திடீரென இடம்பெற்ற நிருவாக மாற்றத்தினால் ஏற்பட்டுள்ள குழப்பங்களே பாதீட்டு வேலைத்திட்டங்களின் தாமதத்திற்குக் காரணம்

மாநகரசபையின் நிருவாக மாற்றத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள குழறுபடிகளே எமது சபையினால் முன்மொழியப்பட்டிருந்த 2020ம் ஆண்டு பாதீட்டு செயற்பாடுகள் தாமதடைந்துள்ளமைக்குக் காரணமென மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.

 
மட்டக்களப்பு மாநகரசபையின் 2020ம் ஆண்டுக்குரிய பாதீட்டு வேலைத்திட்டங்களின் தாமதம் தொடர்பில் தெளிவுபடுத்துகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
2020ம் ஆண்டில் மத்திய அரசினால் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த வேலைத்திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து எமது மாநகரசபையூடாக துரித கதியில் அவ்வேலைத் திட்டங்களைச் செயற்படுத்தியிருந்தோம். ஏனெனில் மத்திய அரசாங்கத்தின் நிதியானது குறித்த நடப்பாண்டில் மேற்கொள்ளப்படாவிடின் மீளத் திரும்பிவிடும் என்ற காரணத்தின் நிமித்தம் அச்செயற்பாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருந்தது.
 
இருப்பினும் எமது 2020ம் ஆண்டுக்கான பாதீட்டு செயற்பாடுகளை வருட இறுதியில் செயற்படுத்துவதற்கான திட்டங்களும் வகுத்திருந்தோம். ஆனால் துரதிஸ்டவசமாக அவ்வருட இறுதியில் மாநகரசபையில் நிருவாக மாற்றம் ஏற்பட்டு அனைத்து விடயங்களும் மந்த கதியில் இடம்பெற்றதோடு மாத்திரமல்லாமல் பல தாமதங்களும் இடம்பெற்றன.
 
அதன் விளைவுகளே எமது 2020ம் ஆண்டுக்கான பாதீட்டு வேலைத்திட்டங்கள் காலதாமதமாகின. கடந்த வருடத்தில் கொவிட் நிலைமைகளுக்குள்ளும் நாங்கள் மாநகரசபை நிதியல்லாது வேறு நிதிகள் மூலம் சுமார் 115 வீதிகள், 17 க்கும் மேற்பட்ட கால்வாய்களுக்கான வேலைத்திட்டங்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால் இடம்பெற்ற நிருவாக மாற்றத்தின் பின்னர் கடந்த 09 மாதங்களில் வெறும் 16 வீதிகளுக்கான வேலைத்திட்டங்களே நடைமுறைப்படுத்தப் பட்டிருக்கின்றமையானது மனவருத்தத்திற்குரிய விடயமேயாகும்.
 
மாநகரசபையின் நிருவாக மாற்றத்தின் காணமாக ஏற்பட்டுள்ள குழறுபடிகளே எமது சபையினால் முன்மொழியப்பட்டிருந்த 2020ம் ஆண்டு பாதீட்டு செயற்பாடுகள் தாமதடைந்துள்ளமைக்குக் காரணம். இவைகள் தொடர்பில் மக்கள் தான் விளங்கிக் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Related posts