2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியமைத்த சந்தர்ப்பத்தில் ஊடக சுதந்திரத்தை பாதுகாப்பதாக வாக்குறுதி வழங்கப்பட்டது.
எனினும், பல கோடி ரூபா கொடுக்கல் வாங்கல் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் வௌிக்கொணர்ந்தமைக்கு, அரசாங்கத்தின் முக்கிய நிறுவனமொன்றின் செயற்பாட்டு பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள துசித ஹல்லொலுவ என்ற நபர் பதில் வழங்கியுள்ளார்.
அவர் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ள காரணத்தினால், அதை இங்கே பகிர்வதைத் தவிர்க்கின்றோம்.
ஜெயசுதீர் ஜெயராம் என்ற நபர் சில மாதங்களுக்கு முன்னர் சட்டவிரோதமாக ஒரு தொகை வௌிநாட்டு நாணயங்களைக் கொண்டு செல்ல முயற்சித்த போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
எனினும், சிலரின் அழுத்தத்திற்கு அமைய அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த நபருடனான கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வௌிக்கொணர்ந்தமை குறித்தே துசித ஹல்லொலுவ கோபமடைந்துள்ளதாக SL VLOG சுட்டிகாட்டியுள்ளது.
ஊடக சுதந்திரம் தொடர்பில் நாட்டின் தலைவர்கள் அடிக்கடி சுட்டிக்காட்டும் பின்புலத்திலேயே அரசாங்கத்தில் பதவி வகிக்கும் அதிகாரிகள் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் இவ்வாறான சம்பவங்கள் பதிவாகின்றது.
ஊடகவியலாளர் வௌியிட்ட தகவல் தொடர்பில் விளக்கம் அல்லது அது தொடர்பில் சவால் விடுக்கும் தேவை துசித ஹல்லொலுவவிற்கு இருந்திருந்தால், நீதிமன்றம் சென்று செயற்பட்டிருக்கலாம்.
அனுர பிரியதர்ஷன யாப்பா, அமரசிறி தொடங்கொட, டிலான் பெரேரா ஆகியோரின் ஊடக செயலாளராகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஊடகப்பிரிவின் அதிகாரியாகவும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பிரிவின் பிரசார பணிப்பாளராகவும் துசித ஹல்லொலுவ தன்னை அடையாளப்படுத்துகின்றார்.
உரிய ஆவணங்கள் இன்றி ஒரு தடவை மலேசியாவில் தடுத்துவைக்கப்பட்ட அவர், முறையற்ற விதத்தில் பணத்தை நாட்டிற்கு கொண்டுவர முயற்சித்த குற்றச்சாட்டில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பு பிரிவினராலும் தடுக்கப்பட்டார்.
அதிகாரம் அல்லது பதவியில் இருக்கும் பெருமையினால் இவ்வாறான நபர்கள் செயற்படும் விதத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
அரசாங்கத்தில் பதவிகளை வகித்து அரசாங்கத்தின் பங்காளர்களாக தம்மை அடையாளப்படுத்தி ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் இதுபோன்ற செயற்பாடுகளால் சிக்கலை எதிர்நோக்குவது அரசாங்கம் அல்லவா