமய சமூக கலாசார உறவுகள் பண்பாட்டுக் கோலங்கள் என்பவைகளை எடுத்துக் காட்டும் வகையிலும் நல்லெண்ணம் நல்லுறவு ஐக்கியம் அன்புப் பரிமாற்றம் குதூகலம் விருந்தோம்பல் போன்ற மனிதப் பண்பாட்டின் உயர்ந்த அம்சங்களை வெளிப்படுத்தும் வகையிலும் கொண்டாடப் படும் சமுக விழாவான புது வருடத்தில் இறைவழிபாடு தானதர்மம் ஆசிபெறுதல் என்பவைகளையும் நாம் கடைப்பிடிப்பது வழக்கம்.
சித்திரை முதல் நாளன்று வீட்டை நன்றாக கூட்டி தூய்மை செய்ய வேண்டும். வாசலில் கோலமிட்டு அழகுபடுத்த வேண்டும். வாயிற்படிகளுக்கு மஞ்சள் குங்குமம் இட்டு மாவிலைத் தோரணங்களை கட்டி மங்கலம் சேர்க்க வேண்டும். வாயிற்படி நிலைவாயிலில் மஞ்சள் பூசி சாணத்தால் மெழுகி அழகிய மாக்கோலமிட்டால் திருமகள் வாசம் செய்வாள் என்பது நம்பிக்கையாகும்.
அத்தோடு மஞ்சள் குங்குமம் ஆகியவை நோய்க்கிருமிகளும் துஷ்ட தேவதைகளும் வாசல்படியை தாண்டி வராமல் தடுக்கும் சக்திகளாகும். புதுவருட தினத்தில் நம் நலம் காக்கவே இந்நடைமுறை வழக்கத்துக்கு வந்தது.
மருத்து நீர்
இந்த புண்ணிய காலத்தில் சகலரும் மருத்து நீர் தேய்த்து சிரசில் இலவம் இலையையும் காலில் விளா இலையையும் வைத்து ஸ்நானம் செய்தல் வேண்டும். மருத்து நீர் வைத்தல் என்பது முக்கிய விடயமாக புதுவருட தினத்தில் கருதப்படுகிறது.
இம்மருத்துநீர் தாழம்பூ தாமரைப்பூ மாதுளம்பூ துளசி விஷ்ணுகிராந்திதேவியார் செங்கழுநீர் வில்வம் அறுகு பீர்க்கு பால் கோசலம் கோமயம் கோரோசனை மஞ்சள் திற்பலி மற்றும் சுக்கு என்பவற்றை நீரிலே கலந்து காய்ச்சப்படும். மருத்து நீர் வைத்து நீராடினால் புத்தாண்டின் நல்ல பலன்களை பெறலாம் என்பது நம்பிக்கை ஆகும்.
தமிழ் – சிங்கள பாரம்பரியம்.
காலையில் எழுந்து நீராடி புதிய வெள்ளை ஆடை அணிந்து பௌத்த விகாரைகளுக்கு சிங்களவர் சென்று வழிபடுவர். கிரிபத் (வெண் பொங்கல்) மற்றும் பிற பலகாரங்கள் செய்து உறவினர் நண்பர்களுடன் பகிர்ந்து உண்டு களிப்பர். பெரியோரை மதித்து கை விசேடம் பெறுவர். சிறுவர்கள் பட்டாசு கொளுத்தி மகிழ்வர்.
தமிழர் சிங்களவர் புத்தாண்டு கொண்டாட்ட வேறுபாடுகள்
சிங்களவரின் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தமிழரின் பண்பாட்டில் இருந்தே தோன்றியது என்றாலும் சிற்சில வேறுபாடுகளும் உண்டு; அவ்வேறுபாடுகளைப் பார்ப்போம்.
1. புத்தாண்டு பிறக்கப் போகிறது என்றால் வீடுகளுக்கு சுண்ணாம்பு அடித்தல் தமிழர்களின் பழக்கங்களில் ஒன்றாகும். சிங்களவர்களும் அப்படியே. தற்காலத்தில் சுண்ணாம்பு அடித்தல் வெள்ளைப் பூசுதல் வர்ணம் பூசுதல் என மாற்றம் பெற்றுள்ளது.
2. புத்தாண்டுக்கு முதல் நாட்களில் வீட்டை சுத்தம் செய்தல் (வீட்டின் மண் தரை) சாணம் இட்டு மெழுகுதல் (வீட்டின் சிமெந்து தரை) கழுவுதல் போன்றவைகளும் தமிழர் போன்றே சிங்களவர்களும் செய்கின்றனர். (சாணம் இட்டு வீடுகளை மெழுகும் வழக்கம் திராவிடரின் பழக்கவழக்கங்களில் ஒன்றாகும்.)
3. புத்தாண்டு பிறப்பிற்கு சில நாட்களுக்கு முன்பிருந்தே புத்தாண்டு நிகழ்வுகளை பஞ்சாங்க நேரக் கணிப்பீட்டின் படியே தமிழர்கள் செய்வது வழக்கம். சிங்களவர்களும் அப்படியே செய்கின்றார்கள். பஞ்சாங்கம் எனும் சொல் சிங்களவர்களால் ‘பஞ்சாங்க’ என்று ‘ம்’ எழுத்தின் ஒலிப்பின்றி பயன்படுத்துகின்றனர். இச்சொல் தமிழரின் வழக்கில் இருந்து சிங்களத்திற்குச் சென்றதாகக் கொள்ளலாம். (பஞ்சாங்கம் என்பது தமிழில் வழங்கும் வடமொழிச்சொல்) அதேவேளை பஞ்சாங்கம் எனும் சொல்லுக்கு ‘லித்த’ எனும் வேறு ஒரு சொல்லும் சிங்களவர்களின் புழக்கத்தில் உள்ளது.
4. தமிழர்களின் புத்தாண்டில் முதன்மையானவற்றுள் ஒன்றாக இருப்பது பணியாரமும் வாழைப்பழமும் ஆகும். சிங்களவர்களிடமும் அவைகளே முக்கிய அங்கம் வகிக்கின்றது. புத்தாண்டிற்கு சில நாட்களுக்கு முன்பே வாழைக் குழைகள் பழுக்க வைக்கப்பதும் அப்படியே.
5. புத்தாண்டிற்கு சில நாட்களுக்கு முன்பே பணியாரம் மற்றும் தின்பண்டங்கள் செய்து புத்தாண்டு நாள் பாவனைக்காக மண் முட்டிகளில் பத்திரப்படுத்தும் வழக்கம் பழந்தமிழர் தொட்டு இருக்கின்றது. இதுவும் சிங்களவர்களிடம் உண்டு.
6. இந்த புத்தாண்டிற்கான பணியாரம் மற்றும் தின்பண்டங்கள் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்ட நேரத்திலேயே தயாரிக்க தொடங்கவேண்டும் எனும் ஒரு வழக்கு சிங்களவரிடையே உள்ளது. அதற்கு ‘எண்ணைப் பாத்திரம் அடுப்பில் வைக்கும் நேரம்’ எனக் கூறப்படுகின்றது. அந்நேரத்திலேயே புத்தாண்டிற்கான தின்பண்டங்கள் தயாரிப்பதற்கு தீ மூட்டி எண்ணைப் பாத்திரங்கள் அடுப்பில் வைக்கப்படுகின்றது.
தயாரிக்கப்படும் தின்பண்டங்கள்
• பணியாரம் – கெவுங்
• கொண்டை பணியாரம் – கொண்டே கெவுங்
• பாசிப்பயறு பணியாரம் – முங் கெவுங்
• கொக்கிசு – கொக்கிஸ்
• அலுவா – அலுவா
• வெளித்தலப்பா – வெளித்தலப்பா
• பானிவலயல் – பெனிவலலு
தமிழர்களின் புத்தாண்டில் முக்கியமாக பணியாரம் மற்றும் பாசிப்பயறு பணியாரம் இருக்கும். சிங்களவர்களிடமும் அப்படியே. சிங்களவர்கள் தயாரிக்கும் கொண்டைப் பணியாரம் தமிழரின் பழக்கத்தில் இல்லாத ஒன்று. ஆனால் கொண்டைப் பணியாரம் என்பது தமிழர்கள் தயாரிக்கும் சாதாரணப் பணியாரம் போன்றே சுவை ஒன்று தான். வேறுப்பாடு அதன் வடிவமைப்பில் தான். பெண்களின் கொண்டைப் போன்று வடிவமைக்கப்பட்டிருக்கும். (இங்கே ‘கொண்டை’ எனும் தமிழ் சொல்லே ‘கொண்டே’ எனப்படுவதையும் அவதானிக்கலாம்.)
தமிழர்களிடம் குறிப்பாக ஈழத்தமிழர்கள் தயாரிக்கும் பனங்காய் பணியாரம் இவர்கள் தயாரிப்பதில்லை.
பாசிப்பயறு பணியாரம் தமிழர்களது போன்றே சிங்களவர்களும் தயாரிக்கின்றனர். இதன் சுவையிலோ தோற்றத்திலோ வேறுப்பாடுகள் இல்லை.
இதைத் தவிர கொக்கிஸ் அலுவா வெளித்தலப்பா பானிவலயல் போன்றத் தின்பண்டங்களும் சிங்களவர்களின் புத்தாண்டில் காணப்படுகின்றது.
புத்தாண்டு கொண்டாட்ட நேர ஒழுங்கு
புத்தாண்டு நிகழ்வுகள் ஒவ்வொன்றும் பஞ்சாங்கக் கணிப்பீட்டின் படியே நடைப்பெறும். ஒரு எடுத்துக்காட்டிற்காக கீழே நேரங்கள் காட்டப்பட்டுள்ளன. ஆனால் இந்நேரக் கணிப்பு ஆண்டுக்கு ஆண்டு வேறுபடும் வேறுப்படும் என்பதை உணர்க.
• புத்தாண்டு பிறப்பதற்கு முன் எழுந்து (மூலிகை இலை வேர்கள்) மருந்து எண்ணை வைத்து குளிப்பர். புத்தர் கோயில் (பௌத்த பன்சாலைவிகாரை) சென்று வழிப்பட்டு வருவர்.
• ஏப்ரல் 13 முன்னிரவு 07.26 புத்தாண்டு பிறப்பு. (சூரியன் மேச இராசியில் பிரவேசிக்கும் நேரம்) பட்டாசு கொளுத்துவர்.
• ஏப்ரல் 13 புத்தாடை உடுத்தி பால் பொங்குதல் பால்சோறு சமைத்தல் அல்லது தின்பண்டங்கள் தயாரித்தல்; இதில் ஒன்றைக் குறித்த நேரத்தில் செய்வர். இத்துடன் பணியாரம் வாழைப்பழம் மற்றும் தின்பண்டங்களும் வைத்து படையல் இடுவர். இப் படையலில் முக்கியமாக பால்சோறு (கிரி – பால் பத் – சோறு – கிரிபத்) இருக்கும். குத்து விளக்கேற்றுவர் ஊதுவர்த்தி கொழுத்துவர். சாம்பிராணிப் புகைப் பிடிப்பர்.
• ஏப்ரல் 20 பி.ப12.06 உணவு பரிமாறி உண்பர். அயலவர்களிடமும் உணவு பரிமாறிக்கொள்வர். பெரியோரை மதித்து வணங்குவர். ஏப்16 வியாழன் மு.ப 10.31க்கு கைவிசேடம் பெறுவர். கைவிசேடம் கொடுக்கும் பெரியவர் அல்லது குடும்பத் தலைவர் வெற்றிலையில் வைத்தே காசு கொடுப்பார். கொடுக்கல் வாங்கல்கள் செய்வர்.
ஒரு சம்பிரதாயத்திற்காக தத்தமது வேலைதொழில் செய்வர். சில மணித்தியாலங்களிற்கு மட்டும். சில வர்த்தக நிலையங்கள் திறந்து ஒன்று இரண்டு வியாபாரங்கள் செய்துவிட்டு மீண்டும் மூடி விடுவர்.
• இவை அனைத்தும் புண்ணியக் காலம் என்று குறிக்கப்பட்டிருக்கும் நேரத்திற்கு முன்பாக நிறைவு செய்ய வேண்டும்.
• ஏப்ரல் 13 ம் நாள் பிற்பகல் 3.26 முதல் இரவு 11.26 வரை புண்ணியக் காலம் என்படும். இந்த நேரத்தில் சமய சம்பிரதாய நிகழ்வுகளில் ஈடுப்படவேண்டிய நேரம் என்கின்றனர். அநேகமானோர் புத்தர் விகாரைகளிற்கு ‘பன’ (பௌத்த உரை) கேட்பதற்காகவும் வேறு விசேட நிகழ்வுகளுக்காகவும் செல்வர். இந்தப் புண்ணியக் காலம் எனும் சொல்லை சிங்களவர்கள் ‘புண்ணிய கால’ என்பர். அதற்கு (நொனகத்த) எனும் ஒரு சொல்லையும் பயன்படுத்துகின்றனர்.
இப் புண்ணியக் காலம் முடிந்தப் பிறகு புத்தாண்டு கலாச்சார மற்றும் விநோத விளையாட்டுப் போட்டிகளை நடத்துவர். பெண்கள் ‘றபான்’ அடிப்பர். இது தமிழரிடம் இல்லாத ஒரு வழக்கமாகும். சிலவேளை புண்ணியக்காலம் இரவில் முடிவடையுமாயின் இந்நிகழ்வுகள் அடுத்த நாளிலோ அல்லது அடுத்து சில நாட்களிலோ தமது வசதி்க்கேற்ப வைத்துக்கொள்வர்.
• ஏப்ரல் 16 17 (குறித்த நேரத்தில்) மீண்டும் மருந்து எண்ணை வைத்து குளிக்கும் நாளாகும்.
• ஏப்ரல் 17 18 19 இந் நாளில் குறித்த நேரத்தில் குறித்த திசையில் தத்தமது பணிகளுக்கு மீள்வர்.
இதன் அடிப்படையில் தமிழரின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றான 60 ஆண்டுகள் சுழற்சி முறையில் கணக்கிடப்படும் (பிரபவ – அட்சய) காலக் கணிப்பீட்டு முறை இலங்கையில் இருந்துள்ளதை அறியலாம்.
இதைத் தவிர பழந்தமிழர்களிடம் பிரமிக்க வைக்கும் கணக்கியல் கூட்டல் எண்கள் அளவைகள் போன்றவைகளும் இருந்துள்ளதை அறிய முடிகின்றது.
எனவே இதனடிப்படையில் பழந்தமிழர் பயன்படுத்திய காலக் கணிப்பீட்டு முறையே இலங்கையில் இருந்தாகக் கொள்ளலாம். இதனை சான்றுகளுடன் நிரூபிக்க கூடிய தடயங்கள் எதுவும் இல்லை என்றாலும் யாரும் மறைக்க முடியாத சான்றாகவே இன்றும் இலங்கை சிங்களவர்களிடம் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்வதை உணரக்கூடியதாக உள்ளது.
பௌத்தக் கணக்கீட்டு முறை
பௌத்தரின் தோற்றத்தின் பின்னர் அதன்படி புத்த ஆண்டுப் பிறப்பு மே மாதம் பௌரணமி இரவில் ஆரம்பிப்பதாகக் கூறப்படுகின்றது. அந் நாளை இலங்கை பௌத்தர்கள் மென்கடதாசி கூடுகள் அமைத்து அதற்குள் மெழுகுவர்த்தி அல்லது மின் விளக்குகள் ஒளிரச் செய்து தோரணங்கள் கட்டி வெசாக் பண்டிகை என இரவில் கொண்டாடுகின்றனர். ஆனால் அதனை புத்தாண்டாகக் கொண்டாடும் வழக்கம் சிங்களவர்களிடம் இல்லை. இதன் அடிப்படையில் இலங்கையில் புத்த காலக் கணிப்பீட்டு முறை நடைமுறையில் இருந்ததற்கான சான்றுகள் எதுவுமில்லை என்பது தெளிவாகிறது.
அவ்வாறு இருந்திருக்குமானால் புத்தர் பிறந்த நாளாகிய மே மாத பௌரணமி நாளையே சிங்களப் புத்தாண்டாக. சிங்களவர்கள் கொண்டாடி இருப்பர்.
தமிழ்ப் புத்தாண்டு என்பது தமிழர்கள் தங்கள் ஆண்டின் புத்தாண்டாக கொண்டாடும் விழாவாகும். சித்திரை முதல் நாள் புத்தாண்டு வடநாட்டு மன்னனான சாலிவாகனன் என்பவனால் கிறித்துவுக்கு பின் 78ம் ஆண்டில் வடநாட்டில் ஏற்படுத்தப்பட்டது என்று வரலாற்று ஆசிரியர்களால் நம்பப்படுகிறது. சில வரலாற்று ஆசிரியர்கள் கனிஷ்கன் என்ற அரசனால் இது ஏற்படுத்தப்பட்டது என்று கூறுகின்றனர்.
வரலாறு
இலங்கையில் இந்த புத்தாண்டு கொண்டாட்ட முறை எத்தனையாம் நூற்றாண்டு முதல் பயன்பாட்டில் உள்ளது என்பதை அறுதியிட்டு கூறமுடியாதுள்ளது. அதேவேளை இலங்கையில் பௌத்தம் அறிமுகமாகும் முன்னர் இருந்தே இந்த த்தாண்டு கொண்டாட்டம் இருக்கிறது. கி.மு. 3ம் நூற்றாண்டுகளில் தேவநம்பியதீசன் ஆட்சி காலத்திலேயெ பௌத்தம் இலங்கையில் நிலைப்பெற்றதாக மகாவம்சம் நூல் கூறுகிறது. இலங்கையில் பௌத்தம் நிலைப்பெற்றதன் பின்னர் தேவநம்பியதீசனால் மகாவிகாரை ஒன்று கட்டப்படுகின்றது. அந்த மகாவிகாரையில் பௌத்த பிக்குகள் தங்கியிருந்து பௌத்தக் குறிப்புகளையும்இ பௌத்தம் இந்தியாவில் தோன்றி இலங்கையில் நிலைப்பெற்ற வரலாற்றையும் பாளி மொழியில் செய்யுள் வடிவில் குத்து வைக்கத்தொடங்கினர்.
இந்த தொகுப்புகளின் காலவரிசை எந்த காலக்கணிப்பீட்டு முறைக்கு அமைவாக காலங்கள் குறிக்கப்பட்டுள்ளன என்றால் பௌத்த நாட்காட்டிக்கு அமைவாகக் குறிக்கப்பட்டன என்று கொள்ளமுடியாது. காரணம் அந்த தொகுப்புகள் பௌத்தம் தோன்றுவதற்கு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னரான (கி.மு. 6ம் நூற்றாண்டு) கதைகளையும் கொண்டுள்ளது. இன்னும் கூறுவதானால் புத்தர் பிறப்பதற்கு முன்னரான கதைகளும் அதில் உள்ளன. எனவே பௌத்த நாட்காட்டி அப்போது பயன்பாட்டில் இல்லை. பயன்பட்டிருக்க வாய்ப்பும் இல்லை.
தமிழரின் ஆண்டு பிறப்பு சித்திரை 13 அல்லது 14ல் தொடங்குகிறது. அதற்கமைவாகவே மகாவசம் நூலின் குறிக்கப்பட்டிருக்கும் ஆண்டு தொடக்கமும் அதே நாளை குறிக்கிறது. இங்கே சித்திரை 13 அல்லது 14ம் திகதியில் ஆண்டு தொடக்கமாகக் கொள்ளும் முறை தமிழர்களுடையது என்பதை தெளிவாக்கிக்கொள்ளலாம்..
.
எனவே மகாவம்சம் காலத்தில் காலத்தை கணிப்பிட்டு குறித்து வைக்க பயன்படுத்தப்பட்டுள்ளது தமிழ் காலக்கணிப்பீட்டு முறையையே ஆகும். அதற்கமைவாக தமிழ் ஆண்டு தொடக்கம் சித்திரை முதலாம் திகதி (ஏப்ரல் 13 அல்லது 14) புத்தாண்டு கொண்டாடப் படுகின்றது. தமிழ் காலக்கணிப்பீட்டு முறையை ஆரம்பம் முதலே சிங்களவர்கள் பயன்படுத்தி வந்த வழக்கின் காரணமாகவே இன்றும் இலங்கை சிங்களவர்கள் தமிழ் புத்தாண்டை தமிழ் சிங்களப் புத்தாண்டு எனக் கொண்டாடுகின்றனர்.
தமிழர் காலக்கணிப்பீட்டு முறைகள் இன்று பல தமிழ் இணையத்தளங்கள் செய்தித் தாள்கள் திருமண அழைப்பிதல்கள் கோயில் உட்சவங்கள் பஞ்சாங்கம் பார்த்தல் நேரம் குறித்தல் போன்றவற்றில் பயன்படுவதைக் காணலாம். சில கிராமங்களில் தமிழ் மாதப்பெயரிகளிலே தை மாசி பங்குனி என காலங்களை குறித்துப் பேசுவோரும் உளர்.
இலங்கை சிங்கள பௌத்தப் பிக்குகள் நேரம் குறித்தல் பஞ்சாங்கம் கணித்தல் போன்றவற்றில் நமது தமிழ் காலக்கணிப்பீட்டு முறையை பயன்படுத்துவதை சிற்சில இடங்களில் காணலாம். ஆனால் சிங்களவரது பயன்பாட்டில் இல்லை. இவை முற்றிலுமாக மறைந்து விட்டன. அல்லது மறைக்கப்பட்டுவிட்டன.
ஆனால் காலத்தால் மறைக்க முற்பட்டாலும் மறைக்க முடியாத சான்றாகவே காலம் காலமாக பழங்காலம் தொட்டு கொண்டாடிவரும் தமிழர் புத்தாண்டு இன்றும் இவர்களின் கொண்டாட்டமாக இருக்கின்றது. இன்றும் இத் தமிழ் ஆண்டுப் பிறப்பை சிங்களவர்கள் தமிழ் சிங்களப் புத்தாண்டு என கொண்டாடி வருகின்றனர்
ஒரு குடும்பத்தில் யாரேனும் ஒருவர் இறந்திருந்தால் அவ்வீட்டார் புத்தாண்டு கொண்டாடுவதில்லை. அவ்வீட்டாரை ‘தீட்டு வீடு’ என்பதுப் போல் சிங்களவர்கள் ‘கிலி கே’ (கிலி – தீட்டு கே – வீடு) என்கின்றனர். அப்பொழுது அயலவர்களும் உறவினர்களும் இவ்வீட்டாருக்கு உணவு மற்றும் தின்பண்டங்கள் வழங்கும் பழக்கமும் சிங்களவர்களிடம் உள்ளது. இதுவும் தமிழர்களிடம் காணப்படும் பழக்கவழக்கங்களில் ஒன்றாகும்.
புத்தாண்டு கலாச்சார மற்றும் விநோத விளையாட்டுக்கள்
புத்தாண்டு கலாச்சார மற்றும் விநோத விளயாட்டுக்கள் எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் நிகழ்வதில்லை. சில இடங்களில் புத்தாண்டு அன்றே நடைப்பெறும். அநேக இடங்களில் தத்தமது வசதிக்கேற்ற நாட்களில் வைத்துக்கொள்வர்.
இவ்வாறு சிங்களப் புத்தாண்டு தமிழரின் கொண்டாட்டங்களில் இருந்து சில வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும் இவை தமிழரின் பண்பாட்டு பழக்கவழக்கங்களில் இருந்தே தோன்றியவை என்பதை எவரும் மறுக்க முடியாது.
அதாவது பாட்டன் பூட்டன் முப்பாட்டன் காலமாக தமிழ் புத்தாண்டையே சிங்களவர்களும் கொண்டாடி வந்த வழக்கின் காரணமாகவே இன்றும் அவர்கள் தமிழ் புத்தாண்டை ‘தமிழ் சிங்களப் புத்தாண்டு’ என கொண்டாடி வருகின்றனர். இது வரலாற்று ரீதியாக தமிழரின் பண்பாடும் பழக்கவழக்கங்களும் இலங்கை தீவெங்கும் வியாபித்து இருந்ததற்கான ஒரு சான்றாகும்.
விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா