தமிழ்-முஸ்லீம் உறவின் அவசியத்தை ஏப்ரல்-21 தாக்குதல் உணர்த்தியுள்ளது! – மண்முனை பிரதேச மக்கள் சந்திப்பில் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிப்பு!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் முஸ்லீம் மக்களின் தன்னிலையை அவர்களுக்கு உணர்த்தியுள்ளதுடன் தமிழ்-முஸ்லீம் மக்களது உறவின் அவசியத்தையும் உணர்த்தியுள்ளதாக மண்முனை பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார்.
மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு தொகுதி மண்முனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட மகிழூர் கண்ணகி புரம் கிராமத்தில் இன்று 20 சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்று ஆற்றிய உரையிலையே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்
மேலும் தெரிவிக்கையில்
கிழக்கு மாகணம் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் தமிழ் மக்களும் முஸ்லீம் மக்களும் பிட்டும் தேங்காய் பூவுமாக இரண்டறக் கலந்து வாழ்ந்து வந்தமை கடந்த கால வரலாறாகும். இலங்கை அரசாங்கத்தின் திட்டமிட்ட நடவடிக்கைகள் காரணமாக இந்த உறவு நிலையில் விரிசல் ஏற்படுத்தப்பட்டது. இதன் பின்னணியில் தமிழர்களை சந்தேக கண்ணோட்டத்தில் அணுகிய முஸ்லீம் மக்களும் தலைவர்களும் சிங்களத் தரப்புடன் நெருக்கமான உறவினை பேணியிருந்தார்கள்.
அந்த வரலாற்றுத்தவறின் விளைவை ஏப்ரல்-21 தாக்குதலின் பின்னர் முஸ்லீம் மக்கள் உணர்ந்துள்ளார்கள். இதன் பின்னர் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. தமிழ் மக்களை பெருமளவில் இனப்படுகொலை செய்து போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போது யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்த முஸ்லீம்கள் வெடி வெடித்துக் கொண்டாடி பால் சோறு உண்டார்கள். ஆனால் ஏப்ரல்-21 தாக்குதலின் பின்னர் முஸ்லீம்கள் பாதிக்கப்பட்ட போது தமிழர்கள் யாரும் அவ்வாறு கொண்டாடி மகிழவில்லை. தமிழ் மக்களும் முஸ்லீம் மக்களும் ஒற்றுமையாக வாழவேண்டியதன் அவசியத்தை இனியாவது முஸ்லீம் மக்களும் தலைவர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும். என கருத்துத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் அரசியல் செயற்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கில் மேற்கொண்டிருக்கும் இரண்டாம் கட்ட கிழக்கு பயணத்தின் முதலாவது நிகழ்வாக மகிழூர் கண்ணகி புரம் பகுதியில் அமைந்துள்ள முன்பள்ளி கட்டடத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்வில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் சோமசுந்தரம், நிர்வாக உப செயலாளரும் கிளிநொச்சி மாவட்ட குழு உறுப்பினருமான ஆலாலசுந்தரம், கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் அன்ரனி கெப்ரியல், ஊடகம் மற்றும் செயற்திட்ட ஆக்கத்திற்கான உப செயலாளர் த.சிற்பரன், இளைஞர் அணி இணைப்பாளர் கிருஸ்ணமீனன், மத்தியகுழு உறுப்பினர் இரா.மயூதரன், கணக்காளர் ராஜாதுரைசிங்கம் ஆகியோர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.