தற்கால தொழினுட்ப வளர்ச்சி ஆக்கிரமிப்பின் மத்தியிலும் பாரம்பரிய கலை கலாசார பண்பாட்டுகளை மறைந்து போகச் இடமளிக்கலாகாது ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் வி. யூசுப்
சமகாலத்தின் தொலைத் தொடர்பு சாதன அதீத தொழினுட்ப வளர்ச்சி ஆக்கிரமிப்பின் மத்தியிலும் பாரம்பரிய கலை கலாசார பண்பாட்டு அம்சங்களை மறைந்து போகச் செய்ய முடியாது என்பதால் அதனைப் பேணிப் பாதுகாக்க அரசாங்கம் பல்வேறு திட்டங்களை அமுல்படுத்தி வருவதாக ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் வி. யூசுப் தெரிவித்தார்.
ஏறாவூர் நகர பிரதேச செயலக கலாசார விழா வாவிக்கரை பிரதேச கலாசார மண்டபத்தி;ல் வெள்ளிக்கிழமை 28.12.2018 மாலை கலாசார உத்தியோகத்தர் அஷ்ஷெய்ஹ் எஸ்.ஏ. நழீம் தலைமையில் இடம்பெற்றது.
ஏறாவூர் நகர் பிரதேச செயலகமும் ஏறாவூர் கலாசாரப் பேரவையினதும் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதேசத்தின் கலை, கலாசார பண்பாட்டுப் பாரம்பரியங்களை உயிர்ப்பிக்கும் கலாசார பாரம்பரிய பண்பாட்டு நிகழ்வுகளும் துறைசார்ந்த கலைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களைக் கௌரவித்துப் பாராட்டும் நிகழ்வகளும் இடம்பெற்றன.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதேசச் செயலாளர் யூசுப், கலை இலக்கிய விழாக்களை நாடு பூராகவும் உள்ள பிரதேச செயலகங்களின் வாயிலாக நடாத்துவதன் மூலம் பிரதேசத்தின் பாரம்பரியங்கள் உயிர்ப்பிக்க்பபடுகின்றன. இதனை அரசாங்கமே முன்னெடுத்து வருவது சிறப்பம்சமாகும். தற்போதைய அதி நவீன தொடர்பாடல் தொழினுட்ப வளர்ச்சியின் மூலம் அந்தந்தப் பிரதேச மக்களுக்கே உரித்தான கலை கலாச்சார பாரம்பரிய பண்பாட்டு அம்சங்கள் மழுங்கடிக்கப்படக் கூடாது, அவைகள் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் அரசாங்கம் அக்கறையாக உள்ளது.அதேவேளை, நவீன இலத்திரனியல் ஊடகங்கள் காணொளிகள் மூலமாக பாரம்பரிய கலை கலாச்சார அம்சங்களை சுமந்து சென்று உலகின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்ப்பிப்பதையும் நாமறிவோம்.
பாரம்பரிய கலை கலாசார பண்பாட்டு அம்சங்களை மறைந்துபோகாமல் பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கும் அதை கொண்டுசெல்ல வேண்டியது அனைவரினதும் கடமையாகும்.
தொழினுட்பங்களோடு ஒன்றிப் போனவர்களாக சம காலத்தில் வாழும் மனித சமூகம் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளது.’ என்றார்.இந்நிகழ்வில் துறைசார்ந்த கலைஞர்களும், ஆர்வலர்களும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.