எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை வெற்றிகரமாக எதிர் கொள்வதற்கான தேர்தல் வியூகம் தேசியக் காங்கிரசின் தலைமைத்துவ சபையினால் கிழக்கு மாகாணமெங்கும் தொடர்ந்தேர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் ஒரு கட்டமாக திருகோணமலை மாவட்டத்தில் கட்சி செயற்பாட்டாளர்களை இணைத்த கட்சியின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் (16) தேசியக் காங்கிரசின் தேசிய அமைப்பாளர் வைத்தியர் வை.எஸ்.எம். ஸியா அவர்களது தலைமையில் கிண்ணியா விசன் கட்டத்த தொகுதியில் இடம் பெற்றது.
இங்கு தேசிய காங்கிரசின் திருகோணமலை மாவட்டத் தலைவரும் உயர்பீட உறுப்பினருமான சட்டத்தரணி சபருள்ளா விசேட உரை நிகழ்த்தினார். தனது உரையில்,
கிழக்கு மாகாணத்தில் சிறுபான்மை மக்களுக்கு அரசியல் ரீதியான தலைமைத்துவம் வழங்கும் முழுத் தகுதியையும் ஏனைய சிறுபான்மைக் கட்சிகளைக் காட்டிலும் தேசிய காங்கிரசே தன்னகத்தே கொண்டுள்ளது. கிழக்கு மாகாண தமிழ் பேசும் உறவுகளின் உணர்வுகளை யதார்த்த பூர்வமாக புரிந்துள்ள தேசிய காங்கிரசின் தேசியத் தலைவர் முன்னாள் அமைச்சர் அல்-ஹாஜ் ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் அவர்களே இவ் அரசியல் தலைமைத்துவத்திற்கு மிகப் பொறுத்தமானவர் என்பதனை அவரது தொடர்ந்தேர்ச்சியான அரசியல் செயற்பாடுகள் பறைசாற்றுகின்றன.
தேசிய ரீதியாக ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றத்தின் பிரதான பங்காளியாக தேசிய காங்கிரஸ் காணப்படும் இவ்வேளையில் அதன் அரசியல் நன்மைகளை அடைந்து கொள்ளும் விடயத்தில் திருகோணமலை மாவட்ட மக்கள் பரா முகமாக இருந்துவிட முடியாது என்பதனை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். இது விடயத்தில் எதிர் வரும் பாராளுமன்றத் தேர்தலை மிகத் துள்ளியமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது எமது மாவட்டத்தின் நிலைத்த அபிவிருத்திக்கும் மக்களின் வாழ்க்கைத்தர மேம்பாட்டிற்கும் இன்றியமையாதது.
இதற்கான வழியை திறந்துவிடவே எமது காங்கிரசின் சார்பிலான வேட்பாளராக வைத்தியர் வை.எஸ்.எம். ஸியா அவர்கள் இப் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளார். எனவே, அனைவரும் வைத்தியர் அவர்களது தேர்தல் வெற்றியினை உறுதிப்படுத்துவதில் மிக நிதானமாகச் செயற்பட வேண்டும் என்றார்.
இக்கூட்டத்தில் பேசியவைத்தியர் வை.எஸ்.எம். ஸியா தனது உரையில், வரலாற்றில் சிறுபான்மை மக்கள் அதிகாரமற்ற அரசியல்வாதிகளினால் அடைந்து கொண்ட விடயங்களைக் காட்டிலும் அதிகாரமுள்ள அரசியல்வாதிகளினால் அடைந்து கொண்ட விடயங்களே அதிகம். இது விடயத்தில் தேசிய காங்கிரசின் தேசியத் தலைமை அதிகாரத்துடன் அமைச்சுப் பொறுப்பில் இருந்து பல்வேறான நிலைத்த அபிவிருத்திகளை சிறுபான்மையினர் பரந்து வாழும் கிழக்கெங்கும் செய்துள்ளாது. இதனை எமது மக்கள் இன்று நன்கு உணர்ந்துள்ளனர்.
தற்போதைய அரசியல் சூழ்நிலையில் திருகோணமலை மாவட்டத்தில் தேசிய காங்கிரசின் ஆளும் கட்சியூடாகப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்வதற்கான காலம் கனிந்துள்ளது. எனவே, இதனை நாம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்விடயத்தினை எளிதாக அடைந்து கொள்ளவதற்கு மாவட்டத்தின் கிளைக்குழுக்களை மீள் புனரமைப்புச் செய்யவேண்டிய அவசியமும் எழுந்துள்ளது. எனவே, கட்சியின் மாவட்டத் தலைமையின் கீழ் இதனை முன்னெடுக்க வேண்டிய கடப்பாட்டிற்குள் அனைத்து கிளைக்குழுக்களும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதுவிடயத்தில் கட்சியில் இணையவுள்ள அனைத்து அபிமானிகளையும் தம்முடன் இணைத்துக் கொண்டு புதிய அரசியல் கலாசாரத்தை நோக்கி நகர்வதற்கு அனைத்து ஆதரவாளர்களும் தங்களது முழு ஒத்துழைப்புக்களையும் வழங்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்.
இந்நிகழ்வில் தேசிய காங்கிரசின் திருகோணமலை மாவட்ட செயற்குழு தலைவர், இணைத்த தலைவர், இளைஞர் அமைப்பாளர், கொள்கை பரப்புச் செயலாளர், ஊடக இணைப்பாளர், கிளைக்குழுத் தலைவர்கள், பிரமுகர்கள் , உலமாக்கள், உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.