துறைநீலாவணை விபுலானந்தாவித்தியாலயத்திற்கு அதிபர் ஒருவரை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு -பெற்றோர்கள் கோரிக்கை

 

(சா.நடனசபேசன்)

பட்டிருப்புக் கல்வி வலயத்திற்குட்பட்ட துறைநீலாவணை விபுலானந்தாவித்தியதியாலயத்திற்கு நிரந்தரமாக அதிபர் ஒருவரை  நியமிக்காமல் ஒருவருடமாக இழுத்தடிப்புக்கள் செய்யப்பட்டு வருவதாக  பெற்றோர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இது தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவிக்கையில் இந்தப் பாடசாலையானது 1990 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஒரு ஆரம்பப் பாடசாலையாக இருக்கின்றது இங்கு 92 மாணவர்கள் கல்விகற்பதுடன் 7 ஆசிரியர்கள் கடமையாற்றிவருவதுடன் இப்பாடசாலையில் இறுதியாக பி.நவரெட்ணராசா அவர்கள் அதிபராக கடமையாற்றி ஓய்வுபெற்று சுமார் ஒருவருடம் கடந்தும் இப்பாடசாலைக்கு  ஒரு அதிபரை நியமிப்பதில் இழுத்தடிப்புக்கள் இடம்பெறுவதாக பெற்றோர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

அதேவேளை அதிபர் ஒருவரை நியமிக்குமாறு பெற்றோர்கள் பலதடவைகள் வலயக்கல்விப் பணிப்பாளரைச் சந்தித்தும் இதுவரைக்கும் அதிபர் நியமிக்கபடவில்லை.

அத்தோடு அதிபர் ஒருவர் இல்லாத பாடசாலைக்கு தங்களது பிள்ளைகளை தரம் ஒன்றிற்கு சேர்த்துக் கொள்ளாது வேறுபாடசாலைகளில் இணைத்துக்கொள்ளப்போவதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் இப்பாடசாலையில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டு செல்வதற்கான வாய்ப்பு உருவாகும் நிலை ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

இந்தவிடயம் தொடர்பாக பட்டிருப்பு  வலயக்கல்வி அலுவலகத்தில் கடமையாற்றும் பிரதிக்கல்விப்பணிப்பாளர் ஒருவரிடம் தொடர்புகொண்டு கேட்டபோது.  இந்தப்பாடசாலைக்கு அதிபர் நியமிப்பதற்கான அனைத்து வேலைகளையும் நிறைவுசெய்து மாகாணக்கல்வி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பியிருப்பதாகவும் இதற்கு மேலதிக நடவடிக்கையினை மாகாணக்கல்வியமைச்சின் செயலாளர் மேற்கொள்வார் எனத்தெரிவித்தார்.

எனவே  இந்தப்பாடசாலைக்கு மாணவர்களது நலனைக் கருத்தில் கொண்டு உடனடியாக அதிபர் ஒருவரை நியமிக்க மாகாணக்கல்வி அமைச்சின்செயலாளர் மற்றும் மாகாணக்கல்விப்பணிப்பாளர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பெற்றோர்களும் பொது அமைப்புக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்

Related posts