இலங்கையின் வரலாறு கூறும் மகாவம்சம் என்னும் நூலில் நயினாதீவு பற்றிய பல குறிப்புகள் உள்ளன. புத்தர் வாழ்ந்த காலத்தில் இலங்கையில் ஆட்சிபுரிந்த இரண்டு நாக அரசர்களுக்கிடையில் ஒரு மணியாசனத்தின் உரிமை தொடர்பாக ஏற்பட்ட பிணக்கைத் தீர்த்து வைப்பதற்காக அவர் நாகதீபத்துக்கு வந்ததாக மகாவம்சம் கூறுகிறது. இதே பிணக்கு/யுத்தம் ‘மணிபல்லவத்தில்’ இடம்பெற்றது என்று ‘மணிமேகலை’க் காப்பியம் கூறுகின்றது.
நயினாதீவுக்கு முற்காலத்தே பல பெயர்கள் வழங்கப்பட்டனவென்று கருதப்படுகிறது. இத்தலத்திற்கு நாகதிவயின, நாகதீவு அல்லது நாகத்தீவு, நயினார்தீவு, நாகநயினார்தீவு, மணிநாகதீவு, மணிபல்லவத் தீவு, மணித்தீவு, பிராமணத்தீவு, ஹார்லெம் (Haorlem), சம்புத்தீவு, நரித்தீவு, நாகேஸ்வரம், நாகேச்சரம் முதலிய பல பெயர்கள் உள்ளன.
எனினும், இவற்றுட் பல பெயர்கள், வெறும் செவிவழிக் கதைகளின் அடிப்படையில் நயினாதீவுடன் தொடர்புபடுத்தப்படுவனவாகவும் ஆய்வாளர்கள் ஏற்கத்தக்க சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு, இப்பெயர்கள் எக்காலத்திலாவது நயினாதீவைக் குறிப்பதற்கு வழங்கப்பட்டன என்று நிரூபிக்கப்பட முடியாதவையாகவுமே உள்ளன.
இந்த தீவு யாழ்ப்பாணத்திலிருந்து கடல் வழியாக, தென்மேற்குத் திசையில் 23 மைல் தொலைவில் அமைந்துள்ளது. இதற்குக் கிழக்குத் திசையில் புங்குடுதீவும், நேர் வடக்கில் அனலைதீவும் அமைந்துள்ளன.
நயினாதீவிற்கு தரை வழியாக பயணிப்பதற்கான பாதைகள் இல்லை. யாழ்ப்பாணத்தில் இருந்து நயினாதீ செல்வோர் குறிகாட்டுவான் வரை பேருந்தில் சென்று, குறிகாட்டுவானில் இருந்து படகு ஊடாக நயினாதீவிற்கு செல்ல முடியும். நயினாதீவுக்குள் ஒரு உள்ளூர் பேருந்து சேவை உள்ளது.
நயினாதீவு இந்து, பௌத்த, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமயங்களின் வழிபாட்டுத் தலங்களைத் தன்னகத்தே கொண்டே சர்வ சமரசம் நிலவும் இப்புண்ணிய பூமி எதிர்காலத்தில் சர்வசமயிகளின் யாத்திரைத் தலமாகவும் சமயச் சுற்றுலா மையங்களில் ஒன்றாகவும் விளங்குமென்பதும் தெளிவாகத் தெரிகின்றது.