தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தை எதிர்த்து, பொலிஸாரால் நீதிமன்றில் தொடரப்பட்டுள்ள வழக்கு, இன்று (25) விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில், தாமும் நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளதாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் அறிவித்துள்ளார்.
திலீபன் நினைவு தினத்தை எதிர்த்து, பொலிஸாரால் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளமை குறித்து வினவியபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், திலீபனின் நினைவு தினத்தை எதிர்த்து, பொலிஸார் செய்துள்ள விண்ணப்பம் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாகக் கூறினார்.
இந்த நிகழ்வைத் தடுக்கும் வகையில், பொலிஸார் செய்துள்ள இந்த விண்ணப்பமானது, பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதெனத் தெரிவித்த அவர், இதற்குப் பின்னால் அரசியல் சக்திகள் உள்ளனவா என்று எண்ணத் தோன்றுகின்றதெனவும் குறிப்பிட்டார்.
“காந்தி, அஹிம்சை ரீதியில் போராடி, உண்ணாவிரதம் இருந்தால் தியாகி; திலீபன் உண்ணாவிரதம் இருந்தால், பயங்கரவாதியா?” எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.
அத்துடன், தானும் வேறு சில சட்டத்தரணிகளும், நீதிமன்றத்தில் இன்று முன்னிலையாக உள்ளதாக, அவர் மேலும் கூறினார்.
ஏற்கெனவே, ஜனாதிபதி சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரனும், இவ்வழக்கில் ஆஜராகவுள்ளதாக, ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தார்.