(சுமன்)
இந்த நாட்டிலே யுத்தம் முடிந்த கையோடு தமிழ் மக்கiளை வாழவைக்கக் கூடிய எந்தச் செயற்பாட்டையும் அரசாங்கம் முன்னெடுக்கவில்லை. அரசாங்கம் தமது பணிகளைச் செய்ய முடியாது தள்ளாடுகின்றது. தேர்தல் ஒன்றின் மூலமாகவே இந்த நாட்டிலே ஜனநாயகத்தை மீளவும் கட்டியெழுப்ப முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.
திருக்கோவில் பிரதேசத்தில் வளைகுடா வானம்பாடிகள் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
போராட்ட காலத்திலே எமது கல்வி வளம் திட்டமிட்டு சூரையாடப்பட்டது. கல்வியினை மேம்படுத்துவதன் மூலம் எதிர்காலத்தில் எமது சமூகத்தை வளமுள்ள சமூகமாக உருவாக்க முடியும். கல்வி, விளையாட்டு, ஒழுக்க விழுமியங்களோடு சேர்ந்ததாக எமது சமூகம் வளர்க்கப்பட வேண்டும்.
இந்தப் பிரதேசத்திலே இல்மனைட் அகழ்வு விடயம் தொடர்பில் சுமார் ஏழு வருடங்களுக்கு மேலாக இதற்கு எதிரான நடவடிக்கைளை நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம். இது தொடர்பில் ஜனாதிபதி உள்ளிட்ட அமைச்சருடனும் கலந்துரையாடியதன் பேரில் இவ்விடயம் இடம்பெறமாட்டது என்ற கருத்தினையும் அவர்கள் கூறியிருக்கின்றார்கள். அதேபோன்று எமது மக்களுக்குப் பாதகம் விளைவிக்கும் செயற்பாடுகள் எவை முன்னெடுக்கப்பட்டாலும் அதனைத் தடுப்பதற்கு நாங்கள் முழுமூச்சாகச் செயற்படுவோம்.
யுத்தம் முடிவுற்றிருக்கின்ற நிலையில் தமிழர்களின் நில அபகரிப்பு விடயம் மிக மோசமாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த அரசாங்கம் தங்களின் நிருவாக ரீதியான செயற்பாடுகளை முன்வைத்து அரச படைகளோடு குறிப்பாக கிழக்கு மாகாணத்திலே எங்களது தொன்மையான பூர்வீகமான இடங்களைக் குறிவைத்து அந்த இடங்களையெல்லாம் கபளீகரம் செய்கின்ற செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.
அரசுடன் இணைந்து ஆட்சி செய்யலாம் என்று சொல்லுகின்ற கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள் இந்த விடயங்களிலே எந்தளவிற்குக் கவனம் செலுத்திகின்றார்களோ தெரியவில்லை. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகவும் தெளிவாக இந்த விடயங்களிலே அரசுக்கு எதிர்ப்பினை வெளியிட்டு எமது பிரதேசங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.
கடந்த காலங்களில் எமது மக்கள் திசைமாறிச் சென்றிருந்தாலும் எதிர்காலத்தில் அவ்வாறான விதத்தில் நடந்து கொள்ளாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலப்படுத்த வேண்டும். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினைப் பலப்படுத்தவதன் ஊடாகவே தமிழ் மக்களின் இருப்பினைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
இந்த நாட்டிலே யுத்தம் முடிந்த கையோடு தமிழ் மக்கiளை வாழவைக்கக் கூடிய எந்தச் செயற்பாட்டையும் இந்த அரசாங்கம் முன்னெடுக்கவில்லை. மாகாணசபைத் தேர்தல்கள் இடம்பெறாமல் இழுத்தடிப்புச் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதுமாத்திரமல்லாமல் உள்ளுராட்சி மன்றங்களின் காலமும் முடிவுற்றிருக்கின்றது. இந்த நாட்டிலே அரசாங்கம் தமது பணிகளைச் செய்ய முடியாது தள்ளாடுகின்றது. பாராளுமன்றத்திலும் பல குழறுபடிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இந்த நாட்டு மக்கள் பொதுவான ஒரு தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என்று எதிர்பார்த்திருக்கின்றார்கள். நிச்சயமாக அந்தத் தேர்தல்கள் நடைபெற வேண்டும். அவ்வாறான நிலையில் தான் இந்த நாட்டிலே ஜனநாயகத்தை மீளவும் கட்டியெழுப்ப முடியும். தற்போதும் ராஜபக்ச ஆதரவு அணியின் அரசாங்கமே பாராளுமன்றத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றது. அவர்கள் ஜனாதிபதியின் சீரான இயக்கத்திற்குத் தடையாக இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.
இவ்வாறான விடயங்களைக் கருத்திற் கொண்டு இந்த நாட்டிலே நீண்டகாலமாக நடைபெறாமல் இருக்கின்ற மாகாணசபைத் தேர்தல்கள் நடைபெற வேண்டும். அத்துடன் பாராளுமன்றமும் பலமில்லாத நிலையில் இருப்பதன் காரணமாக அதனையும் கலைத்து பாராளுமன்றத் தேர்தலையும் நடாத்தி உள்ளுராட்சி மன்றத் தேர்தலையும் நடத்த வேண்டியது அரசாங்கத்தின் கடப்பாடாக இருக்கின்றது என்று தெரிவித்தார்.