தொழில் வழிகாட்டல் வாரத்தினை முன்னிட்டு தேசிய ரீதியில் நடைபெற்ற போட்டி நிகழ்வுகளில்
வெற்றி பெற்ற மாணவர்களை கௌரவித்து பரிசில்கள் வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.
நாட்டின் அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்டு, தற்போதைய அரசாங்கத்தின், அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் தேசிய கொள்ளை பிரகடனமாகிய “சுபீட்சத்தின் நோக்கு ” கொள்கைத் திட்டத்தில் தொழிற்படையின் ஆற்றல்கள், திறன்கள் மற்றும்
தொழில்நுட்ப அறிவுமிக்க மனிதவளத்தை வலுவூட்டுகின்ற அடிப்படையில் உலகளாவிய மட்டத்திலான தொழிற்படையை இலங்கையில் உருவாக்கும் நோக்கில் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சின் கீழ், மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களம் தேசிய தொழில் வழிகாட்டல் வாரம் நிகழ்வு கடந்த
ஒக்டோபர் 04 ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 10 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டது.
நாடளாவிய ரீதியாக நடைபெற்ற இந்நிகழ்ச்சி திட்டம் எமது மட்டக்களப்பு மாவட்டத்திலும் covid 19 நிலைமைகளையும் கருத்தில் கொண்டு, நிகழ்நிலை மூலமாக நடைபெற்றிருந்தன.
“நாட்டிற்கு சுமை இல்லாத உழைக்கும் தலைமுறை ” எனும் தொனிப்பொருளில்
“தொழில் வழிகாட்டலை சமூகமயமாக்குதல்” எனும் நோக்கினை அடிப்படையாக
கொண்டு இத் தொழில் வழிகாட்டல் வாரம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. இத் தேசிய தொழில் வழிகாட்டல் வாரத்தினை முன்னிட்டு நடாத்தப்பட்ட பாடசாலை
மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சு, சித்திரம் மற்றும் வினாவிடை போட்டி இத்தோடு 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான கட்டுரை போட்டி என்பன
நடைபெற்றிருந்தன.
இப்போட்டிகளில் பங்குபற்றி தேசிய மட்டத்தில் வெற்றிபெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த சாதனையாளர்களையும், மாவட்ட மட்டத்தில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப்பெற்றவர்களையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வானது
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று
30.11.2021 திகதி நடைபெற்றது.
இதன்போது கட்டுரை, பேச்சு, சித்திரம், வினாவிடை போட்டி மற்றும் 18 வயதிற்கு மேற்பட்ட இளைஞர்கள், பாடசாலை மாணவர்களுக்கிடையிலான கட்டுரைப் போட்டி என்பவற்றில் பங்குபற்றி தேசிய ரீதியில் வெற்றிபெற்ற 3 மாணவர்களும், மாவட்ட மட்டத்தில் வெற்றிபெற்ற மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அடங்கலாக 15 பேரும் இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிதிகளினால் பாராட்டி பணப் பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக இடம்பெற்ற இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்த், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன்,
மாவட்ட செயலக உயரதிகாரிகள், வலயக்கல்விப் பணிப்பாளர்கள், மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் அதிகாரிகள், பாடசாலைகளின் அதிபர்கள், மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் உள்ளிட்ட குறிப்பிட்டளவிலானோர் இதன் போது கலந்துகொண்டிருந்தனர்.