தமிழ், முஸ்லிம் மக்களை முரண்பாடுகளுக்கு இடையில் எப்போதும் வைத்திருக்க பெருந்தேசிய சக்திகள் முயற்சித்து கொண்டே இருக்கின்றன, இச்சதி வேலைகளுக்கு இரு சமூகங்களும் இலகுவாக பலியாகி வருவதை நடந்து வருகின்ற சம்பவங்கள் மூலம் கண்கூடாக காண முடிகின்றது என்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும், சுகாதார மற்றும் போஷாக்கு துறை முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம். ரி. ஹசன் அலி தெரிவித்தார்.
இவரின் நிந்தவூர் இல்லத்தில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த தமிழ், முஸ்லிம் புத்திஜீவிகளை நேற்று புதன்கிழமை சந்தித்து பேசியபோதே இவர் இவ்வாறு தெரிவித்தார்.
இவர் இங்கு தெரிவித்தவை வருமாறு:-
தமிழ் மக்களை பகைத்து கொண்டு நிம்மதியாக வாழ கூடிய ஒரு தீர்வை முஸ்லிம்கள் வடகிழக்கில் பெறவே முடியாது. அதே போல முஸ்லிம்களை பகைத்து கொண்டு நிம்மதியாக வாழ கூடிய ஒரு தீர்வை தமிழர்களும் வடகிழக்கில் பெற முடியாது. ஆகவேதான் இரு சமூகங்களையும் எப்போதும் முரண்பாடுகளுக்கு இடையில் வைத்திருக்க பெருந்தேசிய சக்திகள் முயற்சித்து கொண்டே இருக்கின்றன. ஆனால் இரு சமூகங்களும் இவற்றுக்கு இலகுவாக பலியாகி வருவதை கண்கூடாக காண முடிகின்றது.
இந்நாட்டில் தமிழ் தேசியம், முஸ்லிம் தேசியம், சிங்கள தேசியம் என்று மூன்று தேசியங்கள் உள்ளன என்கிற யதார்த்தம் உள்ளபடி ஏற்று கொள்ளப்பட வேண்டும். இம்மூன்று தேசியங்களும் அவற்றின் தனி தனி தேசிய அடையாளங்களுடன் நிம்மதியாக வாழ கூடிய சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும். இதற்கு நிறைய சந்தர்ப்பங்கள் கடந்த காலங்களில் இருந்தும் தவற விடப்பட்டு விட்டன என்றாலும் இதற்கான கட்டமைப்பை இனி மேலாவது உருவாக்க வேண்டும். பல்தேசிய இனங்கள் உலகின் பல நாடுகளிலும் காணப்படுகின்றன. குறிப்பாக யுத்த பீதியற்ற ஐரோப்பிய நாடுகள், இன்னும் சில வளர்முக நாடுகள், அயல் நாடான இந்தியா போன்றவற்றை நாம் முன்னுதாரணங்களாக கொள்ள வேண்டும். எமது நாட்டில் ஏன் மூவினங்களும் நிம்மதியாக வாழ முடியாது? என்பதை நடுநிலையாக சிந்திக்க கூடிய மக்கள் தலைமைகள் இல்லை என்பதே எமது துரதிஷ்டமும், பெருந்துயரமும் ஆகும்.
இவ்வாறு நடுநிலையாக சிந்திக்க கூடிய சிந்தனைவாதிகள் வலுவிழந்து காணப்படுகின்றார்கள். ஊதி பெருப்பிக்கப்பட்ட இனவாத மலையுடன் முட்டி மோத கூடிய அளவுக்கு இவர்களுக்கு தெம்பு இல்லை. அதே நேரம் அரசியல் சக்திகள் அவர்களுடைய வெற்றியை தீர்மானிக்கின்ற ஒரேயொரு பலமாக இனவாதத்தை கையில் பிடித்து வைத்து கொண்டு உக்கிர தாண்டவம் ஆடுகின்றன. இனவாதத்தை அதிகம் கக்குவதில் இவற்றுக்கு இடையில் ஏட்டிக்கு போட்டியான நிலை நின்று நீடித்து நிலைத்து நிற்கின்றது. இதில் இருந்து தலைமைகள் முழுமையாக மீள வேண்டும். இதற்காக பிரச்சினைகள் இல்லாத நாடுகளின் அனுபவங்களை படிப்பினைகளாக கொண்டு செயற்பட வேண்டும். இதற்கான சூழல் தோற்றம் பெற வேண்டுமானால் புத்திஜீவிகள் பலம் பெற வேண்டும், நடுநிலையாளர்கள் வாய் திறக்க வேண்டும்.
எமது நாட்டு மக்களின் பண்பாடு, பாரம்பரியம், கலாசாரம் ஆகியவற்றின் தோற்றுவாய் அயல்நாடான இந்தியாவே என்பதை நாம் யாரும் மறுப்பதற்கு இல்லை. அதே போல உலகிலேயே அதிக இன பிரச்சினை காணப்பட்டு தீர்த்து வைக்கப்பட்ட நாடு தென்னாபிரிக்கா ஆகும். இரு நாடுகளையும் நாம் மிக சிறந்த முன்னுதாரணங்களாக கொள்ள வேண்டி உள்ளது. இவற்றை முன்னுதாரணங்களாக பின்பற்றிய தீர்வை அடைய கடந்த காலங்களில் சந்தர்ப்பங்கள் நிறையவே எமக்கு கிடைத்தன. ஆயினும் சில சக்திகள் இந்தியாவை உதாசீனம் செய்து விட்டு எமது பிராந்தியத்தில் எமது பண்பாடு, பாரம்பரியம், கலாசாரம் ஆகியவற்றோடு எந்தவொரு தொடர்பும் இல்லாத, வித்தியாசமான, விபரீதமான கலாசாரங்களை உடைய நாட்டை இங்கு ஆழ கால் பதிக்க வைக்கின்றனர். இதையும் நாம் எல்லோரும் யோசித்து பார்க்க வேண்டி உள்ளது.
மரண தண்டனை இலங்கையில் நடைமுறைக்கு கொண்டு வரப்படுவதை சில நாடுகள் எதிர்க்கின்றன. இதற்கு அவற்றால் சொல்லப்படுகின்ற காரணம் இலங்கையில் உள்ள உள்நாட்டு நிர்வாக பொறிமுறை சீரானதாக இல்லை என்று அவை சந்தேகிப்பதே ஆகும். 30 வருட யுத்தத்தை நடத்தி விட்டு யுத்த குற்றம் எதுவும் நடக்கவே இல்லை என்று சொன்னால் எப்படித்தான் சந்தேகிக்காமல் இருக்க முடியும்? இலங்கை மீதான சந்தேக கறை போக்கப்பட வேண்டும்.
மூவினங்களுக்கும் இடையில் சமத்துவம் ஏற்படுத்தப்பட வேண்டும். இதற்கு இந்த இனங்களுக்கு இடையில் புரிந்துணர்வு, நல்லிணக்கம், சகோதரத்துவம், சகிப்பு தன்மை, விட்டு கொடுப்பு, ஐக்கியம், சமாதானம், சாந்தி ஏற்பட வேண்டும். எந்தவொரு மதமுமே இதற்கு எதிரான கருத்தை கூறவே இல்லை. எந்தவொரு மதமுமே இன்னுமொரு மதத்தை அடிமையாக வைத்திருக்க சொல்லவில்லை. இந்த யதார்த்தத்தையும், தார்ப்பரியத்தையும் உணராத வரை இந்நாட்டில் மகிழ்ச்சியான எதிர்காலத்தை அனுபவிக்கின்ற சூழல் இந்நாட்டு மக்களுக்கு என்றென்றைக்குமே கிடைக்க மாட்டாது.