மலையகத்தில் துரோகத்தனமான அரசியலே, முன்னெடுக்கப்பட்டு வருவதாகச் சாடியுள்ள தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சருமான பழனி திகாம்பரம், மலையகம் மாற்றம் காண வேண்டுமெனில், துரோகத்தனமான அரசியலிலிருந்து விடுபட வேண்டுமென்றும் அதற்கு இளைஞர்கள் முன்வர வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின், சர்வதேச மகளிர் தின நிகழ்வு, ஹட்டன் டி.கே.டபிள்யூ கலாசார மண்டபத்தில்,நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், மலையகத்தைச் சேர்ந்த பெண்கள், மகளிர் தினத்தில் கலந்துகொண்டதைப் போன்று, அரசியலிலும் கால் பதித்து, மலையகத்தில் முன்மாதிரியாக விளங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மேலும் அவர், அரசியல் ரீதியாக வழங்கிய பலத்தைப் போன்று, தொழிற்சங்க பலத்தையும் மலையக மக்கள் வழங்கினால், தோட்டத் தொழிலாளர்களது சம்பளப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியும் என்றும் தெரிவித்தார்.
மலையகத்தைச் சேர்ந்த ஒருசில அரசியல்வாதிகள், தாங்கள் சுகபோக வாழ்க்கை வாழ்வதற்காக, மலையகப் பெண்களை, தேயிலைத் தொழிற்றுறைக்குள் அடிமையாக வைத்திருப்பதாகவும் அதனை மாற்றியமைப்பதற்காகவே, தாம் போராடி வருவதாகவும் தெரிவித்ததுடன், பெருந்தோட்டப் பெண்கள், தேயிலைத் தொழிற்றுறையில் எத்தனை வருடங்கள் தொழில்புரிந்தாலும், கம்பனிக்காரர்கள் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை வழங்க போவதில்லை என்றும் சில தொழிற்சங்கங்கள், கம்பனிக்காரர்களுக்குத் துணைபோவதே, இதற்குக் காரணம் என்றும் தெரிவித்தார்.